தமிழன் என்ற பெயரால், திராவிடர் - தமிழர் மோதலை உருவாக்கும் - சதித் திட்டத்தை முறியடிப்போம்!
நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் கருத்துரை
சென்னை, ஆக.31 "தமிழர் - திராவிடர் என்ற மோதலை உருவாக்கும் பணியில் சங் பரிவார் இருக்கிறது - அனுபவம் மிகுந்த ஆசிரியர் வீரமணி நாட்டுக்கு வழி நடத்தும் இடத்தில் இருக்கிறார்" என்றார் நாடாளுமன்ற உறுப்பினரும், ‘ஜனசக்தி' ஆசிரியருமான கே.சுப்பராயன் அவர்கள்.
88 ஆண்டு விடுதலையின் 60 ஆண்டுகால ஆசிரியருக்குப் பாராட்டு விழா!
கடந்த 27.8.2022 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்ற ‘‘பத்திரிகையாளர்கள் - எழுத்தாளர்கள் பார்வையில் 60 ஆண்டுகால ஆசிரியர் மானமிகு கி.வீரமணி; 88 ஆண்டு ‘விடுதலை'யின் 60 ஆண்டு ஆசிரியருக்குப் பாராட்டு விழா’’வில் நாடாளுமன்ற உறுப்பினரும், ‘ஜனசக்தி’ ஆசிரியருமான கே.சுப்பராயன் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
தலைவர் அவர்களே, போற்றுதலுக்கும், பாராட்டு தலுக்கும் உரிய ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களே,
வரவேற்புரையாற்றிய சகோதரர் குமரேசன் அவர்களே, அருமைச் சகோதரர் பொன்.முத்துராம லிங்கம் அவர்களே,
ஆர்.விஜய்சங்கர் அவர்களே, ‘நக்கீரன்' கோபால் அவர்களே, எழுத்தாளர் திருமாவேலன் அவர்களே, மதுக்கூர் இராமலிங்கம் அவர்களே, சகோதரி ஓவியா அவர்களே,
நன்றியுரையாற்றவுள்ள சிறீதர் அவர்களே, மானமிகு பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிறைய பேர் பேசவிருக்கிறார்கள். எனவே, அதிக நேரம் பேசுவது என்பது அறிவுக்கே பொருத்தமற்றதாகும்.
மிகச் சுருக்கமாக இரண்டொரு விஷயங்களை, நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தையொட்டி சொல்லி, விடைபெற விரும்புகின்றேன்.
பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று என்பதல்ல இந்தப் பாராட்டு விழா!
தினசரி நாட்டில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; விழாக்கள் நடைபெறுகின்றன. அதுபோல, இது பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று என்பது போன்ற ஒரு நிகழ்ச்சியாக நான் இந்நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை.
அவரவர் தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொள்வதற்காக நிகழ்ச்சிகளை நடத்துவதும், பாராட்டுதலை வாங்கிக் கொள்வதும் மிக மலிவான முறையில் தொடர்ந்து நடந்து வருவதை நான் அறிவேன்.
ஆனால், இந்நிகழ்ச்சி முற்றிலும் வேறு வகைப்பட்டது என்பதை உணர்ந்து, அதை இன்றைய தமிழக இளைய தலைமுறைக்கு உணர்த்தவேண்டியது காலத்தின் தேவை என்று நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
இதில், பாராட்டுக்குரியவர் அய்யா வீரமணி அவர்கள். அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட ‘விடுதலை' - அதைத் தோற்றுவித்த தந்தை பெரியார் அவர்கள்.
இந்த மூன்று விஷயங்களும் இந்த பாராட்டு விழா வில் கவனத்தோடு பரிசீலிக்கப்படவேண்டியனவாகும்.
அதுவும் இன்றைய இந்தியாவில், கவலைதரத்தக்க இரவுகள் தினசரி விடிந்து கொண்டிருக்கின்றன. நாளைய விடியல் எப்படி இருக்கும் என்றே தெரியாது.
பிறர் நலம் பேண தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மறக்க முடியாத மகத்தான பங்களிப்பு
ஆபத்து கவ்வி நிற்கின்ற இன்றைய நிலையில், அதாவது மலைப்பாம்பு ஒன்று, மான்மீது விழுந்து, அதைச் சுருட்டி, இறுக்கி, எலும்பை முறித்து இரையாக்கிக் கொள்வதைப்போல, இந்திய ஜனநாயக அரசமைப் பையே சிதைத்து அழிக்கத் துடிக்கிற ஆபத்து மேலோங்கி இருக்கிறபொழுது, வாழ்நாள் முழுவதும் இந்தத் தீய சக்திகளை எதிர்த்துப் போராடுவதையே தன் மூச்சுக் காற்றாகக் கொண்ட தந்தை பெரியார் அவர் களால் தோற்றுவிக்கப்பட்ட ‘விடுதலை'யும், அந்த ‘விடுதலை’யில் எந்தப் பிரதிபலனும் இல்லாமல், வருவாய் வாரி இறைக்கிற, வழக்குரைஞர் தொழிலை நிராகரித்து, பிறர் நலம் பேண தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மறக்க முடியாத மகத்தான பங்களிப்பை செலுத்திய, ஆசிரியர் அவர்களைப் பாராட்டுவதும், நிகழ்கால தலைமுறைக்கு சில செய்திகளை சொல்லுவதற்குத்தான்.
60 ஆண்டுகளுக்கு முன்னர், ‘விடுதலை’ நாளிதழை நடத்துவது என்பது அவ்வளவு எளிய வேலையல்ல.
ஆபத்து சூழ்ந்துள்ள பொதுவாழ்வில், தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அய்யா வீரமணி!
புகழ்மிக்க தந்தை பெரியாரே, தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று, பிரச்சாரம் செய்துவிட்டு, அவ்வளவு எளிதில் திரும்பி வர முடியாத அள விற்கு, சுற்றிச் சுழன்றடித்த தாக்குதலுக்கு இடை யிலும், தான் மேற்கொண்ட கடமையை தவறாமல் செய்து முடித்ததைப் பார்த்து, ஆபத்து சூழ்ந்துள்ள இந்தப் பொதுவாழ்வில், தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அய்யா வீரமணி அவர்களை நான் தலைதாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறேன்.
நெருப்பில் நடக்கிற ஒரு வேலையை, கொஞ்சம்கூட கவலை கொள்ளாமல், அதை ஏற்று, அதை நடத்தி முடித்திருக்கின்றார் என்றால், அவருடைய அர்ப்பணிப்பு எவ்வளவு தெளிந்தது - தீரமிக்கது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
நீங்கள் நடந்த காலடிகள் தொட்டு வணங்கத் தகுந்ததாகும்
எந்தப் பிரதிபலனும் இல்லை -
தேர்தலில் இந்த இயக்கம் போட்டியிடுவதில்லை -
ஆதாய அரசியலுக்கு இங்கே வழியில்லை -
அடிபடலாம் - மலத்தை அள்ளிவீசலாம் -
செருப்பை வீசலாம் - கல்லும் மாரிபோல பொழிய லாம் -
இந்த நிலைமையிலும் இவற்றை ஏற்றுக்கொண் டீர்களே, நீங்கள் நடந்த காலடிகள் தொட்டு வணங்கத் தகுந்ததாகும்.
அத்தகைய அர்ப்பணிப்பு உங்களுக்கு மேலோங்கி இருந்ததால், ‘விடுதலை’க்கு ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டீர்கள்.
புராணங்களில் சொல்லுவார்கள், அம்புப் படுக்கை யில் பீஷ்மன் படுத்திருந்தான் என்று. உண்மையில் 60 ஆண்டுகள் நீங்கள் அம்புப் படுக்கையில்தான் படுத் திருந்தீர்கள்.
‘விடுதலை’யை தினசரி நடத்துவது என்பது - அதாவது போராடுபவனுக்குத் தேவையான கருவி களைத் தயாரிக்கிற உலைக்களமாக அவற்றை நீங்கள் நடத்தி முடித்திருக்கிறீர்கள்.
அத்தகைய மகத்தான பணிக்காக நீங்கள் வாழ்த்தவும், பாராட்டவும், வணங்கவும் தகுந்த பணியாற்றி முடித் திருக்கிறீர்கள்.
களத்தில் பல விழுப்புண்களைப் பெற்ற ‘ஜனசக்தி’யின் சார்பில் நான் வாழ்த்துகிறேன்!
எனவே, ‘ஜனசக்தி'யின் சார்பில், ஒரு மூன்று ஆண்டு கள் குறைவான வயதைக் கொண்ட, ஆனால், களத்தில் பல விழுப்புண்களைப் பெற்ற ‘ஜனசக்தி'யின் சார்பில் நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
நீங்கள் மென்மேலும் நல்ல ஆரோக்கியத்தோடு, சிக்கலும், நெருக்கடியும் நிறைந்த இன்றைய நிலையில், இவற்றை எதிர்கொள்வதற்குரிய வழிகாட்டுதலில் அனுபவச் செறிவுள்ள நீங்கள் வழிநடத்துவதுதான் பொருத்தம். நீங்கள் அதை வழிநடத்தவேண்டும். வழி நடத்தக் கூடிய கருவிகளை நீங்கள் தயாரிக்கவேண்டும் என்ற நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
இன்றுள்ள நிலைமையில், வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் எதை எதிர்த்துப் போராடினாரோ, அதே சனாதனம்தான் - அதே வருணாசிரம முறைதான் - அதே மனுதர்ம முறை என்ற பெயரால், சகல அக்கிரமங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
உங்களைப் போன்ற அனுபவமுள்ள தளகர்த்தர்கள் வழிநடத்துவது காலத்தின் தேவை!
இவற்றை, அதுவும் தமிழ்நாட்டில் கற்பனையே செய்ய முடியாத அளவிற்குப் பல தாக்குதல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
இவற்றையெல்லாம் எதிர்கொள்ள உங்களைப் போன்ற அனுபவம் உள்ள தளகர்த்தர்கள் வழி நடத்துவது காலத்தின் தேவையாகும்.
அவற்றைச் செய்ய நீங்கள் இன்னும் நீண்ட காலம் வாழவேண்டும் -
இன்றுபோல் என்றும் நீங்கள் வாழவேண்டும்-
அப்படி வாழ்வது தமிழ்நாட்டைக் காப்பாற்று வதற்காக -
தமிழ்ச் சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்காக -
இளைய தலைமுறையினருக்கு நீங்கள் ஆசிரியராக இருந்து சாகித்தியம் செய்யுங்கள்!
இந்த மண்ணும், மரபுகளும் எதைக் கற்றுக் கொடுத்ததோ, அவற்றிற்குக் கொள்ளி வைக்கின்ற தீய சக்திகளை எதிர்த்துப் போராடுகிற ஆற்றலை தமிழ் நாட்டிலும் இளைய தலைமுறையினருக்குத் தர நீங்கள் ஆசிரியராக இருந்து சாகித்தியம் செய்யுங்கள். அதன் மூலம்தான், இதற்கு ஒரு விடிவு வரும்.
அதற்கான முறையில் நீங்கள் நல்ல சிறந்த பங்களிப்பை செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில், நாடு எதிர்பார்க்கிறது.
பல தரப்பும் எதிர்பார்க்கிறது - நீங்கள்தான் இதற்குத் தலைமையேற்று வழிநடத்தவேண்டும் என்று.
எனவே, அன்பிற்குரிய ஆசிரியர் அய்யா அவர்களே, ஒரே ஒரு விஷயத்தை சொல்லி நான் விடைபெற விரும்புகின்றேன்.
நிகழ்காலத்தில் ஏற்பட்டுள்ள தீய சக்திகளின் சதிராட்டம் வலுவாக நடந்துகொண்டிருக்கிறது.
‘‘திராவிடர் - தமிழர்'' என்ற மோதல் திட்டமிட்டுத் தொடங்கப்படுகிறது.
இது யாருடைய ஆயுதம்?
தடுக்கிற சக்தி மிக்க மதில் தடை அரண் - திராவிட முன்னேற்றக் கழகம்
தமிழ்நாட்டில் பி.ஜே.பி. நுழைய இயலாதவாறு தடுக்கிற சக்தி மிக்க மதில் தடை அரண் - திராவிட முன்னேற்றக் கழகம்.
எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தகர்க்காமல், தமிழ்நாட்டில் காலூன்ற இயலாது என்பதை நடைமுறை அனுபவத்தில் புரிந்துகொண்ட பி.ஜே.பி., சங் பரிவார் அமைப்புகள் என்ன செய்கின்றன?
தமிழர்கள்தான் தி.மு.க.வின் அடித்தளமாக இருக்கிறார்கள். எனவே, எதிர்மறையாக போராடுவதைக் காட்டிலும், நேர்மறையான முறையில், தமிழனின் பெயரால், தமிழின் பெயரால், தமிழ் இனத்தின் பெயரால் வெறியூட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தளத்தைத் தகர்க்க, சங் பரிவாரங்களால் இறக்கி விடப்பட்ட ஆயுதம்தான் - திராவிடர் - தமிழர் மோதலைத் தூண்டிவிடுவதாகும்.
தமிழர்கள்தானே, கொத்துக் கொத்தாக திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கிறார்கள்?
இவர்களின் நோக்கம், தமிழர்கள்தானே, கொத்துக் கொத்தாக திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கிறார்கள்? எனவே, அவற்றை தமிழன் என்ற பெயராலேயே தூண்டிவிட்டு, சிதறடிப்பதன்மூலம் பலவீனப்படுத்தலாம் என்று கருதித்தான், தமிழன் என்ற ஆயுதத்தை சங் பரிவாரத்தின் துணையோடு கையிலெடுத்திருக் கிறார்கள்.
இவற்றை எதிர்த்துப் போராட, மிகச் சிறந்த தளகர்த்தர்கள் இன்றைய நிலையில் தேவை.
எங்களைப் பொறுத்தவரையிலும், பி.ஜே.பி. யால் இறக்கிவிடப்பட்ட ஆயுதம்தான் இது. இந்த ஆயுதத்தை எதிர்த்துப் போராட - விழிப்பூட்ட வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.
தமிழர்களின் ஆயுதம் அல்ல - சங் பரிவாரங்களின் ஆயுதம்!
எனவே, தமிழன் என்ற பெயரால், திராவிடர் - தமிழர் மோதலை உருவாக்குவதாக நினைத்துக்கொண்டு, தமிழர்களைத் தன்வயப்படுத்துகிற ஒரு தீய சக்தி தமிழ்நாட்டில் தொடர்ந்து பேசி வருகிறது, செயல்பட்டு வருகிறது.
இது தமிழர்களின் ஆயுதம் அல்ல - சங் பரிவாரங் களின் ஆயுதம். தமிழ்நாட்டில், தங்களை நிலைகொள்ள வைக்க இந்த ஆயுதமே பொருத்தம் என்று நினைத்து அவர்கள் இறக்கியிருக்கிறார்கள்.
எனவே, அவர்களைக் குத்திக் கிழித்துப் பாருங்கள் - அவர்களுடைய உடலில் ஓடுவது - சங் பரிவார ரத்தம்தான். தமிழன் ரத்தம் அல்ல.
தமிழ் பண்பாட்டு மூல கருத்துகளை உள்ளடக்கி யதல்ல.
பி.ஜே.பி. என்கிற ஒரு தீய சக்தியை, ஆர்.எஸ்.எஸ். என்கின்ற அழிவு சக்தியை அடையாளம் காட்ட...
எனவே, இந்தத் தீய கருத்து மேலோங்கி வருகிற நிலையில், பழைய பாணியையும் கைவிட்டு, நிகழ்காலத் தேவைக்குத் தக்கபடி, கிராமங்கள் முழுவதும் சென்று, இளைய தலை முறையினருக்கும், இளம் குருத்துக்களுக்கும், பி.ஜே.பி. என்கிற ஒரு தீய சக்தியை, ஆர்.எஸ்.எஸ். என்கின்ற அழிவு சக்தியை அடையாளம் காட்ட உங்களைப் போன்ற தலைவர்கள் வழிநடத்துவது காலமிட்டு இருக்கின்ற கட்டளை. அவற்றை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நான் உறுதிபடத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், ‘ஜனசக்தி' யின் சார்பிலும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும், ‘ஜனசக்தி’ ஆசிரியருமான கே.சுப்பராயன் அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்
No comments:
Post a Comment