உணர்ச்சியூட்டும் உன்னத விழா! பத்திரிகையாளர் பாராட்டு விழாவில் 'விடுதலை' ஆசிரியரின் பிரகடனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

உணர்ச்சியூட்டும் உன்னத விழா! பத்திரிகையாளர் பாராட்டு விழாவில் 'விடுதலை' ஆசிரியரின் பிரகடனம்!

 கவிஞர் கலி. பூங்குன்றன்

"நம் இனத்தின் போர் வாளாம் 'விடுதலை' நாளேட்டினை தந்தை பெரியார் அவர்கள் அருட்கொடையாகவும், அறிவாயுதமாகவும் வழங்கி விட்டுச் சென்றுள்ளார். இந்த 'விடுதலை'யின் வயதும் ஏறத்தாழ 75அய் நெருங்கவே செய்கிறது. அதன் வளர்ச்சிதான் நம் இனத்தின் எழுச்சி! இன்றேல் வீழ்ச்சிதான் என்பதை உணர்ந்தே 'விடுதலை' என்கிற போர் வாளை என்னை அழைத்து ஒப்படைத்து களத்தில் நின்று போராடக் கற்றுத் தந்தார் - கற்றவர்க்கும், கல்லாதவர்க்கும் களிப்பருளும் களிப்பான தலைவர் தந்தை பெரியார் அவர்கள்!"

"எனது 75ஆம் ஆண்டு பிறந்த நாளில் 'விடுதலையை' நாடெலாம், தமிழர் வீடெலாம் கொண்டு சேர்க்கக் கழகத்தின் செயல் வீரர்கள் - வீராங்கனைகள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது - எனக்குத் தெம்பூட்டி, மானம் பாராத இந்த மகத்தான பணி தொய்வின்றி நடைபெறத் தோள் கொடுக்கும் முயற்சியாகும்"

"ஊக்கம் தரும் மாத்திரைகளை இதன் மூலம் வழங்கி, "உழையுங்கள் - மேலும் தீவிரமாக" என்று ஆணையிடும் அரிய முயற்சி என்பதால் அனைவருக்கும் (ஆதரவு காட்டும் சந்தா நேயர்கள் உள்பட) எமது இதயங் கனிந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவற்றை எழுதியது 15 ஆண்டுகளுக்குமுன் - தனது பவள விழாவையொட்டி 'விடுதலை' சந்தாக்களை அளித்தபோது 'விடுதலை' ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டதாகும்.

நேற்று (27.8.2022) சென்னைப் பெரியார் திடலில் 'விடுதலை'க் குழுமத்தின் சார்பில்   "பத்திரிகையாளர்கள் பார்வையில்" ஆசிரியர் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பாராட்டு. நன்றி தெரிவிப்பு விழாவிலும், இதே கருத்தினை வேறு சொற்களில் விளம்பினார் மானமிகு ஆசிரியர் வீரமணி என்பது, இரண்டு விழாக்களையும் கண்டு களித்த நினைவாற்றல் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

நேற்றைய விழா ஓர் உணர்ச்சி பூர்வமானது மட்டுமல்ல - நாடு சந்திக்க இருக்கும் அபாயகரமான - காட்டுமிராண்டித்தனமான - பாசிச மதவாத ஆக்ரோச சக்திகளை நிர்மூலமாக்கியே தீர வேண்டும் என்று சகல தரப்பினரும் சூளூரை எடுத்துக் கொண்ட சுதந்திர சிந்தனை சுழன்றடித்த நறுமண விழாவாகும்.

உரையாற்றிய அத்தனைப்பேரும் வெறும் பாராட்டுரைகளைப் பகராமல் 'விடுதலை' எதற்காகப் பாடுபடுகிறது? 60 ஆண்டு காலமாக 'விடுதலை'யின் ஆசிரியராக இருக்கக் கூடியவர் எந்த சித்தாந்தத்தைக் கருத்தில் ஏந்தி, 'விடுதலை' என்னும் போர்வாளைக் கரத்தில் ஏந்தி சமர் தொடுக்கிறார் என்ற வகையில் சிந்தனைப் பூர்வமான விழாவாக அமைந்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.

'விடுதலை' எந்த ஒரு தனிப்பட்டவர்க்கோ, கட்சிக்கோ சொந்தமான ஏடல்ல - நாட்டு மக்களின் நல் உரிமைகளுக்கான ஏடாகும் - கொள்கைக் கோட்பாட்டுக்காக ஏறு நடைபோடும் ஏடாகும்.

பகுத்தறிவு, சுயமரியாதை பெண்ணுரிமை, சமூகநீதி சமதர்மம், சமத்துவம், பொதுவுடைமை, பொது உரிமை ஏற்றத் தாழ்வற்ற சமநிலைச் சமூகம் என்ற கொள்கையுடைய  - இந்தக் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் - "மானமும் அறிவும் மனிதர்க்கழகு!" என்னும் அனைவருக்குமான ஏடே 'விடுதலை' - இதனை இந்த நிகழ்ச்சியின் பிரகடனமாக அறிவிக்கிறேன்' என்று ஏற்புரையில் 'விடுதலை' ஆசிரியர் - திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்த போது எழுந்த கரஒலி கத்தும் கடலையே தோற்கடிக்கக் கூடியதாகும்.

ஓர் இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் ஒரு நாளேட்டை நாட்டுக்கே அர்ப்பணித்த வரலாற்றை - இதற்குமுன் யாரும் படித்திருக்க முடியாது - கேட்டிருக்கவும் முடியாது.

இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆங்கில இதழின் பொறுப்பாசிரியர் வீ.குமரேசன் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதிய முதல்  தலையங்கத்தைப் பற்றி (25.8.1962) விவரித்தார்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய 'விடுதலை' ஏட்டின் பொறுப்பாசிரியர் கலி. பூங்குன்றன் யார் யாருக்கெல்லாம் நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற பட்டியலை விரித்துக் கூறினார்.

இன்றைக்கு 'விடுதலை' வார ஏடாக மாறாமல் நாளேடாக நாளும் கருத்து மணம் பரப்பி கனல் வேக உரிமைப் போர்க் கொடி தூக்கி ஓர் இளைஞனுக்குரிய துடிப்போடு 88 ஆண்டிலும் - பீடு நடை வீறு நடைபோடுகிறது என்றால், அதற்குக் காரணம் 29ஆம் வயதில் 'விடுதலை' ஆசிரியர் பொறுப்பினை  - அய்யா தந்தை பெரியார் ஆணைப்படி ஏற்றுக் கொண்டதுதான்.

இதற்காக திராவிடர் கழகம் மட்டுமல்ல - தமிழ் கூறும் நல்லுலகமே தன் தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது.

ஆசிரியரின் மூத்த அண்ணன் மானமிகு கி. கோவிந்தராசன் தொடங்கி, ஆசிரியர் (ஆசான் புதூர்) ஆ. திராவிடமணி, அய்யாவுடன் அறிமுகப்படுத்திய டாக்டர் ஏ.பி. ஜனார்த்தனம், அரவணைத்த அன்னை மணியம்மையார் - ஆட்கொண்ட தந்தை பெரியார், குடும்ப வாழ்க்கையை நடத்திட பொருளாதார சிக்கல் குறுக்கிடக் கூடாது என்ற உணர்வோடு அதற்கான ஏற்பாடுகளைச் செய்த சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் அவர்களின் மாமனார் - மாமியார் சிதம்பரம் - ரெங்கம்மாள் இவர்கள் எல்லாம் நன்றிக்குரியவர்கள் அல்லவோ!

வளமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் ஆசிரியருக்கு வாழ்விணையராக வந்த நிலையில் 'நமது பொது வாழ்வுக்கு எந்த அளவு துணை இருப்பார்?" என்ற வினா ஆசிரியருக்கு எழுந்தது இயல்பே!

இந்த இடம் மிகவும் முக்கியமானது. அதனை நேற்றைய நிகழ்ச்சியில் கூறியதை அவர் வாயாலேயே கேட்பதுதான் பொருத்தமானது.

"எனது வாழ்விணையர் மோகனா - எனக்குச் சுமையாக இருக்கவில்லை - சுமை தாங்கியாகவே என்றும் இருந்து வருகிறார்!" என்று ஒரு பொது மேடையில் பெரியாரியம் ஒரு வாழ்க்கை நெறி என்பதை எடுத்துக் காட்டியது பெருஞ் சிறப்பே!

 நிகழ்ச்சியில் பேசிய பலரும் "வீரமணி மட்டும் விடுதலை ஆசிரியராக இல்லாமல், கருப்புக்கோட்டு அணிந்து வழக்குரைஞர் தொழிலில் இறங்கியிருந்தால் அவருக்குரிய ஆற்றலுக்கு நீதித் துறையில் பெரும் பதவிக்கு உயர்ந்திருப்பார்" என்று கூறினர்.

இந்த இடத்தில் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகவும், (வீரமணி இவரின் மாணவர்) பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருந்த ஜஸ்டீஸ் திரு. எஸ். மோகன் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. 

"இந்த விழா மகிழ்ச்சிக்குரிய விழா! எனது மாணாக்கர்களில் தலை சிறந்த சிறப்பான மாமணி ஆசிரியர் கி. வீரமணி தமிழ்நாட்டின் சிறந்த பொக்கிஷம்! 'விடுதலை' ஆசிரியர் பொறுப்புக்கு வராவிட்டால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகக்கூட வீரமணி ஆகி இருக்கக் கூடும். ஆனால் அதைவிட நாட்டுக்கு நம் இன மக்களுக்காக நீதியை வழங்கிக் கொண்டு இருக்கிறார்" என்று குறிப்பிட்டதை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் ஓவியா - 'விடுதலை' இல்லை என்றால் தமிழ்நாடே இல்லை, கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டு, சேலம் சிறையில் தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும், விடுதலையும் அவர்களுக்காக வாதாடியதைச் சுட்டிக் காட்டினார்.

நெருக்கடி நிலை காலத்தில் 'விடுதலை'யை எப்படியும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட முயற்சியையும் குறிப்பிட்டார்.

'தீக்கதிர்' ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் தனது உரையில் -

அரசியல், பதவி பக்கம் செல்லுவது கிடையாது என்று சபதம் எடுத்துக் கொண்டுள்ள ஓர் இயக்கம் நடத்தும் நாளேட்டிற்கு ஆசிரியராக இருப்பது என்பது சாதாரணமானதல்ல.

பெரியார் என்னும் பேருருவம் இன்னும் சிலரை அச்சுறுத்திக் கொண்டு இருப்பதையும் எடுத்துக்காட்டினார்.

"சிறீரங்கம் கோபுரம் மிகவும் உயரமானது. அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. சிறீரங்கம் ரங்கநாதன் கோயில் முன் அமைதியான வகையில் வடிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ள பெரியாரின் சிலைபற்றிதான் சீறி எழுந்து கொண்டு இருக்கின்றனர்" என்று - பெரியார் உடலால் மறைந்தாலும் உணர்வால் வாழ்ந்து கொண்டிருப்பதை வரைந்து காட்டினார்.

தந்தை பெரியாரும், விடுதலையும் எங்கள் பின்னணியில்  இருப்பதால்தான் எங்களால் 'நக்கீரனை' நடத்த முடிகிறது.

அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியாருடன் பேட்டி கண்டு நக்கீரனில் தொடர்ந்து வெளியிடப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டதை வரவேற்றதோடு அல்லாமல், அரவணைத்து, அந்த நூலை நாடெங்கும் கொண்டு சென்ற பெரும் பணியைச் செய்தது - ஆசிரியரும் திராவிடர் கழகமும்தான் என்றும் பெருமையோடு குறிப்பிட்டார் நக்கீரன் ஆசிரியர் கோபால்.

ஜனசக்தி ஆசிரியர் கே. சுப்பராயன் எம்.பி. அவர்கள், 'பத்தோடு பதினொன்று' என்ற வகையில் நடக்கும் நிகழ்ச்சியல்ல இது.

பெரியார், வீரமணி, விடுதலை - இம்மூன்றும் கவனிக்கப்பட வேண்டிய ஆளுமைகள் என்று குறிப்பிட்டார்.

இன்று நாட்டை இந்துத்துவம் என்பது கவ்விக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் சீரழிக்கப்படும் ஆபத்து தலை தூக்கி நிற்கிறது.

இந்தத் தீய சக்திகளை வேரறுக்கும் தொண்டினை தம் வாழ் நாள் முழுவதும் செய்தவர் தந்தை பெரியார்.

ஆதாய அரசியல் தேடும் அமைப்பல்ல இந்த இயக்கம். அடிபடவும், மலம் வீசப்படவுமான பொதுத் தொண்டு இது. 

போராடுகிறவர்களுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் பட்டறைதான் திராவிடர் கழகம் - விடுதலை - ஆசிரியர் வீரமணி என்று குறிப்பிட்டார்.

தி.மு.க.வைத் தகர்க்க வேண்டும் என்ற நோக்கில் காவிகளால் கட்டவிழ்க்கப்பட்ட பிரசாரம்தான் திராவிடர்  - தமிழர் என்பது. சங்பரிவாரால் கட்டவிழ்த்து விடப்படும் பிரச்சாரம் - அதற்குச் சிலர் துணை போகிறார்கள் - எச்சரிக்கை என்றும் ஒரு முக்கியமான கருத்தைப் பதிவு செய்தார் 'ஜனசக்தி'  ஆசிரியர் தோழர் சுப்பராயன்.

கலைஞர் தொலைக்காட்சி தலைமை செய்தி ஆசிரியர் ப. திருமாவேலன் தனது உரையில், 11ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது கோவில்பட்டி பயணியர் விடுதியில் ஆசிரியரைச் சந்தித்தேன், அன்று பார்த்த ஆசிரியரை அப்படியே இன்றும் பார்க்கிறேன்.

அய்யாவின் நூல்களும், ஆசிரியரின் உரைகளும் நான் படித்த வழக்குரைஞர் தொழிலுக்கு என்னைக் கொண்டு செலுத்தாமல் பத்திரிகைத் துறையில் என்னை வழியனுப்பி வைத்தன. 30 ஆண்டுகளுக்கு மேலாக இதழியல் துறையில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன்.

1962இல் விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்ற காலம் முதல் இன்று வரை தந்தை பெரியார் பிறந்த நாள் 'விடுதலை' மலர் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. இது சாதாரணமானதல்ல பெரும் சாதனை என்றும் குறிப்பிட்டார் தோழர் திருமாவேலன்.

'ஃபரண்ட் லைன்' ஆங்கில இதழின் மேனாள் ஆசிரியர் விஜய்சங்கர் தனது உரையில், 60 ஆண்டுகளாக ஓர் ஏட்டுக்குத் தொடர்ந்து ஆசிரியராக இருக்கும் நாட்அவுட் பேட்ஸ்மேன் நமது ஆசிரியர் என்று குறிப்பிட்டார்.

உலகில் எந்த ஓர் ஏட்டுக்கும் 60 ஆண்டு ஆசிரியராக எவரும் இருந்ததில்லை. அதிகபட்சமாக 54 ஆண்டுகள் இருந்ததுதான் இதுவரை சாதனை. அதனையும் முறியடித்தவர் நமது ஆசிரியர் தான் என்றார்.

'விடுதலை' ஏட்டின் தொடர் வாசகர், மேனாள் அமைச்சர் மதுரை பொன். முத்துராமலிங்கம் அவர்கள், இன்றைக்கு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 'திராவிட மாடல்' ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்றால், அது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் வழியில்தான். இவ்வாட்சிக்கு வழிகாட்டியாக பேராளராக, இருப்பவர் நமது ஆசிரியர் என்று குறிப்பிட்டார்.

ஏற்புரையை 'விடுதலை' ஆசிரியர் வழங்கினார். (உரை தனியே!)

'விடுதலை'யின் மூத்த செய்தியாளர் வே. சீறிதர் நன்றி கூற விழா இரவு 10.15 மணிக்கு நிறைவுற்றது.


No comments:

Post a Comment