ஒற்றைப் பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 25, 2022

ஒற்றைப் பத்தி

‘அக்னிஹோத்திரம்!'

மனுதர்மத்தைப்பற்றி திராவிட இயக்கத்தவர்கள் தான் மட்டை ஒன்று கீற்று இரண்டாகக் கிழித்துத் தள்ளுகிறார்கள் என்று எண்ணிடவேண்டாம்.

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் ஆலோசகர் வட்டத்தில் முதல் இடத்தில் இருந்தவரும், நூறு வயதையும் கடந்து சில ஆண்டுகளுக்குமுன் மறைந்தவருமான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் ‘நக்கீரன்' இதழுக்கு அளித்த பேட்டி ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற பெயரில் நூலாக வந்துள்ளதே - அந்நூலில், அந்தப் பூணூல் திருமேனி என்ன சொல்லுகிறார்?

‘‘ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டு விட்டு வந்தார்கள். ஆனால், மநுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.''

‘‘வேதங்களை எல்லோராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வளர்ந்த கர்மாக்களை கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என ‘எளிமை' என்ற பெயரில் செய்யப்பட்டதுதான் மநுதர்மம்.''

‘‘பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை மநு பிளவாக்கியது. கூடவே இவர்களை தாண்டி ‘சூத்திரர்கள்' என்ற பிரிவினரை உருவாக்கி, அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே  ஆக்கியது மநு. பிராமணனுக்குத் தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மநு சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.''

‘‘சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே, சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு, அவனை உதை'' இப்படி போகிறது மநு.

‘‘வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும் என்றும், பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே' வேலை செய்தது.'' என்று சொல்லி இருப்பவர் தந்தை பெரியார் அல்ல; ஆசிரியர் வீரமணியல்ல - மூத்த சங்கராச்சாரியாரின் முக்கிய ஆலோசகரான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்தான். நெற்றியில் நாமம், பூணூல் சகிதமாகக் கடைசிவரை இருந்தவர்தான்.

காஞ்சி சங்கராச்சாரியாருக்காக பாராளுமன்றக் குழுவிடம் தூது போனவர்தான்.

‘துக்ளக்' குருமூர்த்தி கூட்டம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?

மனுநீதியைக் காப்பாற்றப் போகிறதா? தாத்தாச்சாரியாரைக் காப்பாற்றப் போகிறதா?

குருமூர்த்தியே ஓடாதே நில்! பதில் சொல்!!

 -  மயிலாடன்


No comments:

Post a Comment