ஒற்றைப் பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

ஒற்றைப் பத்தி

பிர்மா?

‘‘பிர்மாண்டத்தை உருவாக்கிய பிரம்மாவின் ஒரு நாள் என்பது 864 கோடி ஆண்டுகள். இப்போது அவருக்கு 51 ஆவது வயது நடக்கிறது. இப்போது நடப்பது அவருடைய (864 கோடி ஆண்டுகள் நீண்ட) 52 ஆவது பிறந்த நாள்; அதில் பாதி நாள் (432 கோடி ஆண்டுகள்) முடிந்துவிட்டது. மறுபாதி நாளில் (432 கோடி ஆண்டுகளில்) 38 லட்சம் ஆண்டுகளில் முதல் மூன்று யுகங்கள் முடிந்து, நான்காம் யுகமான கலியுகம் பிறந்து (2022 இல்) 5123 ஆம் ஆண்டு நடக்கிறது. இந்தக் கணக்கின்படி பிர்மாவின் 100 ஆண்டு என்பது 311 லட்சம் கோடி ஆண்டுகள். சுருக்கமாகக் கூறப்பட்டுள்ள இதை விளக்கினால் தலைசுற்றும்'' என்று விபத்தால் எடிட்டரான ஆடிட்டர் குருமூர்த்தி ‘துக்ளக்'கில் (28.9.2022, பக்கம் 9) எழுதுகிறார்.

அந்தோ பரிதாபம் - அவரே தலையைச் சுற்றும் என்று ஒப்புக்கொள்கிறார்.

இதில் ஒன்றைக் கவனிக்கத் தவறக்கூடாது. இந்தப் பிர்மாண்டத்தைப் படைத்த பிர்மா பிறந்தார் என்றும், அவருக்கு வயது 51 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிறப்பு - இறப்பு அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறுவது, இன்னொரு பக்கத்தில் அந்தக் கடவுள் பிறந்தார் - அவருக்கு வயது 51 என்று கூறுவது எவ்வளவுப் பெரிய இமாலய புளுகு!

ஆகக் கடவுள் பிறந்தார் என்றால், அவர் இறந்தார் அல்லது இறப்பார் என்பது சொல்லாமலே விளங்கும்.

அந்தப் பிர்மாவுக்கு உருவத்தையும் படைத்திருக்கிறார்கள். இப்பொழுது அவர் எங்கு இருக்கிறார்? அமெரிக்காவில் இருக்கிறாரா? போர் நடக்கும் உக்ரைனில் இருக்கிறாரா?

அண்ணா சாலைக்கு வந்து புகாரியில் காலை டிபன் சாப்பிட்டாரா? எல்லாம் இறந்த காலமாகவே கடவுளைப்பற்றிப் பேசுகிறார்களே தவிர, நிகழ்காலத்தில், அவர் அன்றாட நடவடிக்கைபற்றி யாரும் சொல்லுவதில்லையே - ஏன்?

உண்மையைச் சொன்னால் அதைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்காது; பொய்யைச் சொன்னால் அதனைக் கடைசிவரை காப்பாற்றுவது கடினம்! அதில் சிக்கித்தான் இந்தப் பார்ப்பனர்கள் விழிபிதுங்கித் தள்ளாடுகிறார்கள்.

 -  மயிலாடன்


No comments:

Post a Comment