அமெரிக்காவைச் சேர்ந்த பெண் சீடரின் புகார்மீதான வழக்கில் உத்தரவு
பெங்களூரு,ஆக.21- பாலியல் வன்முறை வழக்கில் கருநாடக நீதிமன்றம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந் தாவுக்கு பிணையில் வெளியே வர முடியாத பிடியாணை பிறப்பித்துள்ளது.
கருநாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெண் சீடர் மென்பொறியாளர் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை தங்கியிருந்தார். அப்போது சாமியார் நித்தியானந்தா தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக சம்பந்தப்பட்ட பெண் ராம்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் சாமியார் நித்தியானந்தா கடந்த 2010ஆம் ஆண்டு இமாச்சலபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் பிணையில் வெளியே வந்தார். அதன்பின் வழக்கு விசாரணையின் போது அவர் ஆஜராகாததால் பிணையை ரத்து செய்ய கோரி காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்றுக் கொண்டு சாமியார் நித்தியானந்தாவுக்கு வழங்கப் பட்ட பிணையை நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், வழக்கு ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை உள்ளிட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிந்துள்ளன.
இந்நிலையில் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சாமியார் நித்தியானந்தாவுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் கடந்த 19.8.2022 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா நீதிமன்றத் தில் ஆஜராகாததால் நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும் நித்தியானந்தாவுக்கு பிணையில் வெளியே வர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதை யடுத்து ராம்நகர் காவல்துறையினர் சாமியார் நித்தியானந் தாவை தேடும்பணியில் இறங்கியுள்ளனர். ராம்நகர் நீதிமன்றத்தின் பிடியாணை ஆணையை பிடதியில் உள்ள தியானபீடம் ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சாமியார் நித்தியானந்தா சமூகவலைதளங்களில் தான் கைலாசா தீவில் இருப்பதாக கூறி பல்வேறு காட்சிப் பதிவுகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். ஆனால், கைலாசா எங்கிருக்கிறது என்று இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை. எனவே, சாமியார் நித்தியானந்தாவை எப்படி கைது செய்வது என்பது குறித்து காவல்துறையினர் குழப்பத்தில் உள்ளனர். எனினும், பிடதியில் உள்ள தியானபீட ஆசிர மத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி தகவல்கள் அறிய திட்டமிட்டுள்ளனர்.
நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் அதிகரிப்பு பிரச்சினைகளுக்கு சமரசத் தீர்வு அவசியம்
நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தல்
மும்பை, ஆக.21 நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரித்து வருவதால், பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு காண்பது அவசியம் என உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தி உள்ளார்.
மகாராட்டிர மாநிலம் புனே நகரில் 1923-ஆம் ஆண்டு இந்திய சட்ட சங்கம் (அய்எல்எஸ்) தொடங்கப்பட்டது. இதன் சார்பில் சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், அய்எல்எஸ் நடுவர் மன்றம் மற்றும் சமரச மய்யத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 19.8.2022 அன்று தொடங்கி வைத்தார். பின்னர் தனது தந்தையும் உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதியுமான ஒய்.வி.சந்திரசூட் நினைவுசொற்பொழிவாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் குவிந்து பெரும் சுமையாக மாறி வருவதை நாம் அனைவரும் அறிவோம். பிஆர்எஸ் சட்ட ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், 2010 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை ஆண்டு தோறும் 2.8 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நிலுவை வழக்குகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தாலுகா, மாவட்ட நீதிமன்றங்களில் மட்டும்4.1 கோடிக்கும் அதிகமான வழக்குகளும் உயர் நீதிமன்றங்களில் 59 லட்சம் வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 71 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழ்நிலையில், சமரசம் மூலம் பிரச்சினை களுக்கு தீர்வு காண்பதற்கான நடைமுறை மிகவும் அவசிய மாகிறது. சட்ட நடைமுறைக்கு அப்பாற்பட்டு பிரச்சினை களுக்கு விரைவாக தீர்வு காண இது முக்கிய கருவியாக இருக்கும். உலகம் முழுவதும் சமரச நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இந்திய நாடாளு மன்றத்திலும் ‘சமரச மசோதா 2021’ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள அம்சங்கள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. எனினும், இந்த மசோதா குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித் துள்ள கருத்துகள் சமரச நடை முறை அவசியம் என்பதை வலியுறுத்துகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment