செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 பி.ஜே.பி., திராவிடர் கழகத்தை நேரடியாக தாக்காதது ஏன்? - செய்தியாளர் கேள்வி

தாக்கினால் உடனடியாக பதிலடி கிடைக்கும்: திராவிடர் கழகத் தலைவர்

சென்னை, செப்.8 திராவிடர் கழகத்தை பி.ஜே.பி. நேரடியாகத் தாக்காதது ஏன்? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, தாக்கினால் உடனடியாக பதிலடி கிடைக் கும் என்பதனால்தான் என்று பதில் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். . 

 நேற்றுமுன்தினம் (6.9.2022) சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடை பெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள்

அனைவருக்கும் வணக்கம்.

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இன் றைக்குக் கூட்டப்பட்டு, மாலையில் ‘விடுதலை' சந்தாக்கள் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

இப்பொழுது நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அந்தத் தீர்மானங் களின் நகல் ஊடகச் செய்தியாளர்களான உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் அனைத் துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற விருக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையைப்பற்றியும், அரசியல் தட்பவெட்ப நிலையைப்பற்றியும் மாலையில் மிகத் தெளிவாக விளக்கவிருக்கிறார்கள் - சந்தா வழங் குதல் நிகழ்ச்சியோடு இணைத்து.

சமூகநீதி நாளாக அறிவித்து - இரண்டாம் ஆண்டாகும்!

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு அப்பாற் பட்ட ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை ஊடகவிய லாளர்களோடு மகிழ்ச்சியோடு நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - பெருவிழா - திருவிழா - சமூகநீதி நாளாக சென்ற ஆண்டு நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, இது இரண்டாவது ஆண்டாகும் - இந்நாள்தான் அது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் - செப்.17 இல் - பெரியார் திடலில் அடிக்கல் நாட்டவிருக்கிறார்கள்

மிக முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால், இந்த ஆண்டு, இதே பெரியார் திடலிலே முதலமைச் சர் அவர்கள் சமூகநீதி நாளான தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாளன்று (செப்டம்பர் 17) முதல் நிகழ்ச்சியாக இங்கே நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு, தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட ஒப்புதல் அளித் திருப்பதோடு, காலை 9.30 மணிக்குத் தொடங்கி, 10.30 மணி வரையில் பெரியார் பிறந்த நாள் 144 ஆம் ஆண்டு விழாவும், அதோடு மிகப்பெரிய அளவில் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்காக அரசாங்கத்தினுடைய பல்வேறு துறைகளுடைய ஒப்புதல்கள் எல்லாம் பெறப்பட்டுள்ளது.நம்முடைய மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் அவர்கள், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்கள், செப்டம்பர் 17 நாம் நாளன்று - பெரியார் பிறந்த நாளன்று காலை 9.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அதற்கான அடிக்கல்லை நாட்டவிருக்கிறார்கள்.

அறிவுத் திருவிழாவாகவும், கொள்கைப் பரப்புத் திருவிழாவாகவும் அமையும்!

ஆகவே, இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை உங்க ளோடு பகிர்ந்துகொள்கின்றோம்.

நிகழ்ச்சியில், முதலமைச்சர் அவர்கள் பங்கேற் கிறார், அமைச்சர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். மற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், இயக்கக் குடும்பத்த வர்கள், பெரியார் பற்றாளர்கள் பங்கேற்பார்கள். அந்த விழா ஒரு சிறந்த அறிவுத் திருவிழாவாகவும், கொள்கைப் பரப்புத் திருவிழாவாகவும் அமையும்.

‘விடுதலை'யில் வெளிவந்த அறிக்கையை வரவேற்ற காங்கிரஸ் நண்பர்கள்!

செய்தியாளர்: நாளைகாங்கிரஸ்கட்சியினு டைய மேனாள் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க.வை எதிர்த்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி யிலிருந்து காஷ்மீர்வரை நடைபயணம் மேற்கொள்ளவிருக் கிறார்; அந்த நடை பயணத்தில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்களா?

