திருப்பத்தூர் 'விடுதலை ' சந்தா அளிப்பு விழாவில் தமிழர் தலைவர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

திருப்பத்தூர் 'விடுதலை ' சந்தா அளிப்பு விழாவில் தமிழர் தலைவர் உரை

  ‘விடுதலை’ சந்தாவுக்காக எடைக்கு எடை ரூபாய் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத திருப்பத்தூர் திருவிழா! 

மாநிலப் பாடத் திட்டம் என்று இருந்தாலும், அதில் ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தைத் திணிப்பது ஏன்?

'விடுதலை' வாளாகவும் - கேடயமாகவும் இருக்கும்!

திருப்பத்தூர், ஆக.21  ‘விடுதலை’ சந்தாவுக்காக எடைக்கு எடை ரூபாய்; வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத திருப்பத்தூர் திருவிழா! மாநிலப் பாடத் திட்டம் என்று இருந்தாலும், அதில் ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தைத் திணிப்பது ஏன்? 'விடுதலை' வாளாகவும் - கேடயமாகவும் இருக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திருப்பத்தூரில் நடைபெற்ற கலந்துரையாடல்

கடந்த 14.8.2022 அன்று மாலை 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா திரட்டுவது குறித்து திருப்பத்தூரில் நடைபெற்ற திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, செய்யாறு, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் திராவிடர் கழக கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார். 

அவரது சிறப்புரை வருமாறு:

மதுரை திராவிடர் கழகப் பொதுக்குழு - செயற்குழுவில் முடிவு

திருப்பத்தூர் மாநகரில் ‘விடுதலை’ சந்தா வசூலிப்பு இயக்கம் என்ற இந்த இயக்கத்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆரம்பித்து, ஏறத்தாழ இப்பொழுது 40 நாள்கள் ஆகியிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

மதுரையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்து 60 ஆயிரம் விடுதலை சந்தாக்களை வழங்கவேண்டும் என்ற முடிவெடுத்து, அதற்காகத் தொடர்ந்து நம்முடைய இயக்கப் பொறுப்பாளர்கள் உழைப்புத் தேனீக்களாக சுற்றிச் சுற்றி மிகப்பெரிய அளவிலே தமிழ்நாடு முழுக்க சந்தா வசூலிப்பு இயக்கம் என்பதையே ஒரு பண்பாட்டுப் புரட்சியாக, ஊடகத் துறை வரலாற்றிலேயே இப்படி மக்களை அணுகிய ஓர் ஏடு என்பது ‘விடுதலை’ தவிர வேறு கிடையாது.

மக்களுடைய ஆதரவினால் நடத்தப்படுகின்ற ஓர் ஏடு - இயக்கம்

ஏனென்றால், இவ்வேடு மக்களுக்காக, மக்களு டைய ஆதரவினால் நடத்தப்படுகின்ற ஓர் ஏடு - இயக்கம்.

உங்களுக்கெல்லாம் தெரியும், தந்தை பெரியார் அவர்கள் 88 ஆண்டுகளுக்கு முன்பு, ‘விடுதலை’ நாளேட்டை எதிர்நீச்சல் போட்டுத் தொடங்கினார். அதைப்பற்றியெல்லாம் பின்னால் சொல்கிறேன்.

அப்படி எதிர்நீச்சல் போட்டு வந்த இயக்க வரலாற்றில், திருப்பத்தூரில் இன்றைக்கு நடந் திருக்கின்ற விழா என்பது இருக்கிறதே, இது எனது வாழ்நாளிலும் நான் பெறாத ஒரு பேறு.

‘விடுதலை’யினுடைய வரலாற்றிலும், இது கிடைக்காத ஓர்  அற்புதமான நிகழ்ச்சி.

நூற்றாண்டு விழா நாயகர், ஏ.டி.கோபால் போன்ற வர்கள் இல்லையே என்று நினைக்கின்ற நேரத்தில், நம்முடைய எழிலரசன் அவர்களுடைய தலைமையில், மிகப்பெரிய அளவிற்கு அவருடைய குடும்பம் கொள் கைக் குடும்பம்; அகிலா அவர்களானாலும், சிற்றரசு அவர்களானாலும், சிற்றரசுவினுடைய வாழ்விணை யரானாலும், இப்பொழுது கடைசியாக வந்திருப்பவர் அடுத்த தலைமுறை - கொள்கைத் தலைமுறையானாலும் சரி ஒரே கொள்கைதான் - உதாரணத்திற்கு நான் சொல் கிறேன் - எல்லோருக்கும் அதே தகுதிதான் - ஏனென் றால், அவரை மட்டும் நான் சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம்.

‘விடுதலை’ என்ன செய்தது என்று சொன்னால், நிறைய பேர்  நம்முடைய அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் பெயருக்கு முன் இருப்பதைப் பார்த்து என்னிடம் கேட்பார்கள், ‘‘ஊமை.ஜெயராமன் பேசுகிறார்’’ என்று போட்டிருக்கிறீர்களே என்று - இது ஒன்றும் அற்புதம் செய்யும் நிகழ்ச்சி அல்ல என்று சொல்வேன்.

‘‘பேசாதவர்களுடைய குரல்’’

‘‘பேசாதவர்களுடைய குரல்’’ என்றுதான் அம்பேத்கர் அவர்கள்கூட, தன்னுடைய ஏட்டிற்கு பெயர் வைத்தார்.  சிலர் அதை ஊமையர்களின் குரல் என்று கொச்சைப் படுத்தினார்கள். பேசாதவர்களுடைய குரல், பேசத் தடுக்கப்பட்டவர்களுடைய குரல் என்றுதான் அதற்கு அர்த்தம். பேச முடியாதவர்கள் அல்ல என்பதுதான் மிகவும் முக்கியம்.

பிறக்கும்பொழுதே தடையோடு 

பிறந்த ஏடு ‘விடுதலை!’

அப்படிப்பட்டவர்களின் குரலாக இருக்கின்ற இந்த ஏடு, பிறக்கும்பொழுதே எதிர்நீச்சல் அடித்து, வாழப் பிறந்த இனம் என்றெல்லாம் சொல்வார்கள்; அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது; ஆனால், தடையோடு பிறந்த ஏடு ஒன்று உண்டென்றால், அந்தப் பெருமை ‘விடுதலை’ ஏட்டிற்கு மட்டும்தான் உண்டு.

அப்படிப்பட்ட ‘விடுதலை’ சந்தா வசூலில், மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக, வியப்படையக் கூடிய ஒரு நிகழ்ச்சியாக - தொடர்ந்து தோழர்கள் மத்தியில் சென்று, ஜாதி, மதம், கட்சி என்று எந்தவித வேறுபாடும் இல்லாமல் அணுகி வருகிறோம். ஒவ்வொரு கோணத்தில் ‘விடுதலை’ அவரவருக்குரிய பங்கை செய்திருக்கிறது.

ஜாதி ஒழிப்பாக இருந்தாலும், மூடநம்பிக்கை ஒழிப் பாக இருந்தாலும், மனித உரிமைகளுக்காகப் போராடு வதாக இருந்தாலும், அவற்றை  எவ்வாறு செய்வது என்கிற கோணத்தில் பார்த்து செய்யப்படுகின்றது.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் தனிச் சிறப்பு 

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்ற தத்துவம் வரும்பொழுது, யாரையும் நீக்கிய தத்துவம் கிடையாது; இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தனிச் சிறப்பு - தத்துவமாகும்.

அனைவருக்கும் அனைத்தும் - வெளியே நிற்கிறார் களே - இரண்டு கோடு கிடையாது - எல்லோருக்கும் உண்டு.

அப்படி அனைவருக்கும் அனைத்தும் உருவாக்கக் கூடியதற்கு உரிய ஒரு போராட்டக் களத்திலே ஓர் ஆயுதம்.

தந்தை பெரியார் என்ற பாசறையில், போராதயுதக் கிடங்குகளில் இருந்து, அவர் தந்த ஓர் அறிவாயுதம் ‘விடுதலை’ என்ற பெருமைக்குரிய அந்த ‘விடுதலை’க்கு - திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, செய்யாறு, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மாவட்டங்களின் சார்பாக, சந்தா வழங்கும் விழா என்று சொல்லி, (அதற்கு முன்பாக இரண்டு, மூன்று தவணைகளில் சந்தாக்கள் அளித் திருக்கிறார்கள்) இன்றைக்கு ‘விடுதலை’ சந்தாக்கள் வழங்கும் விழாவிற்காகத்தான் நாங்கள் இங்கே வந் தோம்.

ஆனால், இங்கே வந்த பிறகுதான் தெரிந்தது - மேடையில் தராசு வைத்திருக்கிறார்கள்; ஓகோ, எடைக்கு எடை காசு கொடுப்பார்கள் போலிருக்கிறதே, சந்தாக்கள் கொடுக்கப் போவதில்லையோ என்று நினைத்தேன். சரி, எது கொடுத்தாலும், அது என்னுடைய வீட்டிற்குப் போகாது; இயக்கத்திற்குத்தான் போகும் என்று எல்லோருக்கும் தெரியும்.

நீதிக்கட்சிக்கு அடையாளமே 

தராசு சின்னம்தான்

அப்பொழுதுதான் நம்முடைய எழிலரசன் அவர்கள் எடைக்கு எடை பணம் கொடுக்கப் போகிறோம் என்று சொன்னார்.

ஒரு நூறாண்டிற்கு முன்பு, திராவிடர் இயக்கம், நீதிக்கட்சிக்கு அடையாளமே தராசு சின்னம்தான். இந்தத் தகவல் நிறைய பேருக்குத் தெரியாது. நான் மாணவப் பருவத்தில் அந்தக் கொடியைப் போற்றியவன், கொடியைப் பிடித்துக் கொண்டு ஊர்வலம் சென்றவன்.

எங்கள் ஊரான கடலூர் முதுநகரில், ஒரு சிறிய கூட்டமோ, பொதுக்கூட்டமோ நடந்தாலும், பேராசிரியர் அன்பழகன் போன்றவர்கள் மாணவர்களாக இருந்த வர்கள். எல்லோரையும் அழைத்துப் பொதுக்கூட்டம் போடுவோம்; அவர்களை கூட்டத்திற்கு அழைத்துப் போகும்பொழுது, 20, 30 பேர் கொடிகளைப் பிடித்துக்கொண்டு செல்வோம்.

இதுவரை எடைக்கு எடை நாணயங்களைத்தான் கொடுத்திருக்கிறார்கள். இங்கே பார்த்தீர்களேயானால், கட்டுக் கட்டாகப் பணம் கொடுத்தார்கள்.

கணக்குகளை சரியாக வைத்துக்கொள்ளுங்கள்!

இதை வைத்து நம்முடைய இன எதிரிகள் நமக்குத் தொல்லை கொடுப்பார்கள். ஆகவேதான், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து, கணக்கு களை சரியாக வைத்துக்கொள்ளுங்கள்; இதில் ஏதாவது சந்து கிடைத்தால், நமக்குத் தொல்லை கொடுப்பார்கள். நாம் எதைச் செய்தாலும், திருந்தச் செய்பவர்கள் - ஆகவே, பாதுகாப்போடு செய் வோம் என்று சொன்னேன்.

அவரும், எல்லாவற்றிற்கும் கணக்கு இருக்கிறது; ஒரு ரூபாய்க்குக்கூட கணக்கு இல்லாமல் இல்லை என்று சொன்னார்.

 உண்மையை பேசுகின்ற, உண்மையாகச் செயல்படுகின்ற ஓர் இயக்கம்

எங்களைப் பொறுத்தவரையில், இந்த இயக்கத்தைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரையில், உண்மையை பேசுகின்ற, உண்மை யாகச் செயல்படுகின்ற ஓர் இயக்கமாகும்.

தவறு செய்தால்கூட, அதை ஒப்புக்கொள்கிற இயக்கம். அதை மறைக்கவேண்டிய அவசியமில்லை.

என்றும் மறக்க முடியாத 

திருப்பத்தூர் திருவிழா - பெருவிழா!

வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத திருப்பத்தூர் திருவிழா இது - பெருவிழா!

தொடர்ந்து நான்கு அய்ந்து நாள்களாக சரியாகத் தூக்கமின்றி, ஓய்வின்றி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இதைப் பார்த்த தோழர்கள், ஏன் இந்த வயதில் ஓய்வு ஒழிச்சலின்றி பாடுபடுகிறீர்களே என்று கேட்கிறார்கள்.

நமக்கு முன் வழிகாட்டிய நம்முடைய தலைவர், 95 வயதில் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு போன தலைவர் நம்முடைய தலைவர். அதை நாம் பார்க்கும் பொழுது, இன்னும் நாம் உழைக்கவேண்டும் என்கிற உறுதித்தான் நம் மனதில் தோன்றும்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு இந்த நிகழ்ச்சியைப் பார்க்கின்றபொழுது, எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். தோழர்கள், சகோதரிகள், மகளிரணியினர் ஆகியோருடைய பங்கைப்பற்றி இங்கே எடுத்துச் சொன் னார்கள்.

இந்த இயக்கம் பெரியாருக்குப் பிறகு இருக்குமா? என்று கேட்டார்கள்; இருக்கும் என்பது மட்டுமல்ல, அது வீறுகொண்டு எழக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

எதிரிகள், இன எதிரிகள், கொள்கை எதிரிகள் இந்த இயக்கக் கண்டு நடுங்கக்கூடிய அளவிற்கு, இந்த இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு இன்றைக்கு இருக்கிறது.

இருபது லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்!

இங்கே என்னை எடை போட்டுப் பார்த்த தோழர்களிடம் எவ்வளவு பணம் என்று கேட்டேன் - இருபது லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் என்று சொன்னார்.

அந்த மகிழ்ச்சி குறையாமல், அவர் இன்னொரு வார்த்தையையும் சொன்னார் -

இது முதல் தவணை என்று சொன்னார் - அதைக் கேட்டவுடன் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது.

என்னுடைய உழைப்பிற்கு மதிப்பூதியம் கொடுத்திருக்கிறீர்கள்!

மக்கள் ஆதரவு என்பது ஒரு தொடர் முயற்சி. எங்கள் முயற்சி என்பது எப்படி தொடர் ஓட்டமோ - தொடர் போராட்டமோ அல்லது தொடர் முழக்கங்கள் என்பது போன்று இது ஒரு தொடர் முயற்சி என்ற அளவிற்கு இருக்கிறதே - அந்த உணர்வுக்கு என்னால் பேச முடியாத அளவிற்கு உணர்ச்சியைப் பெறுகிறேன்.

நான் இதுவரையில் அய்யாவிடம் சம்பளம் வாங்கி யதே இல்லை. ஆனால், எனக்கு இன்றைக்கு நீங்கள் சந்தாக்கள்மூலம் சம்பளம் கொடுத்திருக்கிறீர்கள்; என் னுடைய உழைப்பிற்கு மதிப்பூதியம் கொடுத்திருக் கிறீர்கள்.

எனது இறுதி மூச்சு 

நிற்கின்ற வரையில் உழைப்பேன்! உழைப்பேன்!! உழைப்பேன்!!!

இதற்கு நான் என்ன பதில் சொல்வேன்?

ஒன்றே ஒன்றைத்தான் சொல்ல முடியும்.

