‘கலாச்சார தேசியம்' என்கிறது ஆர்.எஸ்.எஸ். அதன் பொருள் பார்ப்பனிய வேதகால கலாச்சாரமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

‘கலாச்சார தேசியம்' என்கிறது ஆர்.எஸ்.எஸ். அதன் பொருள் பார்ப்பனிய வேதகால கலாச்சாரமே!

திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் 

ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மய்ய செயலாளர் மு.செந்திலதிபன்

திருவாரூர், செப்.28 ஆர்.எஸ்.எஸின் தேசியம் என்பது பார்ப்பனிய வேத கால கலாச்சாரமே  என்றார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் மு.செந்திலதிபன்.

கடந்த 4.9.2022 அன்று திருவாரூரில் திராவிடர் கழகத்தின் சனாதன எதிர்ப்பு ‘திராவிட மாடல்' ஆட்சி விளக்க மாநாட்டில் ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் மு.செந்திலதிபன் ஆற்றிய உரை வருமாறு:

சனாதன எதிர்ப்பு - ‘திராவிட மாடல்' ஆட்சி விளக்க மாநாடு எழுச்சியும், உணர்ச்சியும் பொங்க திருவாரூர் மண்ணில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

தலைவர் கலைஞர் தனது 14 வயதில் ‘ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழை நாடு, இதுவல்லவே” என்று வில்-புலி-கயல் கொடி ஏந்தி வீர முழக்கம் செய்த மண் திருவாரூர்.

இந்த திருவாரூருக்கு அருகில் உள்ள ‘செல்வபுரம்’ சிற்றூர் திராவிட இயக்கத்திற்கு வழங்கிய கொடைதான், ‘திராவிட ரத்னம்' சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் அவர் உலவிய மண்ணில்தான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடக்கிறது. இந்தியாவுக்கான பிரிட்டன் அமைச் சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ‘திராவிட ரத்னம்' ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் அந்த பொறுப்பை ஏற்பதற்காக பம்பாய் சென்று, அதன் பிறகு கராச்சியில் இருந்து ‘அனிபால்’ என்ற விமானத்தில் இலண்டன் புறப்பட்டார். ‘அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்கு உள்ளாகி 1940, மார்ச் ஒன்றாம் தேதி ஓமன் கடலில் விழுந்து மூழ்கியது.

ஓமன் கடல் விழுங்கிய எங்கள் திராவிட கோமான் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மறைந்தபோது, தந்தை பெரியார் கண்ணீர் விட்டு கதறினார். 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் பேசிக் கொண்டு இருந்தபோது, ஒரு காங்கிரஸ் உறுப்பினர் குறுக்கிட்டு, பெரியார் என்றால் என்ன பொருள்? என்று கேட்டார். ‘பெரியார் என்றால் மகாத்மா’ என்று பொருள் என பதிலடி தந்தார் பன்னீர் செல்வம் - அத்தகைய மாபெரும் தலைவர் காலடிச் சுவடிகள் பதிந்த திருவாரூரில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடக்கிறது.

பெல்லாரி சிறைவாசம்

1938 இல் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தலைவர் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

நீதிக்கட்சியின் தலைவராக தந்தை பெரியார் தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு பிறகு திருவாரூரில் 1940, ஆகஸ்டு 24, 25 தேதிகளில் நீதிக்கட்சியின் 15 ஆவது மாநில- மாநாடு நடைபெறுகிறது. நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை பெரியார் அவர்கள் ஏற்றுக் கொண்ட பின்னர் அவர் பங்கேற்ற முதல் மாநாடு இங்கு நடை பெற்றது. அந்த மாநாட்டில்தான் தந்தை பெரியார் அவர்கள் ‘திராவிட நாடு திராவிடர்க்கே’ என்ற முழக் கத்தை எழுப்பினார்.

அத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருவாரூரில் சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு நடத்துகின்ற தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தின் சார்பில், திராவிட இயக்கப் போர்வாள், எங்கள் தலைவர் வைகோ அவர்கள் சார்பில் வாழ்த்துகளை வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன்.

எது சனாதன தர்மம்?

எது சனாதன தர்மம்? தமிழ்நாட்டின் ஆளுநர் பதவியிலே உட்கார்ந்து இருக்கின்ற ஆர்.என்.ரவி, சனாதன தர்மத்தை போற்றி அகவல் பாடுகிறார். அவர் போய் கலந்து கொள்கின்ற அரசு நிகழ்ச்சிகளில் எல்லாம் சனாதன தர்மத்துக்கு வக்காலத்து வாங்குகிறார். இந்தியா முழுவதும் சனாதன தர்மம் ஒரே பண்பாடாக இருக் கிறதாம்? அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பதவி ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக மாறிவிட்டார்.

நான் கேட்க விரும்புகிறேன் இந்த திருவாரூர் மண்ணில் இருந்து, எது சனாதன தர்மம்?

இந்தியா முழுவதும் ஒரே பண்பாடு என்று கூப்பாடு போடுகிறார்களே! இந்தியா என்பது ஒரே நாடா? ஒருபோதும் இல்லை அதைத்தான் இந்த மண்ணில் இருந்து 1940 ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் கேட்டார்.

குடியரசு மேனாள் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி அவர்கள், குடியரசுத் தலைவர் பொறுப்பிலே இருந்த போது சொன்னார், ‘‘இந்தியா என்ற இந்த நாட்டை உருவாக்கியது வெள்ளைக்காரன் வெள்ளைக்காரர்களின் துப்பாக்கித் தோட்டாவும், குண்டாந்தடியும் இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கியது'' என்று அவர் சொன்னார்.

நாடாளுமன்றத்திலே பேரறிஞர் அண்ணா அவர்கள், 1962, ஏப்ரல் 2 ஆம் தேதி அவர் முதல் பேச்சு - கன்னிப் பேச்சை நிகழ்த்துகின்றபோது, அவைத்தலைவர் பொறுப்பிலே இருந்தவர், குடியரசுத் துணைத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவரைப் பார்த்து அண்ணா அவர்கள் கேட்டார்கள்; ‘‘அவைத் தலைவர் அவர்களே, இந்தியா ஒரே நாடு ஒரே பண்பாடுதான் இங்கு இருக்கிறது என்று கூறிய தாங்கள் அதற்கு உதாரணம் சொல்லி இருக்கிறீர்கள் இந்தியா முழுவதும் ராமனையும், கிருஷ்ணனையும் வழிபடுகின்ற காரணத்தினால் இந்தியா ஒரே நாடு என்று நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்!

ஆனால் அவைத்தலைவர் அவர்களே, அய்ரோப்பா கண்டம் முழுவதும் ஏசு கிறிஸ்துவை வழிபடுகிறார்கள். அங்கெல்லாம் தனித்தனி நாடுகளாக இருக்கின்றன ஒரே நாடாக இருக்கவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்'' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்.

ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் ஒரே கலாச்சாரம் ஒரே கல்வி ஒரே ரேசன் அட்டை என்று இந்த நாட்டை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்குத் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் பல்வேறு தேசிய இனங்கள் பன்முக கலாச்சாரம் பல மொழிகள் இதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொண்டதே கிடையாது.

மொழிவாரி மாநிலத்துக்கு 

ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு

1956 ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வால்கர் எதிர்ப்பு தெரிவித்தார்.

“நாமெல்லாம் ஒரே நாடு ஒரே சமூகம் ஒரே தேசம். எனவே தேசத்தின் விவகாரங்கள் ஒற்றை ஆட்சி முறையின் மூலம் நடத்தப்படுவதே இயல்பானதாகும். தற்போதைய கூட்டாட்சி முறையானது பிரிவினை உணர்வுகளை உருவாக்குகிறது வளர்க்கிறது ஒரு வகையில் இது ஒரே தேசியம் என்கிற உண்மையை மறுக்கிறது. இயல்பிலேயே பிளவுத்தன்மை உடையதாக உள்ளது. எனவே இது சரி செய்யப்பட வேண்டும். அதற்கு அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். ஒற்றை ஆட்சி முறையை அமைப்பதற்கு வழிவகை காண வேண்டும்.”

