அப்படியே உருவெடுத்து வந்திருக்கிறார் உழைப் பில், தந்தை பெரியாரைப் போலவே ஆசிரியரும்.
மனிதனை மனிதன் பிரித்தாளும் சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்திருந்த சமுதாயத்தில் எதிர்நீச்சலடித்து அடிச்சுவடு பதிப்பதும் பெரியாருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை; அந்த அடிச்சுவட்டில் அடி மாறாமல் நாளும் நாளும் அடிவைப்பதும் தமிழர் தலைவருக்கும் அவ்வளவு எளிதானதாக காணப்பட வில்லை.
அன்றைக்கு அவர் எல்லாவற்றையும் துறந்து விட்டு முழு நேரப் பணிக்கு வாராது இருந்தால் வார இதழாகி நின்றிருக்கும் ‘விடுதலை' என்பது நாம் அறிந்ததே எனினும்,
இன்றைக்கும் அவர் வழிப்பயணம் இவ்வளவு கடுமையாக இல்லாதிருந்தால் விழியற்றுப் போயி ருக்கும் தமிழ் நிலம் என்பதையும் நாம் அறிவோம்.
நிற்க நேரமே இல்லை. விடியலைத் தேடிய நெடும் பயணம்! ஒரு நாளா? இரண்டு நாள்களா? வாழ்க்கை முழுவதும் ஓடியே உழல்கிறார்! பரப்புரைப் பயண வண்டியிலேயே காலை நேர உணவு உண்டுவிட்டு, குண்டும் குழியுமான முதுகு வலி உள்ளிட்ட உடல் வலிகளை இலவசமாக ஈட்டிக் கொடுக்கும் சாலை பயணங்களினூடே( ஊற்றங்கரை- திருப்பத்தூர் சாலை விரிவாக்கப்பணிகளால்) விடுதலைக்கு 60 ஆயிரம் சந்தா சேர்ப்புக்கான கலந்துரையாடலில் அவரை சந்திக்கும் வாய்ப்பு 14.8.2022 அன்று கிடைத்தது.
பயணங்களில் அவரை அருகில் இருந்துப் பார்த்தால் பதைக்கிறது நம் உள்ளம். சற்று ஓய்வு கூட இல்லை. ஆனால் சற்றும் பின்வாங்கவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்தாலும் அவருக்கு இதே பேச்சு! இதே மூச்சு!!
வேடன் கண்ணுக்குத் தெரியும் பறவையின் தனித்த உடல் மட்டும் என்பது போல விடுதலையின் விழிப்புணர்வை இம்மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தன் தீராத வேட்கையை 60 ஆண்டுகளில் இன்னும் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
"இந்தத் துண்டு எதற்கு போடுகிறீர்கள்?" என்று செய்தியாளர்கள் என்னைக் கேட்டார்கள், பிச்சை எடுக்கத்தான் என்று சட்டென்று பதில் சொன்னேன் என்கிறார். இப்படி ஒருவரை பொதுவாழ்வில் எவரேனும் கண்டதுண்டா? "எடைக்கு எடை - என்ன தந்தாலும் எல்லாம் மக்களுக்கே, என் வீட்டிற்கு ஏதும் போகாது" என்பவரை, வாரி சுருட்டி வழித்து வைத்துக் கொள்ளும் சாமியார்கள் நிரம்பி வழியும் இந்த நாடு கேள்விப்பட்டதுண்டா?
"பெரியார் நம்மை நம்பித் தானே ஒப்படைத்து விட்டு சென்றார், விடுதலையைத் தூக்கி நிறுத்தா விட்டால் வரலாற்றுப் பிழை செய்தவர்கள் ஆகிவிட மாட்டோமா? நான்கு புறமும் செல்லுங்கள் தோழர்களே, நாலு பேரிடம் சொல்லுங்கள் தோழர்களே! உங்கள் வாகனங்களில் கூட ஸ்டிக்கர் ஒட்டி நீங்கள் எங்கு சென்றாலும் இப்படி ஒரு புரட்சி- பகுத்தறிவு இதழ் வெளிவருகிறது என்று மக்களுக்கு விளம்பரப் படுத்துங்கள் தோழர்களே!" என்று எத்தனை எத்தனை இடங்களில் பேசுகிறார் என்ற கணக்குக் கூட நம்மால் வைக்க இயலவில்லை.
ஓயாமல் ஓடுகிற அவருக்கு எரிசக்தி எங்கிருந்து வருகிறது?
ஒன்று மட்டும் நினைவுக்கு வருகிறது.
இது அவரே சொன்னது தான்.
"என்னை என் தலைவன் நன்றாகச் செதுக்கினான்,
தன்னைப் பின்பற்றி புத்துலகம் சமைப்பதற்கே" என்றவரன்றோ?
இந்தப் பாடெல்லாம் யாருக்காக?
பதக்கமா எதிர்பார்க்கிறார்? பாராட்டுப் பத்திரமா வாசிக்கச் சொல்லுகிறார்? இல்லவே இல்லை.
இந்த நாடு பெற்ற உரிமைகள் எல்லாம் மீண்டும் பறிபோகாமல் இருப்பதற்காகத் தான் இந்த வயதிலும் இளைஞர்களே கூட தயங்கி-அச்சப்படும்படியான இந்த ஓட்டம் முன்னெடுக்கிறார்!
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் துறவிகள் என்ற பெயரில்( இந்துமத அறிவு ஜீவிகள் 30 பேராம்) சாமியார்கள் கூட்டம் சேர்ந்து, இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும், நாடாளுமன்றத்தை தர்மசபை என அழைக்க வேண்டும், தற்போதைய கல்வி முறையை மாற்றி குலக் கல்வி வரவேண்டும், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வாக்குரிமை இல்லை, என்று இப்போது தீர்மானம் போட்டு இருக் கிறார்களே, அது தமிழ்நாட்டின் பக்கம் தப்பித்தவறியும் திரும்பி விடாமல் தடுப்பணைக் கட்ட ஓடுகிறார்.
ஆம். "சமுதாய சீர்திருத்த இயக்கங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது" என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மனித உரிமை ஆணையத்தின் பிரதிநிதியாக நின்று சென்னையில் நடைபெற்ற மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவில் தமிழ்நாட்டிற்குச் சூட்டிய புகழாரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் இந்த ஓட்டம் அடி நாதமாக இருக்கிறது.
- ம. கவிதா
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத்தலைவர்
No comments:
Post a Comment