‘விடுதலை' வார ஏடாக ஆகாமல் நாளேடாக நடைபெறுவதற்குக் காரணம் ஆசிரியர் வீரமணி அவர்களே! ஆசிரியர் எழுதி வரும் ''வாழ்வியல் சிந்தனைகள்'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

‘விடுதலை' வார ஏடாக ஆகாமல் நாளேடாக நடைபெறுவதற்குக் காரணம் ஆசிரியர் வீரமணி அவர்களே! ஆசிரியர் எழுதி வரும் ''வாழ்வியல் சிந்தனைகள்''

நம் வாழ்வை செம்மைப்படுத்த உதவிடும் கருவூலம்!

நம்மை நோக்கிவரும் தாக்குதல்களைத் தடுக்கும் ஆயுதம் 'விடுதலை'யே!

மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் கருத்துரை

சென்னை, ஆக.31 நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் ‘விடுதலை' ஆசிரியர் பொறுப்பை மட்டும் ஏற்காமல் இருந்திருந்தால், நாளேடாகத் தொடர்ந்திருக்காது - இதற்காக ஆசிரியருக்கு நாம் மிகவும் கடமைப்பட் டுள்ளோம். நம்மை நோக்கி நேர்முகமாகவும், மறை முகமாகவும் தாக்குதல்கள் வருகின்றன. அவற்றையெல் லாம் முறியடிக்கும் போர் ஆயுதம்தான் ‘விடுதலை' ஏடு என்றார் ‘விடுதலை' வாசகரும், மேனாள் அமைச்சரும், சீரிய பகுத்தறிவுவாதியும், சுயமரியாதைக்காரரு மான பொன்.முத்துராமலிங்கம் அவர்கள்.

88 ஆண்டு விடுதலையின் 60 ஆண்டுகால ஆசிரியருக்குப் பாராட்டு விழா!

கடந்த 27.8.2022 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடை பெற்ற ‘‘பத்திரிகையாளர்கள் - எழுத்தாளர்கள் பார்வை யில் 60 ஆண்டுகால ஆசிரியர் மானமிகு கி.வீரமணி; 88 ஆண்டு ‘விடுதலை'யின் 60 ஆண்டு ஆசிரியருக்குப் பாராட்டு விழா’’வில் ‘விடுதலை’ வாசகரும், மேனாள் அமைச்சரும், சீரிய பகுத்தறிவுவாதியும், சுயமரியாதைக் காரருமான பொன்.முத்துராமலிங்கம்  அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

இந்த மகிழ்ச்சியான பாராட்டு விழாவினுடைய தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

வரவேற்புரை வழங்கிய மானமிகு குமரேசன் அவர்களே, விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிய நாட்டு நிலவரங்களை எடுத்து விளக்கிய, நம்முடைய ஆசிரியரோடு நீண்ட காலமாகப் பழகிய நாட்களை நினைவுபடுத்தி மேடையில் அமர்ந்திருக்கின்ற சான் றோர்களே, நன்றியுரை நவில இருக்கின்ற மானமிகு சிறீதர் அவர்களே,

விழாவினுடைய கதாநாயகர், வாழ்த்துக்கும், போற்றுதலுக்கும் 

உரிய ஆசிரியர்

வருகை தந்திருக்கின்ற சான்றோர்களே, சகோதரி களே, ஏற்புரை வழங்கவிருக்கின்ற இந்த விழாவினுடைய கதாநாயகர், வாழ்த்துக்கும், போற்றுதலுக்கும் உரிய ஆசிரியர் அவர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய தினம், நம்முடைய ஆசிரியர் அவர்களு டைய 60 ஆண்டுகால ஆசிரியர் பணியினைப் பாராட்டுகின்ற அடிப்படையில் இந்தப் பாராட்டு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

என்னைப் பொறுத்தமட்டில், எனக்கு இது தாய்வீடு. எனக்கு மட்டுமல்ல, திராவிட இன உணர்வாளர்கள் அனைவருக்கும் இது தாய்வீடுதான்.

பகுத்தறிவுச் சிந்தனைகளை உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற 

ஒரு தொலைநோக்கு நிறுவனம்

தாய்வீடு மட்டுமல்ல, இது ஒரு திறந்தவெளி பல்கலைக் கழகம். அதுமட்டுமல்ல, பகுத்தறிவு ஒளியை மனித குல பயணத்திற்கு சரியான வழிகாட்டக் கூடிய கலங்கரை விளக்கமாக இன்றைக்குப் பகுத்தறிவுச் சிந்தனைகளை உலகம் முழுவதும் பரப்பிக் கொண் டிருக்கின்ற ஒரு தொலைநோக்கு நிறுவனம்.

இந்த நிறுவனத்திலே எனக்குப் பாராட்டுரை வழங்கு வதற்காக, வழங்கிய வாய்ப்பை என் வாழ்நாளிலே எனக்குக் கிடைத்த பெருமகிழ்வாக, மகிழ்ச்சியடைந்து என்னுடைய உரையினைத் தொடங்க விரும்புகிறேன்.

நம்முடைய ஆசிரியர் அவர்கள் - அய்யாவினுடைய பாராட்டுதலையும் பெற்றவர்

நம்முடைய ஆசிரியர் அவர்களுக்குப் பாராட்டு - 88 ஆண்டுகாலம் ‘விடுதலை' நாளிதழு னுடைய வயது என்றால், அதில் 60 ஆண்டுகாலம் நம்முடைய ஆசிரியர் அவர்கள் பணியாற்றி, அய்யாவினுடைய பாராட்டுதலையும் பெற்றவர்.

எனக்கு முன்பு உரையாற்றிய நம்முடைய மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, அய்யா அவர்கள், ஆசிரியர் அவர்களுடைய தலையங்கத்திற்கு எந்தவிதமான மாறுபட்ட கருத்தையும் எப்பொழுதும் தெரிவித்ததில்லை என்று குறிப்பிட்டார்கள்.

அதுவும் 60 ஆண்டுகால வரலாற்றில், அதுவும் அய்யாவிடமிருந்து எந்தவிதமான விமர்சனத்தையும், எதிர் விமர்சனத்தையும் ஆசிரியர் பெற்றதில்லை என்பதே ஒரு வரலாறு.

அதுமட்டுமல்ல, ஆசிரியரை தந்தை பெரியார் அவர்கள் எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்பதில், நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

அந்தக் குறிப்பு, அழைப்பிதழில் போடப்பட்டு இருக்கிறது.

எம்.ஏ., பி.எல்.  படித்துவிட்டு, வழக்குரைஞர் தொழி லில் ஈடுபட்டு, ஊதியம் ஈட்டிக் கொண்டிருக்கின்ற அந்தக் காலகட்டத்தில், அவருடைய குடும்பப் பின்னணி என்பது ஒரு சாதாரண ஏழைக் குடும்பம்.

ஏழைக் குடும்பத்திலிருந்து எம்.ஏ., பி.எல்., படித்து விட்டு, பணியாற்றக் கூடிய ஒருவருக்கு, வருவாயை நோக்கித்தான் அவருடைய சிந்தனை, எண்ணம் எப்பொழுதும் இருக்கும்.

‘விடுதலை’க்கு ஆசிரியராக்கி, ‘விடுதலை’ பத்திரிகை நாளிதழ் நிறுத்தப்படுவதைத் தடுத்து, தொடர வைத்தார்!

ஆனால், அவர் பொதுத் தொண்டுக்கு, பொதுவாழ் விற்கு வருவதற்குத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தவுடனேயே, அய்யா அவர்கள், அவருடைய மன ஓட்டத்தை, அவர் பொதுவாழ்விலே வைத்திருக்கின்ற அந்த அக்கறையை எண்ணிப்பார்த்து, அவரை தேர்ந் தெடுத்து, ‘விடுதலை’க்கு ஆசிரியராக்கி, ‘விடுதலை’ பத்திரிகை நாளிதழ் நிறுத்தப்படுவதைத் தடுத்து, தொடர வைத்தார்.

அவரை நம்முடைய அய்யாவின் கருத்துப்படி நடக் கிறாரா? என்பதையும் ஆய்வு செய்தார்.

புதிய அச்சு இயந்திரம் இங்கே நிர்மாணிக்கப் படுகின்றபொழுது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் அந்நிகழ்வில் பங்கு பெற்றார்கள்.

நம்மிடத்திலே பயிற்சி பெற்ற பிள்ளைகள் சரியாகத்தான் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்!

அப்பொழுது ஒரு விருந்து கொடுக்கப்பட்டது. அந்த விருந்திலே பரிமாறப்பட்ட சிற்றுண்டிகள் - முதல் நாள் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் பரிமாறப்பட்ட சிற்றுண்டிகளுடைய மீதத்தை எடுத்து வைத்து, அடுத்த நாள் நடைபெற்ற விருந்தில் பரிமாறியதாக சொன்ன நேரத்தில், அய்யா அவர்கள், நம்மிடத்திலே பயிற்சி பெற்ற பிள்ளைகள் சரியாகத்தான் பயிற்சி பெற்றிருக் கிறார்கள் என்று, அந்த ஆய்வுப் பணியை அய்யா அவர்கள் முடித்துக்கொண்டு, சரியான தேர்வு என்பதை உறுதிப்படுத்தினார்.