கோல்வால்கர் கூறியதை செயற்படுத்துவதற்குத்தான் பாஜக அரசு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறது.

இந்து ராஷ்டிரம்

ஒற்றை ஆட்சி என்றால் என்ன? இந்து ராஷ்டிரம். ‘இந்து ராஷ்டிரம்’ என்றால் அது ‘கலாச்சார தேசியம்’ என்று கதைப்பார்கள்.

‘கலாச்சாரத் தேசியம்’ என்றால் அதன் பொருள் என்ன தெரியுமா? ‘பார்ப்பனிய வேதகால கலாச்சாரம்.

இந்து ராஷ்டிரம் என்பது மதச் சிறுபான்மை மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. பல்வேறு தேசிய இனங்களுக்கு எதிரானது பன்முகத் தன்மைக்கு எதிரானது.

இந்தியாவை இந்து ராஷ்டிரம் ஆக்க வேண்டும் - மனுதர்மத்தை இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று சொன்னவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வால்கர்.

இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்கள் தேவையில்லை மாநிலங்களுக்கு தனித்தனி சட்டமன்றங்கள் தேவையில்லை ஒரே நாடு ஒரே நாடாளுமன்றம் என்பதை ஆர்.எஸ்.எஸ். தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

இதைத்தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 2021 நவம்பர் 17 இல் இமாசலப்பிரதேசத்தின் சிம்லா நகரில் நடந்த 82 ஆவது சட்டப் பேரவைத் தலைவர்களின் மாநாட்டில் பிரகடனப்படுத்தினார்.

காணொலி மூலம் அந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, வளங்களைப் பகிர்ந்து கொள்ள ‘ஒரே நாடு ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை’ என்பது எனது கனவு என்று கூறினார். பிரதமர் மோடி குறிப்பிடுவது ஆர்.எஸ்.எஸ்.-இன் திட்டத்தைத்தான் என்பது புரிகிறது.

இந்த ஆண்டு 2022 பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ‘தர்ம சன்சத்’ என்கிற சாமியார் களின் நாடாளுமன்றம் கூடியது. அதில் இந்தியாவை ‘இந்து ராஷ்டிரம் ஆக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அப்போது முன்மொழியப்பட்ட ‘இந்து ராஷ்டிரா அரசமைப்புச் சட்டத்தின்’ முதல் வரைவு அறிக்கையை இந்துமத சாமியார்கள், இந்துத்துவவாதிகள் இறுதி செய்து வருகிறார்கள். 32 பக்க வரைவு அறிக்கை 2023 இல் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் கூடும் அடுத்த தர்ம சன்சத்தில் முன்வைக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

இந்து ராஷ்டிரா அரசமைப்புச் சட்டம்

இந்து ராஷ்டிரா அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து அதை உருவாக்கும் குழுவில் இடம்பெற்று இருக்கும் சங்கராச்சாரியா பரிஷத் தலைவர் சுவாமி ஆனந்த் ஸ்வருப் என்பவர் பேட்டி அளித்து ஏடுகளில் வந்திருக் கிறது.

‘‘இந்து ராஷ்டிரா அரசமைப்புச் சட்டம் 750 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும். பிராயக்ராஜில் 2023 இல் நடைபெற உள்ள மகா கும்பமேளாவில் பாதி வரைவு அறிக்கை வெளியிடப்படும்.

இந்து ராஷ்டிரா அரசியல் அமைப்பில் முஸ்லிம் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை

நாட்டின் தலைநகரம் டில்லி அல்ல வாரணாசிதான் நாட்டின் தலைநகரமாக இருக்கும்.

