Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
August 30, 2022 • Viduthalai

 போலி அறிவியலைப் புரிந்து கொள்வீர்!

பல்வேறு தொடர் பணிகளுக்கிடையிலும் எனது 'இளைப்பாறல்' (Relaxation) பல்வேறு புத்த கங்களைப் படித்துப் புத்துணர்ச்சி பெறுவதுதான்!

இப்போதெல்லாம் புத்தக வாசிப்பு பெருகி வருகிறது என்பது நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும் - நமது இளைஞர்கள், மாணவச் செல்வங்கள், புத்தகங்களைப் படித்து, தங்க ளுடைய சிந்தனை - செயலாக்கத் திறனை  (Creativity) வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக, அளவுக்கு அதிகமான நேரம் இணையத்தில் - அதிலும் குறுஞ்செய்தி, தேவையற்ற அக்கப் போர் - சிலரின் டைரிக் குறிப்பான சுய புராணப் பெருமைப்படலங்கள் மூலம் தங்களது அரிய நேரத்தை வீணடித்து வருவது வேதனைக்குரியது.

நல்ல நூல்களைப் படித்துப் பயன் பெற வேண்டும். 'கசடுஅற கற்பதும் அதன்படி நிற்பதும்' இணைந்து நடந்தால் மனித குலம் மகத்தான ஞானம் பெறுவதோடு, ஞாலமும் பயனுள்ளோரின் கூட்டாகக் காட்சியளிக்கும்.

சென்ற மாதத்தில் நடந்த, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபற்றி ஆய்வு செய்த - ஸ்காட்லாந்து பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் பிச்சைமுத்து அவர்களது அந்நூல் வெளியீட்டு ஆய்வில் கலந்துகொண்டேன்.

அப்போது அந்நூல் வெளியீட்டாளர்களான நிகர் மொழி பதிப்பகத்தார் நண்பர்கள் அ. பிரபா கரன், ஜெ. ஜோன்சன் மேடையில் புத்தகங்களை எங்களுக்கு வழங்கி 'அறிவுக்குளியலுக்கு' வாய்ப் பளித்தனர்.

பல அருமையான பயனுறு புத்தகங்கள்

குறைந்த விலை; நிறைந்த சரக்கு மிடுக்கு

அறிவை விரிவு செய்து அகண்டமாக்கும் அற்புத விளக்கங்கள்.

இன்றைய உலகில் குறிப்பாக நம் நாட்டில் சனாதனத் தொற்று பழைமைவாதம், புதிய கோப்பையில், விஞ்ஞான விளக்க போலி 'லேபிள்' ஒட்டப்பட்டு பரப்பப்படும் இன்றைய கால கட்டத்தில் எது அறிவியல்? எது போலி அறிவியல் என்பதை டாக்டர் சட்வா MBBS DA DNB  அவர்களின் "போலி அறிவியல், மாற்று மருத்துவம்  மூடநம்பிக்கை ஒரு விஞ்ஞான உரையாடல்" என்ற புத்தகம் மூலம் அருமையான கருத்துச் செறிவுடன் கூடிய நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. 120 பக்கங்கள் - 44 தலைப்புகள் - விலை 100 ரூபாய்தான்.

அறிவியல் - Science,  போலி அறிவியல்       - Pseudo Science  என்பனவற்றை  விளக்கி வேறு படுத்திக் காட்டும்.   நிகர்மொழி பதிப்பகத்தாரின் பணி பாராட்டப்பட வேண்டிய அரும்பணி! அறிவுத் திருப்பணி. 'ஏன் இந்நூல்?' என்ற முதல் தலைப்பில் உள்ளவற்றை அப்படியே தருகிறோம்.

படியுங்கள் - பிறகு ஈர்ப்பு தானே வரும்.

"ஏன் இந்த நூல்?"

'ஒரு விஞ்ஞான உரையாடலை நிகழ்த்துவோம்'

"நோய்களை எதிர்த்து மனித இனம் தொடர்ந்து பல்லாயிரம் வருடங்களாகப் போராடி வருகிறது. நோய்கள் வருவதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் மாயா ஜால அமானுஷ்ய கதைகளை நம்பி யிருந்த காலத்தில் இருந்து, எதிர் காலத்தில் என்ன விதமான நோய் ஒரு மனிதனுக்கு வரும் என்று ஒருவரது 'ஜீன்களை' ஆய்வுசெய்து, பிறக்கும் போதே கணிக்கும் மரபியல் விஞ்ஞான உலகுக்குள் நாம் பரிணமித்து வந்திருக்கிறோம்.