அதற்குப் பின், 19.12.1973, அய்யா அவர்கள் மறை வதற்கு சில நாள்களுக்கு முன்பு, தியாகராயர் நகரில் நடைபெற்ற ஜாதி, இன இழிவு ஒழிப்பு - பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகின்றபொழுது, நம்முடைய ஆசிரியர் அவர்கள் மிகச் சிறப்பாக உரையாற்றி யிருக்கிறார்.

அடுத்து பேச வந்த அய்யா அவர்கள், மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில்தான், ஆசிரியர் அவர்களை சரியாகவே தேர்வு செய்திருக்கிறேன் என்று அவர், தம்மைத் தாமே திருப்தி செய்துகொண்டதோடு, எதிர் காலத்திலும் நாம் என்ன நினைக்கிறோமோ, அதை செய்யக்கூடிய ஆற்றலும், திறமையும், மதியூகமும் ஆசிரியருக்கு இருக்கிறது என்பதை அந்தக் கூட்டத் திலே உறுதிப்படுத்துகிறார்.

நான் அஞ்சுகிறேன் என்றார் 

தந்தை பெரியார்!

அய்யா சொல்லுகிறார்,

‘‘ஆசிரியர் வீரமணி அவர்கள் நான் உரையாற்று வதற்கு முன்பு, இந்தக் கூட்டத்திலே உரையாற்றி, ஒரு சரியான உணர்வை மக்களிடத்திலே ஏற்படுத்தி யிருக்கிறார்.

நான் உரையாற்றுவதன்மூலமாக, அந்த உணர்வுக்கு பங்கம் ஏற்பட்டுவிடுமோ, சேதம் ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்'' என்று குறிப்பிடுகிறார்.

இதனுடைய பொருள் என்ன?

ஆசிரியர் அவர்கள், அய்யா அவர்கள் என்ன எண் ணுகிறாரோ, எது நிறைவேற்றப்படவேண்டும் என்று கருதினாரோ, அதை நிச்சயமாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை அன்றைக்கு அவர் பெறுகிறார்.

எனவே, தேர்வு, அதற்குப் பின் அவருடைய சிக் கனத்தைப்பற்றிய ஓர் ஆய்வு - இறுதியாக தியாகராயர் நகர் பொதுக்கூட்டத்தில், தான் பெற்ற, தான் எண்ணிய நம்பிக்கை முழுமை பெற்றுவிட்டது என்கின்ற முடிவுக்கு அய்யா அவர்கள் வந்துதான், ஆசிரியரை முழுமையாக நம்பி, தம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார்.

அய்யாவின் மறு உருவமாகவே, 

தந்தை பெரியாராகவே நான் பார்க்கிறேன்!

அந்த முழுப் பொறுப்பை இன்றைக்கு முழுமையாக, அய்யா அவர்கள் எண்ணியபடி முடித்துக் கொண் டிருக்கின்ற, மகத்தான அய்யாவின் மறு உருவமாகவே, தந்தை பெரியாராகவே என்னைப் பொறுத்தமட்டில் இன்றைக்குக் காட்சி தந்து கொண்டிருப்பவர்தான் ஆசிரியர் அவர்கள் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அய்யா அவர்கள், ஒரு முழக்கத்தை வைத்தார்கள். அது என்ன முழக்கம்?

சுயமரியாதை, தன்மானம்பற்றி அய்யா!

‘‘சுயமரியாதையும், தன்மானமும்தான் பிறப்புரிமை'' என்றார்.

சுயமரியாதையும், தன்மானமும் இல்லாதவனுக்கு, அவன் வாழ்க்கையில் விலங்குகளோடு ஒப்பிடத்தக்க வனே அல்லாமல், அவன் மனிதனாகக் கருதப்பட மாட்டான் என்பது அய்யாவினுடைய தீர்க்கமான முடிவாகும்.

அய்யா அவர்கள், சுயமரியாதைப்பற்றி, தன்மானம் பற்றி அவரே சொல்லியிருக்கிறார். அதை அவருடைய வார்த்தைகளால் சொன்னால்தான், அதனுடைய பொருள் உங்களுக்கு விளங்கும்.

‘‘சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு'' என்று கூறினார்.

‘‘சுயமரியாதை என்பது, மனிதனின் பிறப்புரிமை.

சுயமரியாதை என்பது எந்த ஒரு தனிமனிதனுக்கோ, ஜாதிக்கோ, இனத்திற்கோ, மொழியினருக்கோ, வகுப்பி னருக்கோ, நாட்டினருக்கோ மட்டும் சொந்தம் என்று யாரும் கூறிட முடியாது.

தன்மானம் இல்லாத மனிதன் மிருகத்தைப் போன் றவன்.

மிருகமும் பசிக்கு உண்கிறது; இன விருத்தியும் செய்து வாழ்கிறது. அதுபோலத்தானா மனித வாழ்க்கை - இல்லை, நிச்சயமாக இல்லை'' என்கின்ற அந்த சுய மரியாதைக்கான விளக்கத்தை சொல்லியதோடு, அய்யா அவர்கள் இன்னொரு கருத்தை வலியுறுத்துகிறார்.

எதனையும் கொள்ளலாம்; 

எதனையும் தள்ளலாம்!

‘‘பெரியாரியல் - பெரியாரியம்'' என்று நான் சொல்லிக் கொண்டிருக்கின்ற அந்தக் கருத்துக்கு அய்யா அவர்களே விளக்கம் சொல்கிறார்கள்.

‘‘மாந்தன் மாந்தனாக இருக்கவேண்டும். மக்களிடையே எந்த உருவத்திலும், வடிவத்திலும் ஏற்றத் தாழ்வுகள் நிகழக்கூடாது. மக்கள் ஆயத்தில், சம வாய்ப்பும், சம பங்கும், சம உரிமையும், சம முகர்ச்சியும் இருக்கவேண்டும். இக்குறிக்கோளை எய்துபவர்களுக்கு எதனையும் கொள்ளலாம்; எதனையும் தள்ளலாம்.

தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துகளை, சொல்லிப் பதிந்தாகவேண்டும்.''

வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்லவேண்டியது என் கடமை!

‘‘இன்று ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நாளை ஒரு நாள் ஏற்றுக்கொள்ளும் நிலை வரும். இந்தக் கருத்து களை சொல்லும் நிலையில், நான்தான் இருக்கிறேன்.

சொல்லவேண்டிய கருத்துகளை நானே எழுதி, நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சிட்டு, நானே படித்துக்கொள்ளும் நிலைக்குப் போனாலும், ‘குடி அரசை' வெளியிட்டு, என் கருத்துகளை, வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்லவேண்டியது என் கடமை'' என்று சொன்னார்.

ஆக, எந்த அளவிற்கு அய்யா அவர்கள் இந்த சமூகத்தின்மீதும், இந்த சமூகத்தைத் திருத்துவதற்காகவும், இந்த சமூகத்திற்குப் பகுத்தறிவை உருவாக்குவதற்காகவும், இந்த சமூகத்தை நேர்வழிப்படுத்துவதற்காகவும் எத்த கைய கொள்கையை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்; எத்தகைய வழிமுறையைக்  கையாண்டார் என்பதற்கு உரிய எடுத்துக்காட்டுதான் அவராலே தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்துகள் ஆகும்.

ஒரு பகுத்தறிவுள்ள சமுதாயம் 

நாட்டிலே உருவாகவேண்டும் என்று 

அவர் கனவு கண்டார்!

அய்யா அவர்கள் ஒரு சமூக விஞ்ஞானி. சோசியல் சயிண்டிஸ்ட். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற மூட பழக்கவழக்கங்கள், கற்பனை கடவுள்கள், ஜாதி மத வேறுபாடுகள் இவற்றையெல்லாம் போக்கி, நீக்கப்பட்ட ஒரு பகுத்தறிவுள்ள சமுதாயம் நாட்டிலே உருவாக வேண்டும் என்று அவர் கனவு கண்டார்.

அதுமட்டுமல்ல, சமத்துவம், சகோதரத்துவம், சமநீதி என்கின்ற கோட்பாடு, அவருடைய கோட்பாடு.

அதற்காக அவர் எதையும் விடலாம்; எதையும் ஏற்றுக்கொள்ளலாம் என்ற கருத்துப்பட இங்கே மிகத் தெளிவாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, ஒரு சமூக விஞ்ஞானியாக, சோசியல் சயிண் டிஸ்ட்டாக, அய்யா அவர்கள் அன்றைக்கு உருவாகி, நம்முடைய சமுதாயத்தை இன்றைக்கு ஒரு பகுத்தறி வுள்ள சமுதாயமாக மாற்றிக் காண்பித்திருக்கிறார்கள்.

அய்யா அவர்களைத் தொடர்ந்து, சமூக விஞ்ஞானியாக நமக்கு-  நம்முடைய ஆசிரியர் அவர்கள் இன்றைக்கு உருவாகியிருக்கிறார்.

ஆசிரியர் அவர்கள் எழுதிய 

வாழ்வியல் சிந்தனைகள்!

அவர் எழுதிய வாழ்வியல் சிந்தனைகளில், அவர் எடுத்துச்சொல்லுகின்ற அந்தக் கருத்துகள் - வாழ்க்கை என்பது கூட்டல், கழித்தல் மட்டுமல்ல. மேடு பள்ளங்கள் இருக்கும். வாழ்க்கையில் பெருக்கல் - வகுத்தலும் உண்டு. 

எனவே, இந்த மேடு பள்ளங்களையெல்லாம், கூட்டல், கழித்தலையெல்லாம், வகுத்தல், பெருக்கலை யெல்லாம் எப்படி சரி செய்து, சமன் செய்து, வாழ்க் கையை நடத்தவேண்டும் என்பதற்கு இந்த வாழ்வியல் சிந்தனைகளில் அவர் எடுத்து வைக்கின்ற கருத்துகள் என்பது, உள்ளபடியே அதைப் படிக்க படிக்க, நாம் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கவேண்டும், அதன்மூலமாக வாழ்க்கையை செம்மைப்படுத்த முடியும் என்கின்ற நம்பிக்கையை, இந்த வாழ்வியல் சிந்தனைகள்மூலமாக ஆசிரியர் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

நம்முடைய வாழ்க்கை இன்பகரமாக, மகிழ்ச்சிகரமாக இருந்திருக்குமோ...

நான்கூட எண்ணிப் பார்ப்பதுண்டு. இன்னும் முன்ன தாகவே ஆசிரியருடைய வாழ்வியல் சிந்தனைகளை தொடர்ந்து நாம் படித்திருந்தால், இன்னுங்கூட நம்மு டைய வாழ்க்கை இன்பகரமாக, மகிழ்ச்சிகரமாக இருந் திருக்குமோ என்று எண்ணியதுண்டு.

அந்த அளவிற்கு ஆசிரியர் அவர்களுடைய வாழ்வியல் சிந்தனைகள் சிறப்பானவை.

வாழ்வியல் சமூக விஞ்ஞானியாகத்தான் ஆசிரியர் அவர்கள் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு முன்பு உரையாற்றிய பத்திரிகை ஆசிரியர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். 

இன்றைக்கு நேரடித் தாக்குதலும் இருக்கிறது; மறைமுகத் தாக்குதலும் இருக்கிறது

முன்பு இருந்த அரசியல் தாக்கங்களைவிட, திராவிட இயக்க சிந்தனைகளுக்கும், திராவிட இயக்கக் கொள்கை களுக்கும், இப்பொழுது நேரடித் தாக்குதலும் இருக்கிறது; மறைமுகத் தாக்குதலும் இருக்கிறது.

இந்த மறைமுகத் தாக்குதல்கள் ஆளுநர் மூலமாக வருகிறது - அமலாக்கத்துறைமூலம் வருகிறது - தேர்தல் ஆணையத்தின்மூலமாக வருகிறது - விஜிலன்ஸ் மூலமாக வருகிறது - சி.பி.சி.அய்.டி. மூலமாக வருகிறது.

‘விடுதலை’ போன்ற திராவிட இயக்க உணர்வு கொண்ட அந்த ஆயுதங்களால்தான் தகர்த்து தரைமட்டமாக்க முடியும்

இப்படி இந்தத் தாக்குதல்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் திராவிட இயக்க சிந்தனைகளை நோக்கி ஏவிவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தத் தாக்குதல்களை தகர்த்து தரைமட்ட மாக்கக் கூடிய கருவி - ஆயுதம் இன்றைக்கு ‘விடுதலை’ போன்ற திராவிட இயக்க உணர்வு கொண்ட அந்த ஆயுதங்களால்தான் தகர்த்து தரைமட்டமாக்க முடியும். 

‘விடுதலை’, ‘முரசொலி' போன்ற ஏடுகள், அது போல, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிகள் நடத்துகின்ற ஏடுகள்தான் இந்தத் தாக்குதல்களை தடுத்திட முடியும், தகர்த்திட முடியும்.

ஆளுநர் என்பவர், அரசமைப்புச் சட்டம் அவருக்கு ஒதுக்கியிருக்கின்ற அந்தப் பணிகளைப் பார்க்கின்றாரா? என்றால், இல்லை.

மாறாக, சனாதனக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசுகிறார்; அப்படி ஏதாவது அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறதா? என்று இங்கே இருக்கின்ற வழக்குரைஞர்கள்தான் சொல்லவேண்டும்.

நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய திருக்குறள் உரை நூலை பரிசாக வழங்கவேண்டும்!

ஆளுநர், சனாதனக் கொள்கைகளுக்காக வாதாடு வதும், அதைப் பரப்புவதும்தான் ஆளுநருடைய பணியா?

அதுமட்டுமல்ல, திருக்குறளுக்கு உரை எழுதிய ஜி.யு.போப் அவர்களின் உரைக்கே மாற்று உரை எழுதிக் கொண்டிருக்கிறார்.

நன்றாகச் சொன்னார் இங்கே நம்முடைய பத்திரி கையாளர்.

அவருக்கு நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய, திருக்குறள் உரை நூல் ஒன்றை பரிசாக வழங்கினால், அதை அவர் படித்துப் பார்க்கட்டும்.

ஆதிபகவனுக்கு என்ன விளக்க உரை எழுதி யிருக்கிறார் என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளட்டும்.

இது ஆளுநர் பணியல்ல - It is not a Constitutional Duties - அதைத் தாண்டி, குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

எதிர்த்துக் கெடுக்க முடியவில்லை - 

அடுத்துக் கெடுக்க முயற்சிக்கிறர்கள்!

ஒன்று, எதிர்த்துக் கெடு - இல்லையென்றால், அடுத் துக் கெடு என்பதுதான் அவர்களுடைய கொள்கை.

எதிர்த்துக் கெடுக்க முடியவில்லை தமிழ்நாட்டில். அடுத்துக் கெடுப்பதற்கான நடவடிக்கைகளும், ஆலோ சனைகளும் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கின்றன.

அடுத்துக் கெடுக்கிறான் - திருக்குறள்மீது அக்கறை உள்ளவர்கள் போன்று காட்டிக் கொள்கிறார்கள்; தமிழ் மொழிமீது அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள்.

மேடையில், திருக்குறள் ஒன்றை சொல்வது; அந்தக் குறளுக்கான பொருளைச் சொல்வது; சிலப்பதிகாரத்தைச் சொல்வது - இப்படி தமிழ் மொழி தெரிந்ததைப்போல் காட்டிக் கொண்டு, தமிழ்நாட்டின்மீது அக்கறை உள்ளவர்கள்போல் காட்டிக் கொண்டு - அடுத்துக் கெடுக்கின்ற முயற்சிகள் இன்றைக்கு வெகுவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கூட்டுச் சதி நடைபெறுகிறது!

பிரதமர் தன்னுடைய சுதந்திர உரையில் சொல்லு கிறார், 

ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலிருந்த காலனித் துவ மனநிலை மனப்பான்மையை மாற்றவேண்டும். அவர் கடந்த 15 ஆம் தேதி பேசுகிறார் - ஆளுநரோ, ஜி.யூ.போப் உரைக்கு மாற்று உரை எழுதிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

ஆக, எல்லாமே சேர்ந்து கூட்டுச் சதி நடைபெறுகிறது.

என்ன காலனித்துவ மனநிலை?  75 ஆண்டுகளுக்கு பின்பு காலனித்துவ மனநிலையாம்; அதுவரையில் புரியாமல் இருந்ததா? காலனித்துவ மனநிலையை நான் மாற்றுவேன் என்று சொல்கிறார் இந்திய ஒன்றியத் தினுடைய பிரதம அமைச்சர்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர், ஜி.யூ. போப்பின் உரைக்கு மாற்று உரை எழுதிக் கொண்டி ருக்கிறார்.

சனாதனக் கொள்கைகள் பயனுள்ளது - நாட்டு மக்களுக்குத் தேவைப்படக் கூடிய கொள்கை என்று சொல்கிறார்.

நடைமுறைப்படுத்துவதற்கான காலத்தை எதிர்பார்த்துக்  கொண்டிருக்கிறார்கள்!

ஆக, ஏதோ ஒரு வகையில் மறைமுகமாகவும், நேரிடையாகவும் இந்தக் காவிக் கூட்டமான சங் பரிவார் - தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு சதியை இன்றைக்கு உருவாக்கி, அதை நடைமுறைப்படுத்துவதற்கான காலத்தை எதிர்பார்த்துக்  கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் பேச முடியுதா? விமர்சிக்க முடியுமா? உடனே, அமலாக்கத் துறை அவர்களுடைய வீட்டிற்கு வந்து சோதனை செய்வார்கள். பழைய கோப்புகளை யெல்லாம் தூசி தட்டி எடுக்கிறார்கள்.

யார் மீது வேண்டுமானால் வழக்குப் போடலாம்; அது ஒன்றும் பெரிய வித்தையல்ல. பழைய கோப்புகளை வைத்துக்கொண்டு வழக்குப் போடுவதென்றால், வழக்குப் போடலாம். அதனுடைய நோக்கம் சரியாக இருக்கவேண்டும். ஆனால், அப்படி இருக்காது.

திராவிட இயக்க சிந்தனையாளர்கள் 

ஒன்று சேர்ந்து இந்த சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்!

ஆக, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு திராவிட இயக்க சிந்தனையாளர்கள் ஒன்று சேர்ந்து இந்த சதித் திட்டத்தை முறியடித்தே ஆகவேண்டும்.

இன்றைக்கு ‘திராவிட மாடல்' ஆட்சி தமிழ்நாட்டில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் எதற்கும் அஞ்சவில்லை. தெளிவாகச் சொல்லுகிறார், ‘‘இந்த ஆட்சி சித்தாந்த அடிப்படையில் நடைபெறும் ஆட்சி. இந்த ஆட்சிக்கு எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும், சித்தாந்த அடிப்படையில் நடைபெறுகின்ற இந்த ஆட்சியினுடைய போக்கில், நிலைப்பாட்டில் எள் முனையளவுகூட மாற்றம் இருக்காது'' என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

எனவே, நீண்ட காலத்திற்குப் பின், ‘விடுதலை’ போன்ற இதழ்கள், ‘முரசொலி' போன்ற இதழ்கள் இங்கே உருவாக்கிய அந்த சிந்தனை ஓட்டத்தின் அடிப்படையில்தான் இன்றைக்கு திராவிட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

‘திராவிட மாடல்' ஆட்சிக்கு எள்முனையளவுகூட ஆபத்து வராமல் பாதுகாக்கவேண்டும்!

அதிலே மிகத் தெளிவாக சித்தாந்த அடிப்படையில், ‘திராவிட மாடல்' ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறும் என்று அழுத்தந்திருத்தமாக நிலைநாட்டுப் இந்த ஆட்சிக்கு, எள்ளின் முனையளவுகூட சேதம் வராமல், பாதுகாக்கவேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாட் டில்  உள்ள அனைத்துத் திராவிட இன உணர்வு கொண்ட மக்களுக்கு உண்டு என்பதை நான் திட்ட வட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரத்தினுடைய எல்லைவரை நீண்டு பரந்த இந்திய பூபாகத்தில் உள்ள பன்முகத் தன்மையை ஒப்புக்கொள்வதற்கு, இன்றைக்கு ஒன்றியத்திலுள்ள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.

பல்வேறு மொழிகள், பல்வேறு இனக் குழுக்கள், பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு கலை, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவற்றை உள்ளடக்கிய வேற்று மையில் ஒற்றுமை என்று, தேசியத் தலைவர்கள் எல்லாம் திரும்பத் திரும்பச் சொன்ன அந்தக் கருத்தையே  மறுக்கிறார்கள்.

''Unity in Diversity'' என்பது நேரு சொன்ன கருத்துதானே.

வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் மொழியால், இனத்தால், பண்பாட்டால், நாகரிகத்தால் வேறுபட்ட பல்வேறு தேசிய இனங்கள் வாழக்கூடியதே இந்திய நாடு. உணர்ச்சியால், வெள்ளையனிடமிருந்து விடுதலை பெற்றோம் என்கின்ற அந்த ஒட்டுமொத்த உணர்வாலே, ஒன்று சேர்ந்து இந்தியா ஒரே ஆட்சியின்கீழ் இன்றைக்கு அமைக்கப்பட்டு இருக்கிறது என்ற உண்மை இவர்களுக்கு மட்டும் விளங்கவில்லையா?

மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி!

இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது, கூட்டாட்சி (Federation) என்று முடிவு செய்யப்பட்டது - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னாலேதானே கூட்டாட்சி என்பதில் கலப்படம் செய்யப்பட்டது. அது கூட்டாட்சிதான் - மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று.

இடைக்காலத்தில் ஒன்று, பாகிஸ்தான் பிரிந்தே தீரவேண்டும் என்ற நிலை எடுத்த பின்னால்தான், அதில் மாற்றம் ஏற்பட்டு, அந்தக் கூட்டாட்சி என்பதில், ஆங்காங்கே கட்டுப்பாடுகளை வைத்தார்கள்.

ஸ்ட்ராங் சென்டர் என்கிற வார்த்தை 

எப்பொழுது வந்தது?

ஸ்ட்ராங் சென்டர் (வலுவான மய்யம்) என்கிற வார்த்தை எப்பொழுது வந்தது? ஸ்ட்ராங் சென்டர் என்ற வார்த்தையே, பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜின்னா தலைமையில் உள்ள, அந்த இயக்கம், பாகிஸ்தான் எங்களுக்குத் தனியே வேண்டும் என்று உறுதியாகச் சொன்ன பின்னால், அந்த இடைக்காலத் திலேதான் ஸ்ட்ராங் சென்டர் என்கிற வார்த்தையே அந்த அரசமைப்புச் சபையில் உச்சரிக்கப்பட்டது.

திராவிட இயக்கத்தை நோக்கி அவர்கள் இன்றைக்கு வீசுகின்ற ஏவுகணைகள்!

ஆக, இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்தும்கூட, இவ்வளவு உண்மைகள் இருந்தும்கூட, இன்றைக்கு மத்தியிலே இருப்பவர்கள் என்ன சொல்லுகிறார்கள், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும் ஒரே நாடு, ஒரே மொழி - சமஸ்கிருதம்தான் உயர்ந்த மொழி, தேவபாஷை என்று திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருப்பது என்பது, திராவிட இயக்கத்தை நோக்கி அவர்கள் இன்றைக்கு வீசுகின்ற ஏவுகணைகளாகத்தான் நான் அதைக் கருதுகிறேன்.

இதுவரை இப்படிப்பட்ட ஒரு நிலைமை நமக்கு ஏற்பட்டதில்லை. ஆனால், இப்பொழுது ஏற்பட்டு இருக்கின்ற நிலைமை என்பது வித்தியாசமானது, வேறுபட்டது. நேரிடையாகவும் எதிர்க்கிறார்கள்; மறை முகமாகவும் குழிபறிக்கிறார்கள் - அதற்கான சுரங்கப் பாதைகளையெல்லாம் அமைத்துக் கொண்டிருக் கிறார்கள்.

எனவே, திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் இரவும் - பகலும் விழிப்போடு இருக்கவேண்டிய காலகட்டம் என்பதையும் இந்த நேரத்திலே குறிப்பிட விரும்புகின்றேன்.

உலக மக்களை ஒன்று திரட்டக்கூடிய கொள்கைகள்தான் அய்யாவினுடைய கொள்கைகள்!

அய்யா அவர்களுடைய கொள்கை என்பது, நாடு, இனம், ஜாதி, மதம் இவற்றையெல்லாம் கடந்து, உலக மக்களை ஒன்று திரட்டக்கூடிய கொள்கைகள்தான் அய்யாவினுடைய கொள்கைகள்.

எனவே, அய்யாவினுடைய கொள்கைகள், நம்முடைய ஆசிரியர் அவர்களுடைய தலைமையில், உலக நாடுகள் முழுவதும் பரவிடவேண்டும். உலகச் சமுதாயத்தை ஒன்று சேர்க்கவேண்டும். எங்கு சென்றாலும், அய்யாவினுடைய கொள்கைகளுக்கு மறுப்புச் சொல்லுகின்றவர்கள் யாரும் இருக்க முடியாது.

மனிதம் - சமத்துவம் - 

சமூக நீதி - சமதர்மம்!

எல்லா இடத்திலும் இன வேறுபாடுகள், நிற வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், புவி யியல் வேறுபாடுகள் என்று இருக்கின்ற சூழ்நிலையில், அய்யாவினுடைய கொள்கை மிகத் தெளிவாகச் சொல்கிறது -

மனிதம் - சமத்துவம் - சமூக நீதி - சமதர்மம்; இந்தக் கோட்பாடுகளை எதிர்ப்பதற்கு எங்கே, யார் இருக் கிறார்கள்?

நீங்கள் நடமாடும் என்சைக்ளோபீடியா!

எனவே, அய்யாவினுடைய கொள்கையை அகில உலகத்திலும் வென்றெடுக்கக்கூடிய ஆசிரியர் அவர்கள் நீண்ட காலம் வாழவேண்டும்; நூறாண்டு காலம் வாழ வேண்டும். வாழ்ந்து எங்களுக்கெல்லாம் வழிகாட்ட வேண்டும்.

என்றும் நீங்கள் ஆசிரியர் -

என்றும் எங்களுக்கு நீங்கள் பல்கலைக் கழகம் -

என்றும் நீங்கள் நடமாடும் என்சைக்ளோபீடியா -

திராவிட இனத்திற்குச் சிக்கல் வருகின்றபொழு தெல்லாம் உங்களைத்தான் பார்ப்போம் - நீங்கள்தான் எங்களுக்கு விளக்கம் தரவேண்டும்.

என்றும் நாங்கள் இந்தப் பல்கலைக் கழகத்தினுடைய மாணவர்கள் வாழ்க! வாழ்க! என்று நன்றி கூறி விடைபெறுகிறேன்.

- இவ்வாறு ‘விடுதலை’ வாசகரும், மேனாள் அமைச்சரும் சீரிய பகுத்தறிவுவாதியும், சுயமரியாதைக் காரருமான பொன்.முத்துராமலிங்கம்  அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.


No comments:

Post a Comment