ராகுலின் ஒற்றுமைப் பயணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

ராகுலின் ஒற்றுமைப் பயணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி, செப்.8- காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தேசிய கொடி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாக மடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை வழங்கி தொடங்கி வைத்தார். இதற்காக காந்தி மண்டபம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற  நிகழ்ச்சியில் ராகுல் காந்தியுடன் அமர்ந்து பங்கேற்றார். முன்ன தாக, ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி, ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை தெரி வித்தார்.

காந்தி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில்  இருவரும் பங்கேற்றனர். பின்னர், காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து நடைப் பயணத்தை ராகுல் தொடங்கினார். முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ராகுலிடம் வழங்கி நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளின் தலை வர்கள் உடனிருந்தனர். அங்கிருந்து 600 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு திரண்டிருக்கும் தொண்டர் களிடையே உரையாற்றினார்.

கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த நடைப்பயணம், கேரளா, கருநாடகா, தெலங்கானா, மகாராட்டிரா, மத்தியப் பிரதே சம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அரி யானா, டில்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது. மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலை வுக்கு இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப் படுகிறது.

ராகுல் பயணத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

“ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “அன்புச் சகோதரர் ராகுல் காந்தி, இந்தியாவின் பெருமையை மீட்டெடுக்க, நமது குடியரசின் உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க, நாட்டு மக்களை அன்பால் ஒன்றிணைப்பதற்கான பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். சமத் துவத்தின் சின்னமான வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கும் குமரிமுனையைக் காட்டிலும் இந்த இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கப் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது.

மதத்தால் பிளவுபடுத்தலும்,கேடு விளை விக்கும் வெறுப்புப் பரப்புரைகளும் மக்களின் மனங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவை ஆதிக்கத்திலி ருந்து விடுவிக்கும் அரும்பணியை நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பேரி யக்கம் முன்னெடுத்துள்ளது. பெருமைமிகு நமது குடியரசை மீண்டும் கண்டெடுக்கும் தனது நோக்கத்தில் "இந்திய ஒற்றுமைப் பயணம்" வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment