செப்டம்பர் 17 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

செப்டம்பர் 17

தமிழர்களால் மறக்கப்படவே முடியாத நாள்! அதனால் தான் அறிஞர் அண்ணா அவர்கள் "தந்தை பெரியார் ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம் - ஒரு திருப்பம்" என்று அரும் பொருள் பொதிந்த அருஞ் சொற்களால் படம் பிடித்துக் காட்டினார்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்திருந்தாலும் தான் கண்ட - கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியாரே என்று உறுதியாகக் கூறினார்.

ஆட்சி அமைக்கும் நிலையில் 18 ஆண்டுக் காலம் உடலால் பிரிந்திருந்த தமது தலைவரைச் சந்திக்க - அவர் இருக்கும் இடம் நோக்கிப் பறந்தார். "வழி காட்டுங்கள் அய்யா - ஆட்சி உங்கள் பாதையில் நடை போடும்!" என்று கேட்டுக் கொண்டார் அண்ணா.

தந்தை பெரியாரும் இடையில் ஏற்பட்ட கோபதாபங்களுக்கு இடம் கொடுக்காமல் -  "நான் கட்சிக்காரனாக இருந்ததில்லை எப்போதும் - கொள்கைக்காரனாகவே இருந்து வந்திருக்கிறேன்" என்று சொன்னாரே, அந்த அடிப்படையில், அண்ணாவின் திராவிட இயக்கச் சித்தாந்த பாட்டையில் ஏறு நடை போட்டபோது மனந்திறந்து பாராட்டினார் - வாழ்த்தினார் - ஆதரவுக் கரத்தையும் நீட்டினார்.

சட்டப் பேரவை உறுப்பினர் திரு. முனு  ஆதி அவர்கள் "வைக்கம் வீரர் பெரியார் அவர்களுக்குத் தியாகிகள் நிலம் கொடுக்க முந்தைய அரசாங்கம் முன் வந்ததா? அப்படி இல்லையென்றால் நம் அரசாங்கமாவது கொடுக்க முன் வருமா என்று அறிய விரும்புகிறேன்!" என்று சட்டப் பேரவையில் கேட்டபோது, முதல் அமைச்சர் அண்ணா அவர்கள்! "இந்த அரசாங்கம் அமைந்த பிறகு - தியாகிகள் நிலம் தான் பெரியார் அவர்களுக்குத் தர வேண்டும் என்பதல்ல, இந்த அமைச்சரவையே அவர்களுக்குத் தரப்பட்ட பரிசுதான்" (20.6.1967) என்றாரே!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தஞ்சையில் அறிவித்தாரே!

"பெரியார்தான் தமிழக அரசு! தமிழக அரசுதான் பெரியார்" (17.9.1969) என்று பிரகடனப்படுத்தினாரே!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தைக் கொண்டு வந்தார் - ஜாதி தீண்டாமை ஒழிப்புக் கொள்கைக்கு வடிவம் கொடுக்கும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நாடெங்கும் உருவாக்கினார்.

அவர் வழி வந்த தளபதி மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரியார் பிறந்த நாளை 'சமூகநீதி நாளாக' அறிவித்து, அந்நாளில் பெரியார் தத்துவத்தை உள்ளடக்கிய உறுதிமொழியை அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்கும் மகத்தான கொள்கை மகுடத்தை தந்தை பெரியாருக்குச் சூட்டினார்.

தந்தை பெரியாரின் சித்தாந்தத்தை மனதிற் கொண்டு "இது திராவிட மாடல் அரசு" என்று பிரகடனப்படுத்தி - அதன் அடிப்படையில் அடிகளை ஆக்கப் பூர்வமாக எடுத்து வைத்து வருகிறார்.

21 இந்திய, உலக மொழிகளில் தந்தை பெரியாரின் படைப்புகளைக் கொண்டு வருவதாக அறிவித்து, அதற்கான ஆக்கப் பூர்வமான செயல்பாட்டில் இறங்கியிருக்கிறது இந்தத் 'திராவிட மாடல்' அரசு.

இந்தியாவில் பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் அவற்றைத் தோற்றுவித்தவரின் மறைவிற்குப் பிறகு அந்த இயக்கங்களும் இயற்கை அடைந்தன.

ஆனால் அதற்கு விதி விலக்கு தந்தை பெரியார்! தத்துவத்தை உருவாக்கியவர் - அதனைப் பரப்பிட ஓர் இயக்கத்தை ஏற்படுத்தினார் - பிரச்சார திட்டங்களை வகுத்து அதற்குத் தானே தலைமையும் ஏற்றார்.

பிரச்சாரம் போராட்டம் என்ற அணுகுமுறைகளை மேற்கொண் டார். அந்தக் களப்பணியில் சிறை செல்வதிலும் முதல்வரிசையில் நின்றார்.

அத்தோடு அவர்தம் செயல்பாடு நின்றுவிடவில்லை. தனக்குப் பிறகும் அவர் உருவாக்கிய கொள்கை மக்களிடம் பரவ இயக்கத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தினார். அறக்கட்டளையை நிறுவினார் - அதற்குரிய தக்காரை அடையாளம் கண்டு அவர்களை நியமனம் செய்தார்.

அவர் எண்ணியபடி எல்லாப் பணிகளும் நடந்து வருகின்றன. அன்னை மணியம்மையாருக்குப் பின், ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் - அய்யா போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் இயக்கம் பீடு நடைபெறுகிறது.

"பெரியார் திடல் காட்டும் வழியே எங்கள் வழி" என்று ஆளும் அரசு பிரகடனப்படுத்தும் அளவுக்குப் பெரியார் நாளும் வெற்றி பெற்று வருகிறார்.

தந்தை பெரியார் இறுதியில் களத்தில் நின்று போராடிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டது. இன்றைய திமுக அரசு.

தந்தை பெரியார் மறைந்து 49 ஆண்டுகள் ஓடி விட்டன; ஆனால் நாளும் தந்தை பெரியார் நாட்டின் அசைவுக்கான மய்யப் புள்ளியாக ஒளி வீசுகிறார். நாடாளுமன்றத்தில் பெரியார் வாழ்க என்ற முழக்கம் கேட்கிறது - திராவிடம் வெல்க என்ற வேட்டுச் சத்தம் கேட்கிறது.

உலகெங்கும் அவர்தம் கொள்கைகள் அலசப்படுகின்றன  = ஆக்கப்பூர்வமாக சிந்திக்கப்படுகின்றன.

பெரியார் உலகமயமாகிறார் - உலகம் பெரியார்மயமாகிறது என்ற வகையில் திராவிடர் கழகத் தலைவரின் தலைமையில் திட்டமிட்ட பாதையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

"மண்டைச் சுரப்பை உலகு தொழும்" என்றார் புரட்சிக் கவிஞர் - இதோ அது நடக்கிறது.

இம்மாதம் கனடா நாட்டில் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் பெரியார் சிந்தனை பரப்பும், உலகச் சிந்தனையாளர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது.

ஆம், பெரியார் கொள்கை வழி வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதனை மேலும் உயர்த்திப் பிடிப்போம்! 

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! 

No comments:

Post a Comment