தமிழர் தலைவர்: திராவிடர் கழகத்தினுடைய நிலைப்பாடு என்னவென்று சொல்லுகின்ற நேரத்தில், சில நாள்களுக்கு முன்பு திராவிடர் கழகம் விடுத்த அறிக்கையை, காங்கிரஸ் நண்பர்கள் வரவேற்றுப் பாராட்டியிருக்கிறார்கள்.

கடந்த 4 ஆம் தேதியன்று, திருவாரூரில் நடை பெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில்கூட, சிறப்பாக காங்கிரஸ் தலைவர்கள் அதனை வரவேற்றுப் பாராட்டியதோடு நன்றியும் சொன்னார்கள்.

ஆனால், என்ன சிக்கல் என்று சொன்னால், திராவிடர் கழகத்துக்கு தொடர் பணிகள் இருக்கின் றன; அடுத்து பெரியார் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் - சந்தா வழங்கும் விழா இருக்கிறது. அழைப்பு எங்களுக்கு இருந்தும்கூட, நேரிடையாக சென்று பங்கேற்கக்கூடிய வாய்ப்பு இப்பொழுது  இல்லை. ஆனால், ஓராண்டு முழுக்க அவர் அந்த நிகழ்வை தொடர்கிறார்.

கொள்கை எதிரிகளை அடையாளம் காணக்கூடியவர் ராகுல் காந்தி

இரண்டு, மூன்று நாள்களில் அந்த நிகழ்வில் பங்கேற்க முடியுமா? என்று எனக்கு அழைப்பு கொடுத்தார்கள். ஆனால், இங்கே இருந்து சென்று, அந்நிகழ்வில்பங்கேற்றுவிட்டுஉடனேதிரும்புவதற் குரிய வாய்ப்பு இல்லாத காரணத்தினால், தொடர் நிகழ்ச்சிகள் இருக்கின்ற காரணத்தினால், நேரிடை யாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாவிட் டாலும்,இந்தியாவில்இன்றைக்குஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., போன்ற அமைப்புகள் மதவாத அரசியல் நடந்துகொண்டிருக்கின்ற நேரத்தில், ஒரு சிறந்த இளைஞர் உலகத் தலைவராகவும், அதே நேரத்தில் கொள்கை எதிரிகளை அடையாளம் காணக் கூடியவராகவும் இருக்கக்கூடிய ஆற்றல்படைத்த அருமையான இளைஞர், போதிய அனுபவத்தோடு பேசக்கூடிய ஒருவர் என்றால், அவர்தான் ராகுல் காந்தி.

எங்களின் அறவழிப்பட்ட ஆதரவும், வாழ்த்தும் என்றைக்கும் உண்டு!

அவர்தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குத் தலைமையேற்கவேண்டும்; அதுதான் பொருத்தமாக இருக்கும் என்று சில நாள்களுக்கு முன்பு ‘விடுதலை' யில் அறிக்கை எழுதியிருக்கின்றோம்.

ஆகவே, ராகுல் காந்தி அவர்களுடைய இந்தப் பயணம் என்பது - பல கட்டங்களாக நடைபெற விருப்பதால், முதல் கட்டத்தில் அதில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பு இல்லாவிட்டாலும்கூட, முழுக்க முழுக்க எங்களின் அறவழிப்பட்ட ஆதர வும், வாழ்த்தும் என்றைக்கும் உண்டு.

கலந்துகொள்ளக்கூடிய சூழல் வருகிறபொழுது, நிச்சயமாக கலந்துகொள்வோம்.

பா.ஜ.க.விற்கு நேர் எதிரான சித்தாந்தம், திராவிட சித்தாந்தம்

செய்தியாளர்: தொடர்ந்து காலங்காலமாக அரசி னுடைய சித்தாந்தத்தையும், பா.ஜ.க.வினுடைய கொள்கையையும் எதிர்த்து வந்த இயக்கம் திராவிடர் கழகம். ஆனால், அண்மைக் காலமாக தி.மு.க - பா.ஜ.க. மோதல்கள்; பா.ஜ.க. - வி.சி.க. மோதல்கள்தான் இருக்கின்றன. ஆனால், பா.ஜ.க.விற்கும், நேரிடை யான திராவிடர் கழக மோதல்களைப் பார்க்கவே முடியவில்லையே!அவர்கள்உங்களுடன்மோது வதற்கு அச்சப்படுகிறார்களா? இதற்கு என்ன காரணம்? உங்களுடைய சித்தாந்தமும், பா.ஜ.க. வின் சித்தாந்தமும் வெவ்வேறு; இரண்டு சித்தாந்தங் களுக்கான போர் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

தமிழர் தலைவர்: உங்களுடைய கேள்வியே சரியான கேள்வி என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நீங்கள் சொன்னதில், ஒரு பகுதி மிக முக்கியமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இரண்டு சித்தாந்தங்கள் நேர் எதிரானவை என்று சொன்னால்,  பா.ஜ.க.விற்கு நேர் எதிரான சித்தாந்தம், திராவிடர் இயக்கம்; திராவிட சித்தாந்தம்.

அந்த சித்தாந்தத்தை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு அடையாளம்தான், மிக முக்கியமாக நேற்று முன்தினம் திருவாரூரில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாடு. அந்த மாநாட்டினை திராவிடர் கழகம்தான் நடத்தியது; அம்மாநாட்டில், தமிழ்நாட்டில் இருக்கின்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களும், கூட்டணிக்கு - கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும்கூட கலந்து கொண்டிருக்கின்றனர்.

நேற்று ‘விடுதலை'யைப் பார்த்தால் உங்களுக்கு நன்றாகப் புரியும். இவ்வளவு பெரிய கூட்டம் - கடந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற வேண்டிய மாநாடு, மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று குறுகிய இடைவெளியில் அறிவிக்கப்பட்டது. அம்மாநாடு எல்லா இடங்களிலும் நடைபெறவேண்டும் என்று சொன்னார்கள். அந்த மாநாட்டிற்கு எல்லா பகுதிகளி லிருந்தும் மக்கள் திரண்டனர். மாலை 5 மணிக்குத் தொடங்கிய அந்த மாநாடு, இரவு 11.15 மணிக்குத்தான் முடிந்தது. மக்கள் கூட்டம் கலையவேயில்லை.

இன்று மாலையில் நடைபெறும் விடுதலை சந்தா அளிப்பு விழா என்பதே எதற்காக என்றால், ‘விடுதலை'க்காக அல்ல.

நீங்கள் சொன்ன அந்த சித்தாந்தப் போர் இப் பொழுது நடந்துகொண்டிருக்கின்றதே, அந்த சித் தாந்தப்போரைமிகத்தெளிவாகஎப்படியெல்லாம் கொண்டு செல்லவேண்டும்; எப்படி எதிர்கொள்ள வேண்டும்; எப்படி மற்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இது.

அதற்குரிய மிகப்பெரிய பிரச்சார இயந்திரம்தான் ‘விடுதலை' சந்தா அளிப்பு விழா.

திராவிடர் கழகத்தைத் தாக்கினால், உடனடியாக பதிலடி கொடுக்கிறோம்

செய்தியாளர்: ஒரு காலகட்டத்தில் எச்.இராஜாவோ, பொன்.இராதாகிருஷ்ணனோ திராவிடர் கழகத்தை எதிர்த்திருக்கிறார்கள்; ஆனால், இன்றைக்கு பா.ஜ.க. வைச் சேர்ந்த யாரும், திராவிடர் கழகத்தைக் குறிப்பிட்டு எதுவும் பேசுவதில்லை; அப்படியென் றால், உங்களுடைய எதிர்ப்பு அவர்களைப் போய்ச் சென்றடையவில்லையா?

தமிழர் தலைவர்: நீங்கள் சொல்வது தவறு. திராவிடர் கழகத்தை எதிர்த்துப் பேசக்கூடிய துணிவும், அவசியமும் அவர்களுக்கு இல்லை. அதற்கு மாறாக அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், அரசியல் ரீதியாக உள்ள கட்சிகளைத் தாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

திராவிடர் கழகத்தைத் தாக்கினால், உடனடியாக பதிலடி கொடுக்கிறோம்.

அவர்களுடைய தலைவர் பேசினார்; உடனே பதிலடி கொடுத்தோம். அதற்குமேல் அவர்கள் வாய் திறப்பதற்கு வாய்ப்பில்லை.

தி.மு.க.வை எதிர்த்தால் என்ன? திராவிடர் கழகத்தை எதிர்த்தால் என்ன? இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கிதான்.

திராவிட மாடல் ஆட்சியை அவர்கள் தாக்கினால் என்ன அர்த்தம் என்றால், திராவிடர் கழகத்தைத் தாக்குகிறார்கள், திராவிடர் கழகத்தினுடைய தத்துவத் தைத் தாக்குகிறார்கள் என்றுதான் அர்த்தம்.

நேரிடையாக திராவிடர் கழகத்தைத் தாக்குவதற்கு அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் திராவிடர் கழகத் திற்குப் பெருமையே தவிர, சிறுமை அல்ல. ஏனென் றால், இது கற்கோட்டை என்று அவர்களுக்குத் தெரியும்.

இரண்டாவது அரசியல் ரீதியாகப் பேசுகிறபொழுது அவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். ஆனால், திராவிடர் கழகம் என்பது ஒரு பொதுமையான அமைப்பு என்கிறபொழுது, அந்தப் பொதுமையான அமைப்பைக் குறை சொல்வதற்கு, அவர்களிடம் சரக்கு கிடையாது. 

ஆகவே, அதற்கு அதுதான் காரணம்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று முதலில் சொன்னதே திராவிடர் கழகம்தான்

செய்தியாளர்: சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் தீர்ப்பை எதிர்த்து திராவிடர் கழகம் விரைவில் வீதியில் இறங்கிப் போராடுவோம் என்று சொன்னீர்களே, உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

தமிழர் தலைவர்: கடந்த முதல் தேதியன்று திராவிடர் கழகம்தான் முதலில் ஆய்வரங்கக் கூட்டத்தை நடத்தியது. இந்தப் பிரச்சினையை ஆரம்பித்ததே திராவிடர் கழகம்தான். தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய 95 ஆம் வயதிலே கூட இதற்காகப் போராட்டக் களத்திலே நின்றார்கள். அன்னை மணியம் மையார் அவர்கள் அதைத் தொடர்ந்தார்கள்.

திராவிட மாடல் ஆட்சி - நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் 14, (2021) ஆம் ஆண்டு போட்ட உத்தரவின் மூலமாக, கொள்கை ரீதியாக அறநிலையப் பாதுகாப்புத் துறை டிரஸ்டிகள் மூலமாக அனைத்து ஜாதிகளிலிருந்தும் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டனர். நியமனங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டு, அந்தத் தீர்ப்பின் இன்னொரு பகுதியில், ஆகமக் கோவில்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்ற பகுதியையும் எதிர்த்து, விளக்கிப் பேசியது திராவிடர் கழகம்தான்.

நீதிமன்றத் தீர்ப்பில் இருக்கிற சிறு ஓட்டைகூட அடைக்கப்படவேண்டும்

அதுமட்டுமல்ல, சட்ட ரீதியாகவும், பொதுமக்கள் மன்றத்திலும் அடுத்த கட்டமாக செய்வதற்கு திராவிடர் கழகம் ஆயத்தமாக இருக்கிறது. திராவிடர் கழகம் மட்டுமல்ல, ஒத்தக் கருத்துள்ள அத்துணைப் பேரும் ஒருங்கிணைந்து அதை செய்யவிருக்கிறார்கள்.

எனவே, அதில் சிறு ஓட்டைகூட இருக்கக்கூடாது. அந்தத் தீர்ப்பில் இருக்கிற சிறு ஓட்டைகூட அடைக்கப்படவேண்டும் என்பதற்கான பரிகாரத்தை திராவிடர் கழகம் அடுத்து முன்னெடுத்து செல்லவி ருக்கிறது. திராவிடர் கழகத்தினுடைய பணி - செப்டம்பர் 17 ஆம் தேதிக்குப் பிறகு அதுதான்.

முதலமைச்சர் எல்லாவற்றிற்கும் பதில் கூறவேண்டுமா?

செய்தியாளர்: தமிழ்நாடு நிதியமைச்சர்மீது செருப்பு வீசினார்கள்; அதை முதலமைச்சர் அவர்கள் கண்டிக்கவில்லையே?

தமிழர் தலைவர்: அந்த சம்பவத்தை எல்லோ ரும் கண்டித்திருக்கிறார்கள். அமைச்சர்கள் கண்டித் திருக்கிறார்கள்; அனைத்துத் தலைவர்களும் கண்டித் திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் முதலமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருக்கவேண்டுமா?

14 ஆண்டுகள் செருப்பைத்தான் கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்

செய்தியாளர்: கருத்து ரீதியாக மோதாமல், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்மீது செருப்பு வீசியிருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: ஏனென்றால், அவர்களுக்குப் பழக்கமானது. 14 ஆண்டுகள் அதைத்தான் கும் பிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த நாட்டை ஆண்ட சிம்மாசனத்தில் அதுதான் இருந்தது. அவர்களுக்கு அடையாளம் அதுதான். ஆகவே, அடையாளத் தின்மீது அவர்களுக்குக் காதலும், மோகமும் ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால், 1944 இல் கடலூரில் பெரியார்மீது செருப்பு வீசியதுண்டு. அவர்கள் செருப்பு வீசினால், நாங்கள் செய்கையின்மூலமாக நெருப்புக் கொள்கையை இந்த நாட்டில் நிலை நாட்டுவோம்.

தலைவராக அந்த இயக்கத்திற்கு இருக்க தகுதி உள்ளவரா?

செய்தியாளர்: அடித்தால் திருப்பி அடிப்போம் என்று தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அதன்மூலமாக அவருடைய தரத்தை உலகிற்குக் காட்டியிருக்கிறார். சட்டம்- ஒழுங்கை நான் கடைப்பிடிக்கமாட்டேன் என்று ஒருவர் சொல்லுகிறார் என்றால், இவர் தலைவராக அந்த கட்சிக்கு இருக்க தகுதி உள்ளவரா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.

ஏனென்றால், அடித்தால் திருப்பி அடிப்பேன் என்று சொல்வதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஆனால், சட்டத்தை  கையில் எடுத்துக்கொள்ள அனுமதி கிடை யாது.

அப்படிப்பட்ட சூழ்நிலைகள் வந்தால், அவருடைய நோக்கம் என்னவென்றால், தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்கவேண்டும்; அந்தக் கலவரத்தின்மூலமாக சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையை உண்டாக்கவேண் டும் என்று அவர்கள் திட்டமிட்டு இதுபோன்ற காரியங்களைச் செய்கிறார்கள்.

அவர்களுடைய வியூகங்களை நன்றாகப் புரிந்து கொண்டு, எதிரிகளை எப்படி, எங்கே சமாளிக்க முடியுமோ, சந்திக்க முடியுமோ அதை செய்ய திராவிட இயக்கமும் சரி, கூட்டணிக் கட்சிகளும் தவறாது.

எல்லாவற்றிற்கும் வாழ்த்துச் சொல்லவேண்டும் என்பது இல்லையே!

செய்தியாளர்: விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக் கூறுங்கள் என்று சொல்லி, தி.மு.க தலைவரை பா.ஜ.க. வினர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால், தி.மு.க. தலைவர்கள்  யாரும் அதற்கு சரியான பதிலை அளிக்கவில்லையே?

தமிழர் தலைவர்: இந்தக் கேள்வியை யாரிடம் கேட்கவேண்டும்; வாழ்த்துச் சொல்லத் தேவையில் லையே, எல்லாவற்றிற்கும் வாழ்த்துச் சொல்லவேண்டும் என்பது அவசியமா?

அண்ணா காலத்து ஆட்சி, கலைஞர் காலத்து ஆட்சி தொடர்கிறது என்று பொருள்.

இதற்குமேலே சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.  இதுபோன்ற கேள்வி கேட்டு, திசை திருப்பு வதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘திராவிட மாடல்' ஆட்சியை, சிறப்பான ஆட் சியை திசை திருப்புவதற்காக அவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் வேறு எந்த ஆட்சியாவது இருக்கிறதா?

செய்தியாளர்: ஆதிதிராவிடர்மீது தாக்குதலில் தமிழ் நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று தேசிய ஆதிதிராவிடர் தலைவர் சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர, இன்றைக்கு அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்து செயல்படக்கூடிய ஆட்சி - இந்தியாவில் வேறு எந்த ஆட்சியாவது இருக்கிறதா?

உத்தரப்பிரதேசத்தைவிட இங்கு அதிகமாக இருக்கிறதா? 

உத்தரப்பிரதேசத்தைவிட இங்கு அதிகமாக இருக் கிறதா? ஆனால், தமிழ்நாட்டில், ஒழுங்கான பதிவுகள் நடக்கின்றன வழக்குகள். மற்ற மாநிலங்களில் பதிவுகள் சரிவர நடப்பதில்லை. ஆகவே, அந்தக் கணக்கைக் காட்டி ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள்.

இங்கே ஆதிதிராவிடர்களாக இருந்தாலும் சரி, மீதி திராவிடர்களாக இருந்தாலும் சரி, எல்லோரும் ஒன்று - சமத்துவம் என்று கொண்டாடித்தான் - ஒருபக்கம் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாள் என்றும் - இன்னொரு பக்கம் அம்பேத்கருடைய பிறந்த நாளை - இதே அரசாங்கம், முதலமைச்சர் அவர்கள் சமத்துவ நாள் என்று கொண்டாடியிருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் யுக்திகளைக் கையாண்டு, பிரித்தாளும் தந்திரத்தைக் கையாளுகிறார்கள்.

இவற்றினால் ‘‘எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது.''

எந்த மதம் மாறினாலும், அது சட்டப் பிரச்சினை

செய்தியாளர்: ஆதிதிராவிடர்கள் வேறு மதம் மாறி னால், அவர்களுக்கான சலுகைகள் கிடைக்காது என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: அந்தப் பிரச்சினை என்பது அம்பேத்கர் காலத்திலிருந்து போராடிக் கொண்டிருக் கின்ற பிரச்சினை. அந்தப் பிரச்சினையை திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறார்களே தவிர, நிச்சயமாக சீக்கிய மதம் மற்றவற்றிற்குக் கொடுக்கின்ற சலுகையை ஏன் ஆதிதிராவிடர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பது சட்டம் முன் இருக்கின்ற பிரச்சினை.

அதற்கு மிகத் தந்திரமாக, இல்லை இல்லை, இந்து மதத்திலே இது ஒரு பிரிவு என்று அவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர - எந்த மதம் மாறினாலும், அது சமூகப் பிரச்சினை. 

எனவே, அவர்களுடைய சமூக நிலைக்காகத்தான் கொடுக்கப்படவேண்டும்.

எனவே, இது ஒரு நீண்ட சட்டப் பிரச்சினையாக இருக்கின்ற காரணத்தினால், சட்ட நிலையிலும் இது குறித்துப் போராடவேண்டும். நீதிமன்றத்திலும் போராட வேண்டும்; வீதிமன்றத்திலும் போராடவேண்டும்.

விளம்பரத்திற்காக வழக்குப் போடக்கூடாது

செய்தியாளர்: அரசமைப்புச் சட்டத்தில் சோசலிஸ்ட், செக்குலர் என்ற வார்த்தையை நீக்கவேண்டும் என்று சொல்லி சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறாரே?

தமிழர் தலைவர்: முதலில் அவர் தடை கேட்டார்; நீதிமன்றம் தடை கொடுக்கவில்லை. அதை ஏன் மறந்துவிட்டீர்கள்?

எதற்கு வழக்குப் போடவேண்டுமோ, அதற்குத்தான் வழக்குப் போடவேண்டும். விளம்பரத்திற்காக வழக்குப் போடக்கூடாது.

ஏனென்றால், உயிரோடு இருக்கிறேன் என்று காட்டிக் கொள்ளவேண்டிய அவசியம் இப்பொழுது அவருக்கு இருக்கிறது. அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியாது.

அதுபோன்ற அவசியம் எங்களுக்குக் கிடையாது. தேவைப்படும்பொழுது, சட்டப் போராட்டத்தில் நிற்போம். அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

நீதிமன்றமாக இருந்தாலும், வீதிமன்றமாக இருந் தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும், நாங்கள் எங்களுடைய போராட்டத்தை, லட்சிய ரீதியாக, நீங்களே ஆரம்பத்தில் சொன்னதுபோன்று, சித்தாந்த ரீதியாக போராடக் கூடிய இயக்கம். அதைத் தவிர எங்களுக்கு வேறு வேலை கிடையாது.

69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் வருவதற்கு உரிமையாளர் யார்?

செய்தியாளர்: சமூகநீதிக்கான போராட்டத்தில் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை களப்பணி யாற்றி வருகிறீர்கள். ஆனால், உங்களுடைய சமூகப் பணியை, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாரே?

தமிழர் தலைவர்: நாங்கள் ஒவ்வொருவருடைய வீட்டுக் கதவைத் தட்டிக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? தேவையில்லை.

ஒவ்வொருவர் வீட்டுக் கதவைத் தட்டி, நாங்கள் சமூகநீதிக்குப் போராடுகிறோம் - வெற்றி பெறுகிறோம் வந்து பாராட்டுங்கள் என்று சொல்கிறோமோ?

யார் பாராட்டினால் என்ன? யார் பாராட்டவில்லை என்றால் என்ன? உலக சரித்திரத்திற்குத் தெரியும்.

பாராட்டுக்காக நாங்கள் எதையும் செய்யவில்லை; 69 சதவிகித பாதுகாப்புக்கான சட்டத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரியுமே!

இன்றைக்கு எல்லோரும் அனுபவிக்கிறார்கள். அதிலிருந்துதான் உட்பிரிவு  வரை அனுபவிக்கிறார்கள்.  அன்றைக்கு ஆதரவு கொடுத்தார்களா, இல்லையா என்று அவரவர் நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளட்டும்!

திராவிடர் கழகம் என்ன செய்தது என்பது வர லாற்றுப் பதிவு. எனவே, வரலாற்றுப் பதிவுதான் முக் கியமே தவிர, சிலருடைய பாராட்டோ, விளம்பரமோ, எதிர்ப்புப்பற்றியோ எங்களுக்குக் கவலையில்லை.

எங்களுக்குத் தத்துவம் வெற்றி பெறவேண்டும்; சமூகநீதி சிம்மாசனத்தில் இருக்கவேண்டும்

எங்களுக்குத் தத்துவம் வெற்றி பெறவேண்டும். சமூகநீதி சிம்மாசனத்தில் இருக்கவேண்டும். கடை கோடியில் பாதிக்கப்பட்டவரும் பயனடைய வேண் டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறினார்.


No comments:

Post a Comment