அங்கே மதங்களின் ‘நாடாளுமன்றம்’ நிர்மாணிக்கப் படும். மதங்களின் நாடாளுமன்றத்திற்கு மொத்தம் 543 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். புதிய ஆட்சிமுறை, ஆங்கிலேயர் காலத்து விதிகள், மற்றும் கட்டுப்பாடுகளை ஒழித்து அனைத்தும் வருணாசிரம முறையின் அடிப்படையில் நடத்தப்படும்.

குருகுல முறை புத்துயிர் பெறும் பண்டைய சமஸ்கிருத வழிப்பட்ட ஆயுர்வேதம், வேத கணிதம், ஜோதிடக்கல்வி கற்பிக்கப்படும்” என்று கூறி உள்ளார்.

சாவர்க்கர், ஹெட்கேவர், கோல்வால்கர் போன்ற இந்துத்துவ பிதாமகன்கள் விதைத்த விஷச்செடி பேராபத்தாக வளர்ந்து வருகிறது.

காலம் காலமாக எந்த மனுதருமத்தை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று திராவிட இயக்கம் போராடி யதோ, அந்த மனுதருமத்தை இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் ஆக்க வேண்டுமாம் எது சனாதன தர்மம்?

12 ஆம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்த அரியலுர் அனிதா மருத்துவக் கனவை சிதைத்து அவளை தூக்கிலே தொங்கவிட்டது சனாதனம்

இந்த நிமிடம் வரையில் நீட் விலக்கு சட்ட மசோதா வுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

நேருக்கு நேர் முதலமைச்சர்

கேரளாவில் தென்மாநிலங்களின் கவுன்சில் கூட்டத்தில் இன்று கலந்து கொண்ட தமிழ்நாடு முதல மைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேருக்கு நேராக வைத்துக் கொண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கும் நீட் விலக்கு சட்டத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று முழங்கி இருக்கிறார்.

சிங்கத்தை அதன் குகைக்குள்ளே சென்று பிடரியைப் பிடித்து உலுக்குகின்ற ஆற்றல் திராவிட இயக்கத் தலைவர்களுக்கு உண்டு என்பதை முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் நிரூபித்து இருக்கிறார்.

இந்தி, சமஸ்கிருதம் திணிப்பதற்கு பெயர் சனாதனம். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு வழங்கப்பட்டபோது அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசு பதில் மனுதாக்கல் செய்தது. அதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கினால் தகுதி, தரம் குறைந்துவிடும் என்று பாஜக அரசு கூறி இருந்ததே, இதற்குப் பெயர்தான் சனாதன தருமம் அதை உடைத்து நொறுக்குவதற்குத்தான் இந்த மாநாடு

திராவிட மாடல் என்றால் என்ன?

நான் குறிப்பிட விரும்புகிறேன் 2021, மே மாதம் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு, இரண்டு சொற்கள் இந்தியாவை உலுக்கியது. குறிப்பாக காவிக் கூட்டத்தை உலுக்கியது. அதில் ஒன்று, ‘இந்திய ஒன்றியம்’ என்ற சொல்’ இந்தச் சொல்லை முதலமைச்சர் பயன்படுத்தத் தொடங்கினார். டில்லி செங்கோட்டை நடுங்கியது

இந்திய ஒன்றியம் என்கிற வார்த்தையை அரசியல் நிர்ணய சபையில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பயன்படுத்தினார். அதே வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்தி வருகிறார்.

இன்னொரு சொல் ‘திராவிட மாடல்.’

‘திராவிட மாடல்’ என்ற வார்த்தை இந்தியாவை மறு நிர்ணயம் செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவும் இந்தியாவை உலுக்கிக் கொண்டு இருக்கிறது.

எது திராவிட மாடல்?

திராவிட மாடலுக்குள்ளே சுயமரியாதைக் கோட்பாடு அடங்கி இருக்கிறது. திராவிட மாடலுக்குள்ளே பொதுவுடைமை சித்தாந்தம் அடங்கி இருக்கிறது. திராவிட சித்தாந்தம் அடங்கி இருக்கிறது. சமூக நீதி உள்ளடங்கி இருக்கிறது.

