பாடத் திட்டத்தில் அருவருக்கத்தக்க மூடத்தனமான பிரச்சாரமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

பாடத் திட்டத்தில் அருவருக்கத்தக்க மூடத்தனமான பிரச்சாரமா?

 இந்திய விடுதலைப் போர் என்பது 1885ஆம் ஆண்டு வேலூரில் தொடங்கி 1947 ஆம் ஆண்டு நாடு விடுதலை ஆகும் வரை விடுதலைக்காக போராடிய பல்லாயிரக்கணக்கானோர் - சிறையில் பெரும் இன்னலை அனுபவித்து மரண தண்டனை பெற்று அரசியல் படுகொலைகள் செய்யப்பட்டனர். 

 இருப்பினும் இந்திய சுதந்திரவரலாற்றை எழுதினால் ஒருவர் மட்டுமே ஆங்கிலேயரிடம் தொடர்ந்து மன்னிப்புக் கடிதம் எழுதியும் 'நான் அய்ந்தாம் ஜார்ஜ் மற்றும் இங்கிலாந்து மகாராணிக்கு விசுவாசமாக இருப்பேன், இனி எந்த ஒரு அரசியல் நடவடிக்கையிலும் நானோ எனது குடும்பத்தினரோ ஈடுபடமாட்டார்கள்' என்று தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். இவர் 20-க்கும் மேற்பட்ட மன்னிப்புக் கடிதங்களை கொல்கத்தா சிறை, அந்தமான் சிறை மற்றும் சில மாதங்கள் இருந்த புனே சிறையிலிருந்தும் எழுதியுள்ளார். இதில் சான்றுகளாகக் கிடைத்தது 11 மன்னிப்புக் கடிதங்கள் மட்டுமே, மற்றவை என்ன ஆனது என்று தெரியவில்லை. 

 அதே நேரத்தில் ஆங்கிலேயர் சாவர்க்கருக்கு அக்காலத்திலேயே உதவித்தொகையாக ரூ.60 இன்றைய  மதிப்பில் ரூ.25,000 கொடுத்து வந்தனர். அப்போது தங்கம் ஒரு பவுன் ரூ.17  மட்டுமே.  இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மன்னிப்புக் கடிதம் புகழ் சாவர்க்கரை தியாகியாகவும் விடுதலைப் போராட்ட வீரராகவுமே சித்தரித்துவருகின்றனர். 

 அந்த வகையில், கருநாடகா மாநில எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் புதிதாக செய்யப் பட்டிருக்கும் மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையில் கருநாடக பாஜக அரசு அமைத்த பாடத்திட்ட குழு ‘காலத்தை வென்றவர்கள்’ என்ற பெயரில் புதிதாக இணைத்துள்ள பகுதியில் சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ளது. அந்தமான் செல்லுலார் சிறையில் ஈ, எறும்பு கூட நுழைய துவாரம் இல்லாத இடத்தில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் தினம்தோறும் தனது அறையில் இருந்து கிளம்பி, ‘புல்-புல்’ பறவை மீது அமர்ந்து இந்திய நிலப்பகுதிக்கு வந்து சென்றார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது, எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு கட்டுக் கதையை மாணவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுப்பது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். 

இது குறித்து மாநில கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறியபோது, ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட வீரரை பெருமைப்படுத்தும் விதமாக இவ்வாறு எழுதியிருப்பதில் எந்தக் குற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51கி(லீ) ஒன்றை அடிப்படைக் கடமையாக வலியுறுத்துகிறது.

விஞ்ஞான மனப்பான்மையையும் சீர்திருத்த உணர்வையும் மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று அந்தப் பகுதி வலியுறுத்தும் நிலையில் - சிறையில் இருக்கும் ஒரு கைதி சிட்டுக் குருவியைப் போன்ற 'புல் புல்' பறவையின்மீது அமர்ந்து அந்தமானிலிருந்து இந்திய நிலப் பகுதிக்கு வந்து சென்றார் என்று பாடப் புத்தகத்தில் இடம் பெறச் செய்வது எல்லாம் எத்தகைய மூடத்தனம்! இதனைப் படிக்கும் மாணவர்களுக்கு விஞ்ஞான சிந்தனை எப்படி வளரும்?

பிள்ளையாருக்கு வாகனம் மூஞ்சிறு என்று கதை கட்டிப் புராணம் எழுதி வைத்து, அதை மக்கள் மத்தியில் பக்திப் பிரச்சாரமாக செய்யும் கூட்டம் எதைத் தான் செய்யாது! 

No comments:

Post a Comment