உங்கள் நம்பிக்கைக்கு எனது இறுதி மூச்சு நிற்கின்ற வரையில் உழைப்பேன்! உழைப்பேன்!! உழைப்பேன்!!!  என்பதைத் தவிர, இதற்காக இந்த வாய்ப்புகளைப் பெறுவேன் என்று சொல்வதைத் தவிர, எனக்கு வேறு வார்த்தைகளே கிடைக்க வில்லை.

இளைஞரணியிலிருந்து வந்தவர்கள்தான் இங்கே இருக்கின்ற தோழர்கள் - இன்றைக்கு மக்கள் மத்தியில் எழிலரசனுக்கு இருக்கின்ற மரியாதை - இயக்கத்திற்கு இருக்கின்ற மரியாதைக் குக் காரணம், உண்மையைப் பேசுவது - நாணயமாக இருப்பது - இந்த இயக்கம் பொது இயக்கம். இந்த இயக்கத்தில் யாரும் தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்புக்கு ஆளாகக்கூடிய வர்கள் அல்ல என்று நினைக்கக்கூடிய ஒரு இயக்கம்.

இப்படிப்பட்ட அருமையான நிகழ்விற்குத் தலைமை வகிக்கக் கூடிய திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் தோழர் கே.சி.எழிலரசன் அவர்களே,

வரவேற்புரையாற்றிய பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா.சரவணன் அவர்களே,

மூத்த வழக்குரைஞர் எஸ்.எஸ்.மணியன்

மூத்த வழக்குரைஞரும், 50 ஆண்டுகளுக்குமேல் இந்தத் தொகுதியில் பெருமைக்குரிய ஒருவராக இருக்கிறார்; நாம் கட்சி பார்ப்பதில்லை, மதம் பார்ப்பதில்லை, ஜாதி பார்ப்பதில்லை. மனிதநேயத்தோடு யார் என்றாலும், அவர்கள் அத்தனை பேரும் பாராட்டப்படவேண்டியவர்கள் என்கின்ற அந்தக் கொள்கை அடிப்படையில்தான்  மூத்த வழக்குரைஞர் எஸ்.எஸ்.மணியன் அவர்களே,

அதேபோல, என்றைக்கும் நம்மிடத்திலே அன்பு பாராட்டக்கூடிய காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளையின் தலைவர் சி.கே.பி.அய்யா நண்பர் கணேசமல்லு அவர்களே,

என்றைக்கும் நம் குடும்பத்தில் ஒருவராக இருக்கக் கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அருமை வழக்குரைஞர் கண்ணதாசன் அவர்களே,

கழகப் பொதுச்செயலாளர் ஜெயக்குமார் அவர்களே, மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களே, அமைப்புச் செயலாளர் அருமைத் தோழர் செயல்வீரர் ஊமை.ஜெயராமன் அவர்களே, மண்டப உரிமையாளர் அய்யா மதியழகன் அவர்களே, மீனாட்சித் திரையரங்க உரிமையாளர் தோழர் சாமிச் செட்டி அவர்களே,

வேலூர் மண்டலத் தலைவர் அண்மைக் காலத்தில் சற்று உடல்நலத்தில் சிறிது தளர்வு ஏற்பட்டது அவருக்கு. அவர் மிகவும் வருத்தப்பட்டார் குடும்ப ரீதியாக. ஏனென்றால், சடகோபன் போன்று ஒருவரை பார்க்கவே முடியாது; அவ்வளவு அற்புதமான ஒரு தலைவர்.

இயக்கத்திற்குக் கிடைக்க முடியாத 

சொத்துகள்!

சடகோபனையும் தாண்டிய கொள்கை உணர்வோடு போட்டி போடக்கூடிய அளவிற்கு இருக்கும் அவருடைய வாழ்விணையர் சகோதரி ஈஸ்வரி அவர்களே,

ஒவ்வொரு தோழரின் உடல்நலம் பாதிக்கப் படும்பொழுது அதைவிட அதிர்ச்சியும், கவலையும் எங்களுக்கு வேறு இருக்க முடியாது.

ஏனென்றால், இந்த இயக்கத்திற்குக் கிடைக்க முடியாத சொத்துகள் போன்று அவர்கள் இருக் கிறார்கள்.

ஏனென்றால், ஒரே கொள்கை - ஒரே தலைமை - ஒரே இயக்கம் என்று இருக்கக்கூடிய வேலூர் மண்டல தலைவர் அருமை நண்பர் சடகோபன் அவர்களே, ஆடிட்டர் நம்பி அவர்களே,

தருமபுரி மண்டலத் தலைவர் தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களே, செயலாளர் தோழர் பழ.பிரபு அவர்களே, தருமபுரி மாவட்டத் தலைவர் செயல்வீரர் சிவாஜி அவர்களே, செயலாளர் தமிழ்ப்பிரபாகரன் அவர்களே,

திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் அருமைத் தோழர் இளங்கோவன் அவர்களே, வேலூர் மாவட்டத் தலைவர் அன்பரசன் அவர்களே,

திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் ஏழுமலை அவர்களே, செயலாளர் மூர்த்தி அவர்களே, கிருஷ்ண கிரி மாவட்டத் தலைவர் பாராட்டுதலுக்குரிய அறிவரசன் அவர்களே, செயலாளர் தோழர் மாணிக்கம் அவர்களே,

ஒசூர் மாவட்டத் தலைவர் தோழர் வனவேந்தன் அவர்களே, செயலாளர் சின்னசாமி அவர்களே, பொதுக்குழு உறுப்பினர் செய்யாறு செயல்வீரர் காமராசு அவர்களே,

மாநில தொழிலாளரணி செயலாளர் - இந்நிகழ்ச் சிக்காக மூன்று நாள்களாக இங்கேதான் இருக்கிறாராம் அப்படிப்பட்ட அருமைத் தோழர் சேகர் அவர்களே,

மாநில மகளிரணி செயலாளர் அருமை தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களே, மாநில மகளிரணி பொருளாளர் அருமை அகிலா எழிலரசன் அவர்களே,

மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி அவர்களே, பகுத்தறிவாளர் கழக கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி அவர்களே, பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் சிறந்த எழுத்தாளர் தோழர் கவிதா அவர்களே,

பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் தமிழ்ச் செல்வன் அவர்களே, செயலாளர் நத்தம் அன்பு அவர்களே,

மண்டல இளைஞரணி செயலாளர் சிற்றரசன் அவர்களே, கழக பேச்சாளர் பெரியார் செல்வம் அவர் களே, மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர பாண்டி அவர்களே,

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் அய்யா ஜோலார்பேட்டை நரசிம்மன் அவர்களே, கே.கே.சி. கமலம்மாள் அம்மையார் அவர்களே,

தோழர் அரூர் இராஜேந்திரன்

அருமைத் தோழர் கலைமணி பழனியப்பன் அவர்களே, தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் எந்நாளும் நம்மோடு அன்போடு இருக்கக் கூடிய அருமைத் தோழர், இயக்கத்தினுடைய எந்தப் பணியையும், இயக்கத் தோழர்களைவிட ஒருபடி அதிகமாகவே செய்து அன்பைப் பெற்றுக் கொண்டி ருக்கக்கூடிய தோழர் அரூர் இராஜேந்திரன் அவர்களே,

மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி கிருஷ்ண மூர்த்தி அவர்களே,

மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கக் கூடிய தோழர்களே -

அருட்தந்தை மரிய அந்தோணி ராஜ்

நான் ஏற்கெனவே சொன்னபடி, இங்கே ஜாதி, மதம் என்ற வேறுபாடு கிடையாது. அதற்கு என்ன அடை யாளம் என்றால், இங்கே நான் வரும்பொழுது அருட்தந்தை மரிய அந்தோணி ராஜ்  அவர்களைப்பற்றி விசாரித்துக்கொண்டுதான் வந்தேன். சென்ற முறை வந்தபொழுது, அவசரமாகக் கிளம்பிவிட்டேன், வேலூர் கூட்டத்திற்குச் செல்லவேண்டும் என்பதற்காக.

எழிலரசனும் - அகிலாவிடமும் விசாரித்தேன்.  எப்படி இருக்கிறார் என்று கேட்டேன்.  மதம் எங்களைப் பிரித்ததில்லை  - மனம் ஒன்றுபடுத்துகிறது. அப்படிப்பட்ட அருட்தந்தை மரிய அந்தோணி ராஜ் அவர்களே,

மற்றும் அருமை இயக்கத் தோழர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த நண்பர்களே, ஊடக நண்பர்களே, பெரியோர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘‘விடுதலை’யினுடைய வீர வரலாறு!’’ 

ஏன் ‘விடுதலை’க்கு நாம் இவ்வளவு பெரிய முயற்சி எடுக்கிறோம் என்று கேட்டால், ஒன்றே ஒன்று - ‘‘‘விடுதலை’யினுடைய வீர வரலாறு’’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டோம். அதை நீங்கள் எல்லாம் வாங்கிப் படிக்கவேண்டும்.

ஒரு பத்திரிகையைத் தொடங்குகிற காலத்தில்கூட தந்தை பெரியாருக்கு எவ்வளவு சங்கடங்கள். அதற்கு எதிர்ப்பு 1935 இல் - நூறாண்டு காலத்தில் நீதிக்கட்சி நான்கு முறை ஆட்சியில் இருந்தது. ஆனால், அந்த நீதிக்கட்சி ஏன் தேர்தலில் தோற்றது என்றால், மக்களுடைய ஆதரவு குறைவாக இருந்ததால் அல்ல - செய்த சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல முடியவில்லை. இதை எதிரிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். 

இதுபோன்ற பிரச்சாரங்களை எடுத்துச் சொல்ல முடியவில்லை. அதற்குத்தான் ‘விடுதலை’ போன்ற ஏடு தேவை.

‘விடுதலை’ என்ற இந்தப் பேராயுதம்தான்!

இப்பொழுது ‘திராவிட மாடல்’ ஆட்சி இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக நடந்துகொண்டிருக்கிறது என்றவுடன், அதைத் தடுப்பதற்கு எப்படி குறுக்குசால் ஓட்டுவது - எப்படி அதைத் தடுப்பது என்கிற பிரச்சார முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இதற்கு உடனடியாக பதில் சொல்லி,  எதிரிகளை வாயடைக்க வைக்கின்ற ஏடு இருக்கின்றது என்றால், அது ‘விடுதலை’ என்ற இந்தப் பேராயுதம்தான்.

எங்களுக்கொன்றும் அச்சமில்லை - எத்தனையோ எதிர்ப்புகளைப் பார்த்தவர்கள் - எத்தனையோ சங்கடங் களை சந்தித்தவர்கள்.

எதிர்நீச்சலில் பயணிப்பதுதான் 

எங்களுடைய பணி!

நாளைக்கும் எதிர்ப்பு வரும் - ஏனென்றால், எதிர்நீச்சலில் பயணிப்பதுதான் எங்களுடைய பணி. அந்த எதிர்நீச்சலில் நடைபோடுவதுதான் ‘விடுதலை’ ஏடாகும். சாமானிய மக்களுக்காக வெளிவரும் ஏடுதான்‘விடுதலை’.

அய்யா ஒரு அறிக்கையில் எழுதுகிறார், நான் இவ்வளவு கஷ்டப்பட்டு ‘விடுதலை’யை நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான அளவிற்கு பணம் நட்டம். அதை நாங்கள் எப்படி சமாளிக் கிறோம்? மற்ற நாளேடுகள் போன்று விளம்பரங்கள் எங்களுக்குக் கிடையாது. சினிமா செய்திகளைப் போட மாட்டோம்; மூடநம்பிக்கை செய்திகளைப் போடமாட்டோம்; ஜோதிடம் போன்ற செய்திகளை வெளியிடுவதில்லை. அதை எதிர்த்து செய்திகளை வெளியிடுவது.

மக்களுக்கு எதெல்லாம் விருப்பமோ, அதெல் லாம் ‘விடுதலை’ நாளேட்டில் இருக்காது.

மக்களுக்கு எதெல்லாம் கசப்போ, அதெல்லாம் ‘விடுதலை’ நாளேட்டில் இருக்கும். ஆனால், வெற்றி நமக்குத்தானே தவிர, அவர்களுக்கு அல்ல.

ஏனென்றால், எதிர்நீச்சலில் அவ்வளவு பெரிய சுகம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஓர் அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம்.

‘விடுதலை’யைப் படித்தவர்களுக்குத் தெரியும்!

நீங்கள் நினைக்கலாம், இன்றைக்கு நிறைய பணம் கொடுத்துவிட்டு இங்கே அமர்ந்திருக்கலாம். எழிலரசன் அவர்களுக்குச் செல்வாக்கு இருக்கிறது; ஆகவே, நிறைய பேர் நன்கொடை கொடுத்திருக்கிறார்கள் என்று.

சாமானியர்களுடைய ஆதரவு, எளிய மக்களுடைய ஆதரவு என்பது இருக்கிறதே, அது எப்படி என்பது ‘விடுதலை’யைப் படித்தவர்களுக்குத் தெரியும்.

படிக்காதவர்களுக்காக சொல்கிறேன்,

விழுப்புரம் மாவட்டம் - ஆரியூர் கிராமத்தினரின் வியக்கத்தக்க செயல்!

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் ஆரியூர். அந்தக் கிராமத்தில் திருமாமணி என்கிற ஓர் அம்மையார். கல்லூரி விரிவுரையாளர். அவருடைய தந்தையார் ஓய்வு பெற்ற அதிகாரி - அவருடைய பெயர் பேராசிரியர் ஜெகதீசன்.

அந்த அம்மையார் அவர்கள் எழுதிய புத்தகத்தை பெரியார் திடலுக்கு வந்து என்னிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். நான் சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன்; அதற்காக ஒரு நாள் அனுமதி வாங்கிக் கொண்டு வாருங்கள் என்றேன்.

113 ‘விடுதலை’ சந்தாக்கள்

அந்த அம்மையார் ‘விடுதலை’ நாளிதழை தவறாமல் படிக்கிறவர். அதற்கு அடுத்த வாரத்தில் ஒரு நாள் என்னை வந்து சந்தித்து புத்தகத்தைக் கொடுக்கும் பொழுது, 113 ‘விடுதலை’ சந்தாக்களைத் திரட்டி அதற்குரிய தொகையை காசோலையாக என்னிடம் கொடுத்தார்கள்.

அந்த 113 சந்தாக்களையும் எப்படி திரட்டினார் என்றால், ஆரியூர் சிறிய கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு ஒரு சந்தாவைக் கொடுத்திருக்கின்றனர்.

இல்லந்தோறும் ‘விடுதலை’ -

மக்கள் உள்ளந்தோறும் பெரியார்’ என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ‘விடுதலை’ சந்தா வாங்கி, 113 சந்தாக்களை முகவரியோடு அளித்தார்கள்.

நான் வியப்போடு நம்முடைய துணைத் தலைவர் கவிஞர் அவர்களிடம் சொன்னேன்; பாராட்டி எழுதுங் கள் என்று சொன்னேன்.

கவிஞர் அந்த நிகழ்வைப் பாராட்டி ‘விடுதலை’யில் எழுதினார்.

நம்முடைய கழகத் தோழர்களுக்கும், அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தோழர்களும் சென்று ‘விடுதலை’ சந்தாக்களை அவர்களிடம் கேட்கவில்லை.  எல்லா இடங்களிலும் ‘விடுதலை’ பரவவேண்டும் என்ற செய்தியை ‘விடுதலை’யில் படித்துவிட்டு, அந்த முயற்சி யில் ஈடுபட்டு இருக்கிறார் அந்த அம்மையார் அவர்கள்.

என்னை மேலும் வியக்க வைத்த 

அலமேலுபுரம் தோழர்கள்!

அதற்கு பிறகு 20 நாள் கழித்து, ‘விடுதலை’ சந்தாக்களைத் தீவிரமாக சேகரிக்கும் பணியில் ஈடு பட்டுவிட்டு, ஒரு நாள் அலுவலகத்திற்கு வரும்பொழுது, அலுவலக வாயிலில் பறையிசை கருவிகளை வைத்துக் கொண்டு சிலர் நின்றிருந்தார்கள்;  அவர்களுக்கு அருகில் திருநங்கையர் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்பொழுதே தெரிந்தது அவர்கள் எல்லாம் கிராமத்திலிருந்து வந்த எளிய தோழர்கள் என்பது. அவர்களோடு திருமாமணி அவர்கள் இருந்ததை நான் கவனிக்கவில்லை.

நான் என் மனதிற்குள் என்ன நினைத்துக்கொண்டேன் என்றால், பல பேர் நம்மை சந்தித்து மனு கொடுக்க வருகிறார்களே, அதுபோன்று இருக்கும் என்றுதான்.

சரி, அவர்களை உள்ளே வரச் சொல்லுங்கள் என்றேன்.

பிறகுதான் தெரிந்தது திருமாமணி அம்மையார் அவர்கள்தான் அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்று தெரிந்தது. விழுப்புரம் மாவட்டம் அலமேலுபுரத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.

அந்த அம்மையார், உங்களை நேரில் பார்ப்பதற் காகவும், பெரியார் திடலைப் பார்ப்பதற்காகவும், ‘விடுதலை’ சந்தாக்களைக் கொடுப்பதற்காகவும்தான் இங்கே வந்திருக்கின்றோம் என்று சொல்லி,

பறையிசையை அடித்து, என்னை மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைத்தனர்!

பறையிசையை அடித்து, என்னை மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைத்து, 134 ‘விடுதலை’ சந்தாக்களைக் கொடுத்தார்கள்.

எல்லாருக்கும் எல்லாமும் -

அனைவருக்கும் அனைத்தும்

அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களுடைய குரல் ‘விடுதலை’   ஏடு என்பதற்கு அடை யாளம்தான் அவர்கள் கொடுத்த சந்தாக்களின் அடையாளம்.

134 ‘விடுதலை’  சந்தாக்கள்!

134 ‘விடுதலை’  சந்தாக்களை எப்படி பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்ற பட்டியலைக் கொடுத் தார்கள்.

1. திருநங்கைகள் 41 பேர்

2. நரிக்குறவர் காலனி 6 பேர்

3. சுயஉதவிக் குழு மகளிர் 17 பேர்

4. இருளர்கள் (பழங்குடியினர்) 8 பேர்

5. பறையடிப்போர் சங்கம் 6 பேர்

6. புரதவண்ணார்கள் 11 பேர்

புரதவண்ணார்கள் என்றால் யார்?

புரத வண்ணார்கள் என்று சமூகத்தைச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். புரதவண்ணார்கள் என்றால், நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது.

ஜாதியை எவ்வளவுக் கொடுமையாக ஆரியம் - பார்ப்பனியம் பிரித்திருக்கிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால், மண்டல் கமிசன் அறிக்கையைப் படிக்கும்பொழுதுதான் எனக்கும் தெரிந்தது.

புரதவண்ணார்கள் என்றால், திருநெல்வேலி மாவட் டத்திலிருந்து இந்துவிலிருந்து எடுத்து மண்டல் கமிசனில் போட்டிருக்கிறார்கள். 1934 இல் வந்தது.

மற்ற வண்ணார்கள் என்றால், எப்பொழுதும் சல வைத் தொழிலில் அழுக்குத் துணியை துவைத்து, சலவை செய்துகொடுப்பவர்கள் - சலவைத் தொழி லாளர்கள்.

அதிலே ஒரு பிரிவை பிரித்திருக்கிறார்கள் பாருங்கள் - புரத வண்ணார் என்றால், ஆதிதிராவிடர்களுக்கும் கீழே. மட்டத்தில் நாங்கள் உசத்தி என்று சொல்வதுபோல.

அவர்கள் இரவில்தான், தாமிரபரணி ஆற்றில் அழுக் குத் துணிகளைத் துவைக்கவேண்டும்; விடியற்காலை 4 மணிக்குள் வீட்டிற்குள் சென்றுவிடவேண்டும். அவர்கள் பகலில் வெளியில் வரக்கூடாது; அப்படி வந்தால், தீட்டாகிவிடுமாம்.

என்ன கொடுமை - எவ்வளவு காட்டுமிராண்டி நாடாக இருக்கிறது.

அந்த புரத வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தர்கள் 11 பேர் ‘விடுதலை’ சந்தாக்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

7. கிராமக் கோவில் பூசாரிகள் 9 பேர்

8. டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் 12 பேர்

9. துப்புரவுப் பணியாளர்கள் 9 பேர்

10. தேநீர்க் கடைக்காரர்கள் 2 பேர்

11. வேடம்பட்டு மாரியம்மன் கோவில் தெரு (காலனி) 10 பேர்

12. அறிஞர் அண்ணா மூட்டைத் தூக்கும் தொழி லாளர் சங்கம்  3  பேர்

ஆகக் கூடுதல் 134 சந்தாக்கள்!

தோழர்களே, இதுதான் சமுதாயப் புரட்சி!

இதுபோன்று ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது என்றால், இதுபோன்று எல்லா இடங்களுக்கும் ‘விடுதலை’ சென் றால், எந்தக் கொம்பனும் தமிழ்நாட்டை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும்.

‘விடுதலை’ வாளாகவும், 

பாதுகாப்புக் கேடயமாகவும் இருக்கும்!

‘விடுதலை’  வாளாக சுழலவேண்டிய நேரத்தில், வாளாக சுழலும்; கேடயமாகப் பாதுகாக்கவேண்டிய நேரத்தில், பாதுகாப்பு கேடயமாக இருக்கும்.

‘விடுதலை’  இல்லையென்றால், நாமெல்லாம் பட்டதாரிகளாக  ஆகியிருக்க முடியுமா?

பெண்கள் படித்திருக்க முடியுமா?

திராவிட இயக்கம் பாடுபட்டதினால்தான், திரும்பிய பக்கமெல்லாம் கல்லூரிகள் இருக்கின்றன; ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வழக்குரைஞர்களாக ஆக முடிந்தது; டாக்டர்களாக ஆக முடிந்தது. இவற் றையெல்லாம் நூறாண்டுகளுக்கு முன்பு நினைத்துப் பார்க்க முடியுமா?

குலக்கல்வித் திட்டத்தை இராசகோபாலாச்சாரியார் கொண்டு வந்தபொழுது எவ்வளவு பெரிய கொடுமை நடைபெற்றது.

அந்தக் குலக்கல்வித் திட்டம் நீடித்திருந்தால், நாம் யாரும் வழக்குரைஞர்களாகவோ, பொறியாளர்களா கவோ, மருத்துவர்களாகவோ ஆகியிருக்க முடியாது.

அந்த ஆபத்து இன்றும் தொடர்கிறது அல்லவா!

ஒரே நாடு, ஒரே தேர்வு என்று கொண்டு வர முயற்சிக்கிறார்கள்!

இன்றைக்கு ‘நீட்’ தேர்வு என்றும், ‘கியூட்’ தேர்வு என்றும், ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை’ என்ற பெயரிலும் வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்வு என்று கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.

இது என்ன கொடுமை?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், மாநிலங்களுக் கென்று கல்வி தனியே இருந்தது. நெருக்கடி காலத்தைப் பயன்படுத்தி, விவாதமே இல்லாமல், நாங்கள் எல்லாம் மிசா காலத்தில் சிறைச்சாலையில் இருந்தோம். அந்த செய்தி கூட வெளியில் வரவில்லை.

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப் பட்டியல் என்று தவறாக அழைக்கப்படக்கூடிய கன் கரண்ட் லிஸ்ட் பட்டியலில் - மாநிலமும்  - ஒன்றியமும் இரண்டு அரசுகளும் சட்டம் செய்யலாம் என்று மாற்றினார்கள்.

இன்னொரு பட்டியல் என்னவென்றால், ஒன்றிய அரசு மட்டுமே செய்யக்கூடிய அதிகாரம் பெற்ற அதிகாரம்.

இப்பொழுது கல்வி என்பது ஒன்றிய அரசிடமா இருக்கிறது? ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கிறது - மாநில அரசும், ஒன்றிய அரசும் சட்டம் செய்யலாம் என்றுதான் இருக்கிறது.

அதனால்தான் மாநிலக் கல்வி முறை என்று இருக்கிறது - மெட்ரிகுலேசன் கல்வி முறை - உயர்நிலைப் பள்ளிகள் என்று நமக்கு இருக்கிறது.

அதேபோன்று சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் ஒன்றிய அரசிடம் இருக்கிறது.

மாநிலப் பாடத் திட்டம் வேண்டும் என்கிறவர்கள் மாநிலப் பாடத் திட்டத்திலும், ஒன்றியப் பாடத் திட்டம்வேண்டும் என்றால், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலும் படிக்கலாம்.

ஆனால், இப்பொழுது  ‘‘நீ மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கக் கூடாது’’ என்று சொல்கிறார்கள். எப்படி இந்தி யைத் திணிக்கிறார்களோ, ஒரே மொழி என்று சமஸ் கிருதத்தை எப்படி திணிக்கிறார்களோ அதேபோன்று ஒரே கல்வித் திட்டம் - ஒரே தேர்வு என்று சொன்னால், என்ன அநியாயம் இது?

‘விடுதலை’ தானே தட்டிக் கேட்கவேண்டும்!

இதைக் கேட்பதற்கு ‘விடுதலை' போன்ற ஏடுகளைத் தவிர வேறு ஏடுகள் உண்டா?

பெற்றோர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, நண்பர்களே - இதற்கெல்லாம் குரல் கொடுப்பதற்கு வேறு ஆள் இல்லை; ‘விடுதலை’ தானே தட்டிக் கேட்கவேண்டும்.

(தொடரும்)


No comments:

Post a Comment