செப்.17: பழைமைத் தேதிகளைக் கிழிக்கும் கிழக்குச் சூரியன் பிறந்த நாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

செப்.17: பழைமைத் தேதிகளைக் கிழிக்கும் கிழக்குச் சூரியன் பிறந்த நாள்!

- மின்சாரம் -

செப்டம்பர் 17 -

ஏதோ ஒரு தேதியல்ல - நமது அடிமைத் தேதியைக் கிழித்தெறிய வந்த கிழக்குச் சூரியன்.

சூத்திர இழிவின் சூள் பையைச் சுக்கு நூறாக்க வந்த இன வரலாற்றின் சூத்திரம்.

உலகில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? 

கடவுள் நெற்றியில் பிறந்தான் ஒருவன் என்று நெற்றியடியாகப் புளுகிய  சேதியைக் கேள்விப் பட்டதுண்டா?

கடவுளின் காலடியில் பிறந்தான் ஒருவன் - அவன் விபச்சாரி மகன் - அடிமைச் சேவகன் என்று ஆணி அடித்ததுபோல எழுதி வைத்த எத்தர் கூட்டம் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?

அப்படி இழிவுபடுத்தப்பட்டக் கூட்டம் எந்தக் காலத்திலும் திமிர் முறித்து எழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே பக்தி என்னும் மயக்க பிஸ்கட்டைக் கொடுத்துக் கொண்டே இருப்பதும், அந்த அடிமைக் கூட்டம் - இழிவிலேயே ருசியைக் கண்டு இலயித்துக் கொண்டு கிடக்கிறது என்றால், இந்தக் கேவலத்தை என்னவென்று கூறுவது!

பெண்களும், சூத்திரர்களும், வைசியர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள்  என்று பகவான் கிருஷ்ணன் கூறினான் என்று கூட சொல்லமாட்டார்கள் - அருளி னான் என்பார்கள்.

அம்பேத்கர் மொழியில் அந்த முட்டாளான கிருஷ்ணனின் உளறலை கிருஷ்ணோபதேசம் என்று கண்களில் ஒத்திக் கொள்வதையும் நினைத்தால் குமட்டிக் கொண்டு வரவில்லையா?

இந்தப் பிரச்சினையில் தலையிட்டவர்களின் தலைகள் உருண்டு இருக்கின்றன. கடவுள் அவதாரம் என்று அத்தகையவர்களைக் கொன்று தீர்த்தான் என்று கதை கட்டி வைத்துவிட்டனரே!

அதுதானே தீபாவளி, இந்தச் சூட்சமத்தைப் புரிந்து கொள்ளாமல், பாதிக்கப்பட்டவனின் பரம்பரையினர் பண்டிகையாகக் கொண்டாடும் பரிதாபத்தை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

புத்தரையே பொட்டலம் கட்டி விட்டார்கள்; அந்த மார்க்கத்தையே மத அபின் ஊட்டி ‘சுவாகா' செய்து விட்டார்கள். அந்தப் புத்தனையே மகாவிஷ்ணுவின் ‘அவதாரம்' ஆக்கிவிட்டார்கள்.

ஒரே ஒரு மனிதரைத்தான் அசைக்க முடியவில்லை.

ஆனவரைப் பார்த்தார்கள்; அவர்களின் ஆயுதங் களான சாம, பேத, தான, தண்டங்களையெல்லாம் ஏவி ஏவிப் பார்த்தனர்.

அவர் தாடியின் ஒரு சிறு உரோமத்தைக் கூட அசைக்க முடியவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல - அவர் மறைந்த நிலையிலும் அந்தக் கேடுகெட்ட கூட்டத்திற்கு மரண பயமாகவே இருந்து கொண்டுள்ளார்.

அவரின் செதுக்கப்பட்ட சிலையைக் கண்டே சிறுநீர் கழித்து விடுகிறார்கள்.

‘ஏ, அப்பா,  இந்தப் பாவியல்லவா நம்முடைய சுரண்டல் தொழிலுக்கு வேட்டு வைத்து வாண வேடிக்கையை நடத்திக் காட்டியவர்.

சேரியில் கிடந்தவன் எல்லாம் கோட்டு - சூட்டுப் போடுகிறான். பரம்பரைப் பரம்பரையாகக் கூலி வேலை செய்து கிடந்தவன் எல்லாம் முன்னாலும் பின் னாலும் கார்கள் புடைசூழ பவனி வந்துகொண்டுள்ளனர்.

நாமும்தான் கற்ற வித்தை எல்லாம் போட்டுக் காட்டுகிறோம் - பாச்சா பலிக்கவில்லையே!' என்று புலம்பித் தவித்துக் கொண்டுள்ளனர்.

‘‘அந்த மனுஷனின் கொள்கைகளை 21 மொழிகளில் கொண்டு வரப் போகிறார்களாம். அவர் கொள்கையே ஆட்சிப் பீடம் ஏறிவிட்டது. அதற்குத் ‘திராவிட மாடல் ஆட்சி' என்ற நாமகரணம் வேறு! ‘நாசமாப் போக!''' என்று சாபமிடுகிறார்கள். எங்கே போய் முடியுமோ என்று வாயிலும், வயிற்றலும் அடித்துக் கொள்கிறார்கள்.

