புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (7) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 1, 2022

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (7)

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (7)

ஈரோட்டில் கோடை விடுமுறையின்போது தந்தை பெரியார் அவர்களது பழைய ஜங்ஷன் சாலையில் உள்ள, ஒரு பெரிய வீட்டில் (தந்தை பெரியாரது சொத்துக்களில் ஒன்று அது) அதில் ஏறத்தாழ, 2 வாரங்கள் பயிற்சி வகுப்பு - திராவிட மாணவர்களாகிய எங்களுக்கு எடுத்து முடிந்த வுடன் - சுமாராகவும், நன்றாகவும் கொள்கை களைப் புரிந்து பேசும் பக்குவம் படைத்த மாணவர்களில் ஒரு பகுதியினரை அய்யாவும் மற்ற பயிற்சி தந்த அடுத்த நிலை கழகப் பிரச்சாரகர்களும், 3 பேர்களைத் தேர்வு செய்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி, பல ஊர்களில் பிரச்சாரம் செய்ய அனுப்புவார்கள்  - ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்த மாணவக் குழுவினர் மாவட்ட அமைப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரின் ஆணைக்குக் கட்டுப்பாடாக கீழ்பட்டே   மாணவர்கள் நடப் பார்கள்; கழகக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வதையும் மேற்பார்வை இடுவர்கள். எங்கள் நலம், பாதுகாப்பு எல்லாம் மாவட்ட அமைப்பாளர் பொறுப்பிலேயே விட்டு விடுவர். அவர்கள் மாணவப் பிரச் சாரகர்களான எங்களை சிறப்பாக கவனித்து சுமார் 20,25 கூட்டங்களை நாள் ஒன்றுக்கு ஒன்று வீதம் ஏற்பாடு செய்து பேச வைத்து; பிறகு ஊருக்கு அனுப்புவார்கள்!

அப்படி நான் - 1945 என்று நினைவு - சேலம் மாவட்டம் (பழைய சேலம் மாவட்டம் - பிரிக்கப் படுவதற்குமுன்பு கிருஷ்ணகிரி வரை இந்தப் பக்கம் பரமத்திவேலூர் வரை என்ற பெரிய மாவட்டம்).

பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் இன் றைய நூற்றாண்டு கண்ட நம்முடன் மகிழச்சியாக வாழும் அய்யா மானமிகு க.சண்முகம் அவர்கள் இல்லத்தில் தங்கி, பொத்தனூரில் மாலை கூட்டம் முடித்து, அடுத்த நாள் தவிட்டுப்பாளையம் கூட்டம் - காவிரி ஆற்று மணலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது - கட்டிப்பாளையம் (தாடி) கண்பதி, 'ஆச்சிக்கண்ணு' என்றழைக்கப்பட்ட பழனிமுத்து போன்ற முதுபெரும் பெரியார் தொண்டர்கள், பலரும்  இருந்தனர். வேலூர் (பரமத்திவேலூர்) புரட்சிக் கவிஞர் தனது மூத்த மருமகன் புலவர் கண்ணப்பனார் அவர்கள் வீட்டில் தன் மகன் கோபதி (பிறகு மன்னர்மன்னன்) மகள் சரஸ்வதி அம்மையாருடன் தங்கியிருந்தார்.

அவரையும் கூட்டத்திற்கு வந்து பேசுமாறு அழைத்தார்கள் உள்ளூர் கழக ஏற்பாட்டாளர்கள்! மிகுந்த மகிழ்ச்சியுடன் கவிஞர் அவர்களது அழைப்பை ஏற்றார். அப்போது இரண்டு பகுதிகளையும் இணைப்பதற்கு இப்போது இருப்பதுபோல பாலம் கட்டப்படாததால் 'பரிசல்' மூலமே அக்கரைக்குச் செல்ல முடியும்.

ஆற்று மணலில் மாலை கூட்டம்  - 6.30 மணி அளவில் துவங்கி மற்றவர்கள் எல்லாம் பேசி முடித்து விட்டனர். இறுதியில் சுமார் இரவு 9 மணியளவில் புரட்சிக் கவிஞர் பேச ஆரம்பித்தார். நின்று கொண்டு வேட்டியை எடுத்து இரண்டு கால்களிடையே சொருகிக் கொண்டு வலது கைகளின் விரல்களையும் பயன்படுத்தி இடி முழக்கம் செய்கிறார்!

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் ஓடியது. இரவு 12 மணி அளவில்- ஆற்று மணல் பரப்பில் கூடியிருந்த கூட்டத்தின் பெரும் பகுதி வீட்டுக்கு சென்று விட்டனர்! ஒரு சிலரே கேட்கின்றனர்! புரட்சிக் கவிஞர் இடியோசை நின்ற பாடில்லை - நெருப்புத் தெறிக்கும் சீர்திருந்த பகுத்தறிவுக் கருத்துக்கள் எரிமலை என வீழ்ந்து கொண்டே இருந்தது. கேட்டு ரசிக்கத்தான் போதுமான கூட்டம் இல்லை.

அய்யா க.சண்முகமும் மற்ற தோழர்களும் சேர்ந்து ஒரு சீட்டு எழுதி, இரவு மணி 12 என்று நினைவூட்டி பேச்சைமுடிக்க எழுதியபடி துண்டு சீட்டு - அதை அவரது மகன் மன்னர்மன்னன்  மூலம் கொடுத்தனுப்பினர்.

அவர் சிறிது நேரம் கவிஞர் பின்னாலேயே நின்ற வண்ணம் உள்ளார். இவர் ஆவேசத்தில் அவரைக் கவனிக்கவில்லை; அவர் கவிஞர் அவர்களை வருடி 'அப்பா, அப்பா' என்றார்.

கவிஞர் சற்று கோபமாக? பெருத்த குரலில் என்ன? என்றபடியே திரும்பிட - அவர் இரவு 12 மணி ஆகின்றது பெரும்பாலானோர் கலைந்து விட்டனர்.  சிலரே உள்ளனர். எனவே, சீக்கிரம் முடியுங்கள் - என்று கழக முக்கியத்  தோழர்கள் கூறுகின்றனர் என்று தயங்கித் தயங்கிக் கூறினார்.

உடனே திரும்பி, "அட, போறவன் போறான் இருக்கிறவன் இருக்கின்றான். நீ போய் உட்கார்ந்து கேள்! என்று கூறி விட்டு பேச்சை முடிக்காமல் தொடர்ந்து மேலும் ஒரு அரை மணி நேரம் எடுத்து முடித்தார்!

நாங்கள் சிலரே ஒற்றைப் படை எண் 'பட்டாள மாய்' கடைசிவரை கேட்டு - மணற்பரப்பில் ஆழ்ந்து    "தூங்கிய தமிழனை தமிழ் கொண்டு எழுப்பி" விட்டு பிறகு அனுப்பினோம்!

அது ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு சிலர் திருந்தினால் போதும் என்றே கருதிய பிரச்சாரம் அந்நாளில்....

(வளரும்)


No comments:

Post a Comment