இவ்வுலகின் மொத்த மக்கள்தொகை இரு நூற்று அய்ம்பது கோடியாக கி.பி. 1950இல் இருந் தது. அது கி.பி. 2000த்தில் அய்ந்நூறு கோடிக்கும் மேல் உயர்ந்தது. மேலே குறிப்பிட்டுள்ள வெறும் அய்ம்பது ஆண்டுகால இடைவெளியில் உலகின் மக்கள் தொகை இருமடங்காக உயர்ந் தமைக்குக் காரணம் நவீன விஞ்ஞான மருத்துவம் ஆகும்.

குறிப்பாகப் பெரியம்மை, தட்டம்மை, காலரா, தொண்டை அடைப்பான், பொன்னுக்கு வீங்கி, பிளேக், இன்புளூயன்சா முதலிய தொற்று நோய்களானது, தடுப்பூசிகள் மற்றும் இதர பொதுச் சுகாதார நடவடிக்கைகளின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதே இவ்வாறான திடீர் மக்கள் தொகை உயர்வுக்குக் காரணமாக அமைந்தது. 

ஜேரட் டைமண்ட் எனும் ஆய்வாளர் எழுதி யுள்ள 'கிருமி, துப்பாக்கி மற்றும் இரும்பு' (Guns, Germs and Steel) எனும் நூலில் 'கிருமிகளின் வழியே பரவும் நோய்கள் உலக வரலாற்றையே தலைகீழாக மாற்றிவிட்டது' என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்டோபர்  கொலம்பஸ் 1492 இல் அமெரிக்கக் கண்டத்தில் நுழைந்த போது அவரது குழு பல்வகை தொற்று நோய்களையும் சேர்த்தே அமெரிக்கக் கண்டத்தில் நுழைத்தது. விவசாய சமூகமாக ஓரிடத்தில் குவிந்து வாழ்ந்த அய்ரோப்பியர்கள், அமெரிக்கப் பழங்குடிகளுக்கு முன்னரே பல்வகையான பரவும் நோய்களுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியைப் பெற்று இருந்தனர். ஆனால், வேட்டை சமூகமாக இருந்த பழங்குடிகள் இந்த எதிர்ப்புச் சக்தியைப் பெற்று இருக்கவில்லை . இந்த ஒரு காரணம் அய்ரோப்பியர்கள் எளிமையாக அமெரிக்கப் பழங்குடிகளை வீழ்த்த ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்தது. 

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1947இல் முப்பத்து ஒன்று வயதாக இருந்தது. அது 2015இல் அறுபத்து எட்டு வயதாக உயர்ந்துள்ளது. இவ்வாறு நோய்களும், அதற்கு எதிரான விஞ்ஞான மருத்துவமும் மனித இனத்தின் வரலாற்றை மாற்றி எழுதும் வல்லமை பெற்றவையாக இன்றும் உள்ளன.

அதே சமயத்தில் நவீன விஞ்ஞான மருத்துவம் வியாபாரமாகிப் போனது பற்றியும் நாம் ஆழ்ந்த கவலை கொள்ள வேண்டியுள்ளது. சேவைத் துறையில் வியாபாரம் செய்யலாம் என்ற உலக மயமாக்கலின் உபவிளைவு மருத்துவத்தையும் ஒரு வியாபாரப் பண்டமாக மாற்றியுள்ளது. சந்தை பொருளாதாரமே சிறந்தது என்ற ஆபத்தான முதலாளித்துவ கருத்தும் மேல்தட்டு மக்களி டையே விதைக்கப்படுகிறது.

இந்தப் புத்தகத்தின் வழியே நாம் நோய்களின் வரலாறு, விஞ்ஞான மருத்துவத்தின் அடிப்படை, போலி அறிவியல் செயல்படும் விதம், மாற்று மருத்துவம் எனும் நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகள், அனைவருக்கும் தரமான சுகாதாரம் ஆகியவற்றைப் பற்றி பல்வகை தலைப்புகளில் ஒரு விஞ்ஞான உரையாடலை நிகழ்த்துவோம்."

அறிய வேண்டிய அரிய செய்திகள் அல்லவா?


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn