தந்தைபெரியார் 144 ஆவது பிறந்த நாள்விழா - சமூக நீதி நாள் : பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் தோழர்கள் உறுதியேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

தந்தைபெரியார் 144 ஆவது பிறந்த நாள்விழா - சமூக நீதி நாள் : பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் தோழர்கள் உறுதியேற்பு


சென்னை,செப்.17- தந்தைபெரியார் 144 ஆவது பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் இன்று (17.9.2022) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் கொண் டாடப்பட்டது. திராவிடர் கழக மாநில, மண்டல, மாவட்டங்களின் பொறுப்பாளர்கள், மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், வழக்குரைஞரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,  பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள், புதுமை இலக்கியத் தென்றல் பொறுப்பாளர்கள், பெரியார் பிஞ்சுகளுடன் கழகக் குடும்பத்தினர் பெருந்திரளாக திரண்டு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் விழாவில் பங்கேற்றனர். 

மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள் பெரியார் திடலிலிருந்து ஊர்வலமாக சென்று பெரியார் ஈ.வெ.ரா. சாலை, அன்னை ஈ.வெ.ரா.மணியம்மை சாலைவரை சென்று அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்து எழுச்சி முழக்கமிட்டனர்.

பெரியார் திடலில் அமையப்பெற்றுள்ள  தந்தை பெரியார் 21அடி முழுஉருவச்சிலை பீடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உறுதி மொழி கூற, அதனைத் தொடர்ந்து அனைவரும் உறுதியேற்றனர்.  அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக வழக்குரை ஞரணித் தலைவர் த.வீரசேகரன், தொழிலாளர் கழக மாநில செயலாளர் சேகர், துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, க.பார்வதி, சி.வெற்றிசெல்வி, திராவிடர் வரலாற்று ஆய்வுமய்ய செய லாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால்,தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், தென்சென்னை, வடசென்னை, சோழிங்கநல்லூர், தாம்பரம் உள்ளிட்ட மாவட்ட கழக பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தந்தைபெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் கழகப்பொறுப்பாளர்கள் ஏற்ற உறுதிமொழி

கடவுள் இல்லை, ஜாதி இல்லை மதமில்லை. மனிதமே உண்டு என்று நூறாண்டுகளுக்கு முன்னால் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்கள் - பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட அத்துணை மக்களுக்கும் உரிமைக்குரலாய், மனித நேய சிந்தனையாளராய் செயல்வடிவம் தந்தோராக திகழ்ந்து, இன்றைக்கும் தத்துவமாய், கொள்கைகளாய், பிற்போக்கு வாதிகளையும், மத வெறியர்களையும், ஜாதி ஆணவக் காரர்களையும் மிரட்டிக்கொண்டு, சிலையாக இருந்தாலும் சீலமாக ஒழுகுவதாலும் என்றைக்கும் அவர் பெரியார், பெரியாருள் பெரியார் என்ற பெருமையை தனக்கான தனித்தன்மையான முத்திரை பதித்த நம்முடைய அறிவு ஆசான் தந்தைபெரியார் அவர்களுடைய 144ஆவது ஆண்டு திருவிழா என்ற பெருவிழவின்போது அவர் வழி நடக்க, அன்னை மணியம்மையார் தலைமையில் நாம் ஏற்ற உறுதிமொழியை இன்று மீண்டும் சூளுரையாக புதுப்பித்துக் கொள்ளுகிறோம்.

அய்யா விட்டுச்சென்ற பணிகளை அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம், செய்து முடிப்போம், செய்து முடிப்போம் என்ற உறுதியை ஏற்று அந்த இலட்சிய பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.

அதற்கான எந்த விலையும் கொடுப்பதற்கு தயங்க மாட்டோம், தயங்கமாட்டோம், ஒதுங்கமாட்டோம், பதுங்க மாட்டோம் என்ற உணர்வோடு என்றைக்கும் அய்யா தந்த அறிவுச்சுடரை நாம் மட்டும் ஏந்தாமல் நமக்குப்பின்னாலே வருகின்ற சந்ததியினரையும் தலைமுறையினரையும் ஏற்கச் செய்ய எந்நாளும் உழைப்போம். எந்நாளும் உழைப்போம்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

பாதுகாப்போம், பாதுகாப்போம் 

பெரியார் விழாவை சமூக நீதி நாளாக பிரகடனப்படுத்திய திராவிட மாடல் ஆட்சியை என்றும் பாதுகாப்போம். இது உறுதி! உறுதி!! உறுதி!!!

-­இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உறுதி மொழி கூற அனைவரும் அவரைத் தொடர்ந்து உறுதிமொழி கூறி சூளுரை ஏற்றனர்.


No comments:

Post a Comment