‘‘ஏதோ பெரியார் உலகமாம் - 30 ஏக்கர் நிலத்தில் பிரமாண்டமான ஏற்பாடாம். 155 அடி உயரத்தில் (பீடத் தோடு) சிலை எழுப்பப் போகிறார்களாம்; ஆய்வகம், பயிலரங்கம், ஆவண காப்பக்கம், புத்தக விற்பனை நிலையம் இன்னோரன்ன அம்சங்கள் எல்லாம் அந்தப் பெரியார் உலகத்தில் அணிவகுக்கப் போகின்றனவாம்!

அவ்வளவுதான், அதைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் படையெடுக்கப் போகிறது. அவரைப்பற்றிய தகவல்களையும், தத்துவங்களையும் தெரிந்துகொள்ள இளைஞர்கள் எத்திசையிலிருந்தும் மொய்க்கப் போகிறார்கள்'' என்று ஆரியக் கூட்டம் புலம்பலோ புலம்பல்! மூச்சு முட்டிக் கிடக்கிறார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால் அந்த மாமனிதர் மனிதத் தன்மையில் யாருக்கும் எதிரியல்லர். மானுடத்துக்கு ஊனம் செய்யும்  மிருகங்களுக்குத்தான் எதிரி.

எனக்கு மானுடப் பற்றைத் தவிர வேறு எந்தப் பற்றும் கிடையாது என்று மனமுருகி மணிக்கணக்கில் பேசிய பெருமழை அவர். எழுதிக் குவித்த எழுகடல் அவர்.

இப்பொழுது உலகெலாம் அவர் பேசு பொருளாகி விட்டார்; எங்கெங்கெலாம் சுரண்டல் நோய்த் தொற்றித் திரிகிறதோ, அங்கெல்லாம் வியாபித்து, அதன் மூலக் கிருமியின் வாலை ஒட்டநறுக்கும் வாள் வீச்சாக வலம் வர ஆரம்பித்துவிட்டார்.

ஆம்! அவர்தான் தந்தை பெரியார். அவரின் பிறந்த நாள்தான் அந்த செப்டம்பர் 17.

அந்நாள் தமிழுலகின் விழாவாகி விட்டது. 

ஈ.வெ.ரா. என்று குழந்தைகளுக்குப் பெயர் சூட்டவும் ஆரம்பித்துவிட்டனர்.

வரும் 17 - அவரது 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் - அந்த நாளினை வரலாறு என்றைக்கும் பேசிக் கொண்டிருக்கும் - ஒரு மாபெரும் பணிக்கான கால்கோள் விழா.

அவருடைய பிறந்த நாளை அரசு சார்பில் சமூகநீதி நாளாக அறிவித்து, அந்த நாளில் அரசு அலுவலர்கள் எல்லாம் உயர் எண்ணங்களால் வடித்து எடுக்கப்பட்ட உறுதிமொழியைக் கூறச் செய்த முதலமைச்சர் - சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திருச்சி சிறுகனூரில் அமைய விருக்கும் பெரியார் உலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு, அந்தக் கடமையை ஆற்ற இருக்கிறார்.

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று காலை 9.30 மணிக்கு அதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற விருக்கிறது.

அய்யாவுக்குப் பின் அவர் தந்த பகுத்தறிவு சுயமரியாதை ஆயுதத்தை முனை மழுங்காமல் மேலும் மேலும் கூர்தீட்டிக் கொள்கைப் போர்  நடத்திக் கொண்டிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கிறார்.

அமைச்சர் பெருமக்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

புத்தெழுச்சிப் பிறக்கப் போகிறது - புறப்பட்டு வாருங்கள் நாட்டோரே!

வர வாய்ப்பு இல்லாதவர்கள் ஆங்காங்கே பட்டிதொட்டி எல்லாம் எழுச்சிக் கோலமாய் நடத்திடுக - தந்தை பெரியார் பட ஊர்வலங்கள், மேள தாளத்துடன் தடபுடலாக நடக்கட்டும்! நடக்கட்டும்!!

எங்கே வரும் பகை -

நமக்கு முன்னால் அவையெலாம் பறந்தோடும் புகை!

இனவுணர்வு கொள்வோம் -

ஈனப் பகையை -

ஈக்கள் கூட்டமாய்

விரட்டித் தள்ளுவோம்!

எக்காள முழக்கம் கேட்கட்டும்! கேட்கட்டும்!!

‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!'

என்ற புரட்சிக்கவிஞரின் பூகம்பப் பூபாளப் பாட்டுப்பாடி, புது புறநானூற்றைப் படைப்போம்! படைப்போம்!!

இது தந்தை பெரியார் பிறந்த நாள் உறுதிமொழி! உறுதிமொழி!!

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!!

No comments:

Post a Comment