சைதாப்பேட்டையில் கலைஞர் முழு உருவச்சிலை சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

சைதாப்பேட்டையில் கலைஞர் முழு உருவச்சிலை சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை,ஆக.31- சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் நேற்று (30.8.2022) நடந்தது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். இதில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அவற்றில் சில முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- 

சிறுசீரகம் செயலிழந்து தவிக்கும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் விதமாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 4-ஆவது மண்டலம் இளங்கோ நகர், 7-ஆவது மண்டலம் அம்பத்தூர் பாடி, 15-ஆவது மண்டலம் செம்மஞ்சேரி ஆகிய 3 மண்டலங்களில் ரத்த சுத்திகரிப்பு மய்யங்களை தொடங்குவது அனுமதி அளிக்கப்படுகிறது. 

மண்டலம்-5, வார்டு-53-இல் உள்ள மூலக்கொத்தளம் மயான பூமியில் எரிவாயு தகனமேடை கட்டும் பணி மற்றும் இதர மேம்படுத்தும் பணிக்கு நிலைக்குழு (பணிகள்), நிலைக்குழு (வரிவிதிப்பு மற்றும் நிதி) மூலமாக மன்றத்தின் அனுமதி வழங்கப்படுகிறது.  

சென்னை மாநகராட்சி மண்டலம் 1, 2, 5, 6, 7, 8, 9, 10, 12, 13 மற்றும் 15-இல் துருப்பிடித்த மற்றும் பழுதடைந்த தெருவிளக்கு கம்பங்களை மாற்றி அமைக்க குறைந்த விலைப்புள்ளி அளித்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.  

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வழங்கும் நிதியின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மண்டலம்-4, வார்டு 40, 42 மற்றும் 43-இல் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் (ரெட்டைகுழி தெரு சந்திப்பு முதல் தொற்றுநோய் மருத்துவமனை வரை) மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு குறைந்த விலை ஒப்பந்தம் கோரிய ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கி ஆணையிடுகிறது. 

பாதுகாப்பான நகரம் திட்டத்தின்கீழ் திட்டத்தை மேற்கொள்ள சென்னையில் பொது இடங்களில் பெண் களின் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் 10-ஆவது மண்டலத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மகளிர் பள்ளிகளில் புதிய கழிவறைகள் கட்டுவதற்காக ரூ.3 கோடியே 76 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. கலைஞருக்கு முழு உருவச்சிலை 

1 முதல் 15 மண்டலங்களில் தகுதியுள்ள வணிக வளாக கடைகளில் காலியாக உள்ள 117 கடைகளை அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி அந்தந்த மண்டலங்களில் மெகா ஏலம் என்ற முறையில் ஏலம் விடுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

சைதாப்பேட்டை தொகுதி பெருநகர சென்னை மாநகராட்சி 10-ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட 142-ஆவது வார்டு, பஜார் சாலை மற்றும் அண்ணாசாலை சந்திக்கும் இடத்தில் கலைஞருக்கு முழு உருவச்சிலை அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது என்பது உள்பட 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


No comments:

Post a Comment