புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (8) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 2, 2022

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (8)

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (8)

முன்பு சட்டக் கல்லூரியில் படித்த மாணவர் களுக்கென தனி மாணவர் விடுதி (Hostel) கிடையாது. 

சென்னை பிராட்வே சாலையில் 'University Students Club'  - 'யுனிவர்சிட்டி ஸ்டூடெண்ட்ஸ் கிளப்' என்ற அமைப்பு நடத்திய விடுதியில்தான் பெரும்பாலான மாணவர்கள் தங்கிப் படிப்பது வழமை. (சில மாணவர்கள் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் அருகில் இருந்த வெங்கடேசுவரா விடுதியிலும் சேர்ந்து படிப்பார்கள்).

நான் சட்டக்கல்லூரியில் சேர்ந்த ஆண்டில் (1957-59) பிராட்வேயிலிருந்த அந்த விடுதியில்தான் தங்கிப் படித்தேன். முதலாண்டு பெரும்பாலும் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சி  - போராட்டங்கள் இவை களை அன்னையார் உடன் இருந்து பார்க்கும் பணியை அய்யா, சிறைக்குப் போகுமுன் எனக்கு ஆணையாக இட்டதால் அதிலே செலவு செய்தேன்.

(எனக்குப் பதிலாக நண்பர் கோ. சாமிதுரைதான் வருகைப் பதிவை "Proxy- பிராக்சி" கொடுத்தவர்.)

கடைசி ஒரு வாரத்தில் நானே புத்தகங்கள் வாங்கி ஒவ்வொரு பாடத்தையும் படித்துத் தேர்வு எழுதி F.L. என்ற முதலாண்டில் 5 மார்க்குகள் குறைவானதால் ('ஃபெயில்') தோல்வி அடைந்தேன். அதுவும் ஒரு தேவையான அனுபவமே  - வாழ்க்கையில் என்று தேற்றிக் கொண்டு அடுத்தத் தேர்வில் மூன்று - நான்கு மாதங்களில் - வெற்றி பெற்றேன். எனது நண்பர் கோ. சாமிதுரையும் எனக்குத் 'துணையாக' தேர்வு எழுதும் வாய்ப்பு - 'பெயில்' ஆனதால் பெற்றார். இருவரும் வெற்றி பெற்றோம் - அடுத்த கல்வியாண்டில்  B.L.  வகுப்பில் தொடர்ந்தோம்.

அந்த விடுதி மாணவர் தலைவர் தேர்தலுக்கு எங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட கோ. சாமிதுரை அவர்கள் வெற்றி பெற்றார். அவரை'Mess Captain'  - என்று அழைப்பார்கள். விடுதி நிர்வாகம் பெரிதும் மாணவர் தலைவர் மேற்பார்வையில் நடைபெறும் முறை அதனால் உண்டு.

இரண்டாம் ஆண்டு (B.L. வகுப்பு மாணவர்கள்) அந்த விடுதியில் தங்கியிருந்த போது, புரட்சிக் கவிஞர் அவர்கள் பிராட்வே அருகில் உள்ள அவரது புத்தக பதிப்பகங்களான பாரி நிலையம் (திரு. செல்லப்பன் அதன் உரிமையாளர்) - செட்டி நாட்டுக்காரர்களே பெரிதும் பதிப்பகச் செம்மல்கள் அப்போதும் இப்போதும்! வணிகத்தைவிட இயல் பான தமிழ்ப் பற்றே அதற்கு முக்கிய காரணம். 

எங்களுடன் விடுதியில் வந்து ஓரிரு நாள்கள் மகிழ்ச்சியுடன் தங்கி, எங்களது அன்பான வரவேற்பினை - உபசரிப்பினை - உரையாடிப் பெற்று திரும்புவார் நமது புரட்சிக் கவிஞர் அவர்கள். பல நேரங்களில் அவருடன் அவரது மருமகன்களில் ஒருவரும் (தோழர் தண்டபாணி என்று நினைவு) உடன் வருவார். எங்கள் அறைகளில் அவர்களைத் தங்க வைப்போம்.

எங்கள் விடுதியில் புலால் உணவை மிகச் சிறப்புடன் தயார் செய்ய - (இயல்பாகவே சிறப் பான சுவையுடன் கூடியது) தனி ஏற்பாட்டினை Mess Captain' கோ.சாமிதுரை மூலம் நாங்கள் செய்விப்போம்.

புரட்சிக் கவிஞர், விடுதியில் உணவு பரிமாறப்படும் பகுதிக்கே எங்களோடு வந்து அமர்ந்து உண்டு கலந்துரையாடிக் கொண்டே சாப்பிடுவார். இவரது கம்பீரமானத் தோற்றம், மிடுக்கான பார்வை, உரையாடல் கண்டு பிற மாநிலத்திலிருந்து வந்து படிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் விசாரித்துத் தெரிந்து, தனியே அவரிடம் வந்து மரியாதை செலுத்துவர்.

வயதான பெரியவர் சமையல் 'நளன்களில் ஒருவர்! அவருக்குப் பெயரே 'ஆம்லெட் நாயர்' என்பது - அவ்வளவு சுவையாக, விரைவாக அதனை வியந்து சுவைக்கும் வண்ணம் பல ஆண்டுகளாக சமைத்துத் தரும் முதியவர்!

அதையும்  சுவைத்துச் சாப்பிடுவார்!  அருகில் ஓரிரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் பாரி நிலையப் பதிப்பகம். செல்ல 'ரிக்ஷா' ஏற்பாடு செய்ததுண்டு சில நேரங்களில் - கவிஞருக்கு.

அங்கே 'ஒட்டல் கிரசெண்ட்' என்று ஒரு உணவகம் உண்டு.

சுவையான புலால் வகையறாக்கள் கிடைக்கும். அதில் நாங்கள் மாணவ நண்பர்கள் -  என்னுடன் கோ. சாமிதுரை, வேலூர் வழக்குரைஞர் செந்தாமரை முதலியோர் சென்று கூட்டாக அவருக்கு அன்பு 'விருந்து' ஏற்பாடு செய்வோம். 'மூளை வறுவல்' அதன் ஸ்பெஷாலிட்டி அதைச் சுவைத்து சுவைத்துச் சாப்பிடுவார். விடுதியி லிருந்து எங்களுடன் பேசிக் கொண்டே நடந்தே வருவார். இருமருங்கிலும் நடந்து செல்பவர்கள் சிலர் புரட்சிக் கவிஞரை அடையாளம் கண்டு வணக்கம் செலுத்துவர்!

ஓட்டல் கிரசெண்ட்டில் புலால் உணவு சாப்பிடும்போது, வேடிக்கையாகப் பேசுவார் கவிஞர். "'உன் உடம்புலே எது எது வீக்கா இருக்கோ' அதனை ஈடுகட்ட அந்தந்த பாகம் வாங்கி சாப்பிடு, சரியாயிடும்!" என்பார் சிரித்துக் கொண்டே!

எங்களுடன் உணவு  - விருந்து சாப்பிடுவதில் அவருக்கு ஏற்பட்ட அளவற்ற மகிழ்ச்சியில் மாளும் புரட்சிக் கவிஞர் எங்கள் அறையில் எளிமையாய் தங்கி- பழகி, உடன் உண்ணல் முதலியவற்றை நடத்தியது, எங்கள் வாழ்நாளில் நாங்கள் பெற்ற பெருமை மட்டுமல்ல - எல்லையற்ற உரிமையும் கூட.

('யுனிவர்சிட்டி ஸ்டூடெண்ட்ஸ் கிளப்' விடுதி பிராட்வேயில் பழைய  'ஜனசக்தி' அலுவலகம் எதிரில் தான்!) புரட்சிக் கவிஞருக்கு எங்களிடம் அளவற்ற பாசம் உண்டு!


No comments:

Post a Comment