அரியலூர் அழைக்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

அரியலூர் அழைக்கிறது!

வரும் 30ஆம் தேதி அரியலூரில் திராவிடர் கழக இளை ஞரணியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

கருத்தரங்கம், பட்டிமன்றம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி, மாலை திறந்த வெளி மாநாடு என்று அணி அணியான நிகழ்ச்சிகள் அணிவகுக்க இருக்கின்றன.

இளைஞரணியினர் சீருடையுடன் வீரநடை போட்டு வருவர், சமூகக் காப்பு அணியின் ஏறு நடை!

முதன்முதலில் தமிழில் கட்டளைச் சொற்களை அறிமுகப்படுத்திய இயக்கம் திராவிடர் கழகம். காவல்துறையினரே பார்த்து மூக்கின்மேல் விரலை வைத்து அதிசயித்தனர்.

என்னே நேர்த்தி! என்னே நேர்த்தி!!

மாநாட்டில் இளைஞர்கள் எழுச்சி முழக்கமிடுவர். இன்றைய நிலையில் நாட்டில் தலைவிரித்தாடும் மதவாத வெறியாட்ட மத யானையை வீழ்த்தும் வீர இளைஞர்கள் அணிவகுக்க இருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வாகனங்கள் மூலம் குவியும் செய்திகள் அன்றாடம் வந்து கொண்டே இருக்கின்றன.

மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் மக்களைக் கண் விழிக்கச் செய்ய மூடநம்பிக்கை ஒழிப்பை விளக்கும் அம்சங்கள் நம் மாநாட்டிற்கு உரித்தான தனித் தன்மை.

இந்திய அரசமைப்புச் சட்டம் (51A-h) இதைத்தானே கூறுகிறது.

சாமியார்களும், மந்திரவாதிகளும் நம் மக்களை எப்படி எப்படி யெல்லாம் ஏமாற்றிப் பிழைக்கும் எத்து வேலைகளில் ஈடுபட்டுப் பொருள் பறிக்கின்றனர் என்பதை சொற்பொழிவுகள் மூலம் விளக்குவதைவிட செய்முறைகளால், செய்து காட்டும் (Demonstration)  போது, மக்களிடம் உள்ள அறியாமை இருள் அகன்று உண்மையை உணரும் வெளிச்சத்துக்கு வருவர்.

அப்படித்தான் இந்தக்கால கட்டத்தில் இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி விரைந்து வந்து கொண்டுள்ளனர்.

நம் மாநாட்டுத் தீர்மானங்கள் எப்பொழுதும் தனித் தன்மையானவை. 1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் இன்றும் பேசுபொருளாக இல்லையா?

அந்தத் தீர்மானங்களும் அரசுகளின் சட்ட திட்டங்களாக வடிவம் பெறவில்லையா?

நமது மாநாட்டுத் தீர்மானங்களை மய்யமாக வைத்து ஆய்வுப் பட்டங்கள் பெறப்படுகின்றனவே - வெளிநாட்டவர் களும் இதில் ஈடுபட்டு வருகின்றனரே!

அரியலூர் மாநாடும் அரிய தீர்மானங்களை நிறைவேற்றும் - இன்றைய காலகட்டத்தில் எழுந்து நிற்கும் பிரச்சினைகளுக்கான பாதையையும் காட்டும். 

எதிர்கால இயக்கத் திட்டங்களுக்கான அடிகளை எடுத்துக் கொடுக்கும். அரசுகளுக்கு வழி காட்டும்.

போதையில் புதைந்து கிடக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும். சமூகநீதித் திசையில் பச்சை விளக்காக உயர்த்திப் பிடிக்கும்.

தேசிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை அரங்கேற்றத் துடிக்கும் ஆளவந்தார்கள் - அரிமாக்களின் குரலைக் கேட்டு பின்வாங்கும் நிலையை ஏற்படுத்தும்.

கடந்த ஒரு மாத காலமாக இயக்கத் தோழர்கள், இளைஞர் அணியினர் இரவு பகல் பாராமல் மாநாட்டு வெற்றிக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த உழைப்பின் பலனை வெற்றிக் கனியாக ருசிக்கப் போகிறோம்.

திராவிடர் கழக இளைஞரணி மாநாடாக இருக்கலாம்; இயக்கத்தையும் கடந்து எந்த வண்ணக் கொடியின் கீழ் இருக்கும் இளைஞர்களுக்கும் தேவையான மாநாடு இது. அவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும் கொள்கை முழக்க மாநாடு இது!

தமிழர் தலைவரின் சிறப்புரையும், நிறைவுரையும் முக்கியமானவை. அமைச்சர்ப் பெருமக்கள் ‘திராவிட மாடல்‘ அரசின் அங்கங்கள் பங்கு கொள்கின்றனர்.

அரியலூர் ஒரு காலகட்டத்தில் கடல் பரவிய பகுதியாக இருந்ததாக புவியியல் கூறுகிறது.

அந்த அரியலூர் நாளை மறுநாள் (30.7.2022) மக்கள்கடலைப் பார்க்கப் போகிறது. இளைஞர் சேனையின் கர்ச்சனை அலை ஓசையைக் கேட்கப் போகிறது.

எத்தனை எத்தனையோ மாநாடுகள் இயக்கம் சார்பில் அங்கு நடத்தப்பட்டதுண்டு, சுயமரியாதைச் சுடரொளியாகி விட்ட பெருமக்கள்தான் எத்தனை எத்தனைப் பேர்!

இப்பொழுது அம்மாவட்டம் இளைஞர்களின் பாசறையாகி வருகிறது. அதைத்தான் அரியலூரில் காணப் போகிறோம்.

அவசியம் வாருங்கள் தோழர்களே! அரிய உரைகளைச் செவி மடுக்கும் அரும் பெரும் வாய்ப்பு!

கருஞ்சட்டை என்றால் கட்டுப்பாட்டின் கவசம் என்று பொருள்!

எல்லா வகையிலும் பொருள் பொதிந்த அரியலூர் மாநாட்டில் சந்திப்போம்!

‘விடுதலை‘ சந்தாக்களையும் ‘போதும் போதும்' என்று சொல்லும் அளவுக்கு ஆசிரியரிடம் அணி வகுத்துக் கொடுப் போம்!

வாரீர்! வாரீர்!!

வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!!

No comments:

Post a Comment