பி.ஜே.பி.ஆளும் கருநாடகத்தில் கல்வித் துறையில் கடும் ஊழல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

பி.ஜே.பி.ஆளும் கருநாடகத்தில் கல்வித் துறையில் கடும் ஊழல்

 பெங்களூரு, ஆக. 30- கருநாடக அரசுக் கல்வித்துறையின் அனைத்து மட்டங்களிலும், லஞ்ச - ஊழல் முறைகேடுகள் மலிந்து விட்டதாக 13 ஆயிரம் பள்ளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 2 சங்கங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளன. இந்த விடயத்தில் தலையிடுமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கும் தங்களின் புகாரை இந்த சங்கங்கள் அனுப்பி வைத்துள்ளன. 

கருநாடக மாநில தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் அசோசியேட் மேனேஜ்மெண்ட்கள் (கே.ஏ.எம்.எஸ்.) மற்றும் பதிவுசெய்யப்பட்ட உதவிபெறாத தனியார் பள்ளிகள் மேலாண்மை சங்கம் ஆகியவை, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

“கருநாடக அரசாங்கம் அறிவுப்பூர்வமற்ற, அர்த்த மற்ற, பாரபட்சமான முறையில் தனியார் பள்ளிகளுக்கு விதிமுறைகளை வகுக்கிறது. இதுதொடர்பாக மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேசிடம் புகார்கள் தொடர்ந்து அளித்த போதிலும் எந்த பதிலும், நடவடிக்கையும் இல்லை. மாநிலக் கல்வி அமைப்புகளின் மோசமான நிலை, அதன் பிரச்சினைகள் ஆகியவற்றை கேட்கும் மனப்பாங்கு கல்வித்துறையிடம் இல்லை. அதிகளவிலான முதலீட்டாளர்களை அனுமதித்து லாப நோக்கில் இயங்கும் பெரிய பள்ளிகளுக்கு அனுமதி அளித்து இரண்டு வெவ்வேறு பாஜக அமைச்சர்கள் கல்வியை வணிகமயமாக்கி விட்டனர். இது குறைவான கட்டணம் வசூலிக்கும் ‘பட்ஜெட்' பள்ளிகளுக்கு பாதிப்பை ஏற் படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தையின் படிப்பிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

புதிய கல்வியாண்டு துவங்கி பல மாதங்களாகியும் அரசுப் பாடத்திட்டத்தின் புத்தகங்கள் பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் சென்று சேரவில்லை. 3 பேர் கொண்ட குழுக்களை நியமிக்கும் புதிய முறையை கல்வித்துறை தொடங்கியுள்ளது. இந்த குழு பேனல்கள் சரிபார்ப்பு என்ற போர்வையில் பள்ளிகளுக்கு செல்கின் றன. லஞ்சம் கொடுக்கவில்லை என்றால், சில குறை பாடுகளை கண்டுபிடித்து பள்ளிகளை துன்புறுத்துகின்றன. ஒவ்வொரு மட்டத்திலும் ஊழலைக் கட்டுப்படுத்த கல்வித்துறை தவறிவிட்டது. ஆசிரியர்களின் தொடர்ச்சி யான இடமாற்றம், மதப் பிரச்சினைகளை தூண்டிவிடுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வித்துறையை ஆட்டிப்படைக்கிறது. 

பள்ளி அங்கீகாரச் சான்றிதழ் வழங்குவதற்கு மாநில கல்வித்துறை லஞ்சம் கேட்கிறது. கல்வி அமைச்சருக்கு மாநிலத்தின் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளை கடுமை யான விதிமுறைகளில் இருந்து விடுவிக்கும் எண்ணம் இல்லை. இதன்மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் களுக்கான சுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, மாநில கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். 

அதேபோல், கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்குவதற்கு மாநிலக் கல்வித் துறை லஞ்சம் கேட்பது குறித்து பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்.” இவ்வாறு அரசு உதவிபெறாத கருநாடக தனியார் பள்ளி சங்கங்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளன.

No comments:

Post a Comment