சில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது வளர்ச்சி அல்ல அனைத்து தொழில்கள் - தொழில் முனைவோர்- மாவட்டங்களும் வளர்ச்சி பெறவேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

சில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது வளர்ச்சி அல்ல அனைத்து தொழில்கள் - தொழில் முனைவோர்- மாவட்டங்களும் வளர்ச்சி பெறவேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு, ஆக.27- யாரோ சில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது வளர்ச்சி அல்ல; அனைத்து தொழில்களும், தொழில் முனைவோரும், மாவட்டங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, சரளையில் நேற்று (26.8.2022) நடந்த அரசு விழாவில், 183 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக, 1,761 பணிகளுக்கு அடிக் கல் நாட்டி யும், 261 கோடி ரூபாயில் முடிந்த, 135 பணிகளை துவக்கி வைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணியை பார்வையிட்டேன். அப்பணிகளை விரைந்து முடித்து, சில மாதங்களில் செயல் பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விரைவில் நானே நேரடியாக வந்து அத்திட்டத்தை துவக்கி வைப்பேன். 

நெல் உற்பத்தி

கொங்கு மண்டலத்துக்கு நான் புறப்படும் முன், இரு வெற்றிச் செய்திகளை கேட்டு வந்தேன்.

கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத வகை யில், தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி, கடந் தாண்டு, 1.04 கோடி டன்னாக இருந்தது, இந் தாண்டு, 1.22 கோடி டன்னாக உயர்ந் துள்ளது.

இதன் வாயிலாக, 18 லட்சம் டன் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளோம்.

நெல் உற்பத்திக்கான பாசன பரப்பும் அதி கரித்துள்ளது. இது, சாதாரணமாக நடக்க வில்லை .

தமிழ்நாட்டில், 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய விதை நெல் வழங்கப் படுகிறது.

இத்திட்டத்தில் பயன் பெற்ற விவசாயிகள், கோபிசெட்டிபாளையத்தில் தாங்கள் அறு வடை செய்த நெல்லை மகிழ்வுடன் காண் பித்தனர்.

டெல்டா மாவட்டங்களில், சம்பா, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படு கிறது. குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கடைமடை வரை தண்ணீர் செல்லும்படி, முன்னதாக தூர் வாரப்பட்டதும் காரணமாகும்.

அடுத்தது, 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற சமூகநீதி எண்ணத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் சட்டப் பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

தமிழ்நாடு வளர்ச்சி

இத்துடன், மாநில சுயாட்சி, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என பல திட்டங்களால், இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது.

அதனால்தான் இந்திய அளவில், உயர் கல்வியில் சேருவோரும், அதிக பெண்கள் கல்வி பயிலும் மாநிலமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி.,யிலும், தமிழ்நாடு முதன்மையாக திகழ்கிறது.

பெண்களின் சமூக பாதுகாப்பு, பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கை, தனி நபர் வருவாய், மனித வள குறி யீடு, வறுமை குறைவு, சிசு மரணம் குறைவு, பட்டினி சாவு இல்லை என, தமிழ்நாட்டு வளர்ச்சியை தெரிவிக்கலாம்.

யாரோ சில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது வளர்ச்சி அல்ல; அனைத்து தொழில்களும், தொழில் முனைவோரும், மாவட் டங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

No comments:

Post a Comment