அருமை தமிழ் பெருமக்களே! ஒன்றை நாம் மறந்து விட முடியாது இந்தியாவினுடைய ஒற்றுமை நிலைக்க வேண்டுமானால் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் உரிய உரிமையை கொடுத்தாக வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் வேண்டும். பொருளாதாரத்தில் உரிய பங்கீட்டை அளித்தாக வேண்டும்

தேசிய இனங்களின் மொழி உரிமை இன உரிமை பண்பாட்டு உரிமை பொருளாதார உரிமை இவை எல்லா வற்றையும் மதித்தால்தான் இந்தியாவின் ஒற்றுமை நிலைக்கும்.

நாடாளுமன்றத்தில் திராவிட இயக்கப் போர்வாள் எங்கள் தலைவர் வைகோ அவர்கள் இந்த நாட்டை ‘இந்திய அய்க்கிய நாடுகள்’ என்று அழைக்கவேண்டும் என்று 2001 ஆம் ஆண்டு ஆகஸ்டு 10 ஆம் தேதி மாநில சுயாட்சிக்கான தனி நபர் தீர்மானம் கொண்டு வந்து பேசியபோது வற்புறுத்தினார்கள்.

ஏனென்றால், பேரறிஞர் அண்ணா சொன்னதைப் போல பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு இந்தியா அதை பாதுகாக்கின்ற கடமை, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழ்நாட்டுக்கு உண்டு.

காவிக்குத் தடை தமிழ்நாட்டில்..

இந்த தமிழ்நாடுதான் காவி சித்தாந்தத்திற்கு தடை போட்டிருக்கின்ற மாநிலம் விந்தியத்திற்கு தெற்கே, தக்காண பீடபூமிக்கு கீழே, ஒருநாளும் காவிக்கொடி இந்த மண்ணிலே பறக்க முடியாது அதை அனுமதிக்கவும் மாட்டோம்

ஏன் தெரியுமா? இந்தியாவிலேயே அதிக எதிர்ப்பு இங்கேதான் அது இந்தியை எதிர்த்த நேரத்திலும் சரி இந்த காவிக்கூட்டத்தை எதிர்க்கின்ற போதும் சரி தமிழினம் போர்க்கோலம் பூண்டு எதிர்ப்பதற்கு என்ன காரணம்?

1925 ஆம் ஆண்டு, நாக்பூரிலே ராஷ்டிரிய சுயம் சேவக் என்ற ஆர்.எஸ்.எஸ். மனுதர்மத்தை நிலைநாட்டு வதற்கு, பார்ப்பனியத்தை நிலைநாட்டுவதற்கு தொடங் கப்பட்டது.

அதே 1925 ஆம் ஆண்டில்தான், தென்னகத்திலே மனுதருமத்தை ஆயிரம் அடி குழி தோண்டி புதைப் பதற்கு, தலைவர் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை இந்த மண்ணிலே தொடங்கினார்.

மனுதரும ஆட்சியை நடத்த வேண்டும் என்ற கோட்பாட்டுடன் ஆர்.எஸ்.எஸ். கரு கொண்ட 1925, அதே ஆண்டில் சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் உரு கொண்டது.

எனவே நீ ஆர்.எஸ்.எஸ்.-அய் தொடங்கிய நேரத்தி லேயே உன் கோட்பாட்டை அழிப்பதற்கு வாளேந்திய கூட்டம் தந்தை பெரியாரின் கூட்டம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

செருப்பை வீசுவார்களாம், இந்துத்துவ காலிகள் நாங்கள் பதிலுக்கு செருப்பை வீச மாட்டோம்

நீ கருத்தை வீசினால் நாங்கள் கருத்தை வீசுவோம் செருப்பை வீசினால், நாங்கள் நெருப்பை வீசுவோம் எச்சரிக்கை செய்கிறோம் நினைவில் வைத்துக் கொள் ளுங்கள்.

-இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல்  ஆய்வு மய்ய செயலாளர் 

மு.செந்திலதிபன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment