Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
July 28, 2022 • Viduthalai

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (4)

புரட்சிக் கவிஞர் தான் கூறினார்: நன்கு ஆழ்ந்து கேட்டார். அதன்பிறகு "உன் முடிவு சரியானதுதான்; பிரெஞ்ச் மொழி இருக்கிறதே - அது இலக்கியத்தில் மிகுந்த மொழி மட்டுமல்ல... உலக சமாதான உடன்படிக்கைகளில் அந்த நாளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்ச் மொழிதான் - அவரவர்கள் மொழியில் இருந்தாலும்கூட. காரணம் அந்த மொழியில் பல மாற்றப்பட முடியாததாக இருக்கும் வசதியை அது உள்ளடக்கியது; அஃறிணைப் பொருள் என்று நாம் அழைக்கும் கட்டில், மேஜை போன்றவைகள் ஒவ்வொன்றையும் ஆண் பாலா, பெண் பாலா எனப் பகுத்துப் பார்த்து பெயர் வைத்துப் புழங்கும் மொழி" என்று அதன் பெருமையை, முக்கியத்தை, அதனைக் கற்று, அறிவை பெறுவதின் தேவையை எனக்கு சில மணித்துளிகள் பாடம் எடுப்பதைப்போல் சொல்லியதோடு,

"நீ உன் வகுப்பில் சொல்லிக் கொடுக்கும் தமிழைவிட, கழகத்தினரால், நம்ம ஏடுகள், நம்ம பேச்சாளர்கள், எழுத்தாளர்களால் அறிந்து கற்கும் தமிழ் கூடுதலாக - "தூக்கலானது" (இது அவர் மொழி). எனவே நீ தமிழ் வகுப்புக்குப் போய்தான் அதனைக் கற்று வரப்போவதில்லை - அதிகம் தானே கற்றுக் கொள்ள முடியும். அதனால் நீ பிரெஞ்ச் எடுத்துப்படி - புதுச்சேரியில் இருந்து வரும் அந்த பிரெஞ்ச் வாத்தியார் அபெல் குளோவியை எனக்குத் தெரியும்; நானும் அவரைப் பார்த்துச் சொல்லுகிறேன்" என்று பிரெஞ்ச் மொழி வகுப்பில் சேர என்னை மிகவும் ஊக்கப்படுத்தி சேரச் சொன்னார்!

சிறிதும் தயக்கமின்றி நான் பிரெஞ்ச் வகுப்பில் அந்த வாரமே சேர்ந்து, பாட புத்தகங்களைப் பெற்று படிக்கத் துவங்கி விட்டேன்.

என் பிரச்சினைக்குத் தீர்வு எவ்வளவு எளிதாக, எவ்வளவு பெரிய மேதையிடமிருந்து, தமிழ்ப் பெய்த தனிப்பெரும் இமயப் புலவரிடமிருந்து கிடைத்தது என்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது!

மற்றொரு செய்தி. புரட்சிக் கவிஞருக்கு சிகெரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. பிரெஞ்ச் முப்பட்டை வண்ணம் போட்ட நேஷனல் சிக ரெட்டு தான் பிடிப்பார்; ‘நேசுனால்‘ என்ற பிரெஞ்ச் உச்சரிப்பை அவர் கூறுவார்.

கடலூர் வந்து தோழர் பி.ஏ.இளங்கோவன் சக்தி சீயக்காய் தொழிற்சாலையில் தங்கும்போது அவரிடம் பேச, பழக, விருந்தில் கலந்துகொள்ள ஒரு பெரிய “ஜமாவே‘ சேர்ந்து விடும்!

இறைச்சி உணவு, மீன், நண்டு, கோழி - இவைகள் எல்லாம்  விருந்து இலைகளில் அணி வகுத்து அடுத்தடுத்து வரும்.

அவருக்கு மது அருந்தும் பழக்கமும் உண்டு என்பதால் அதனையும் தோழர் இளங்கோ நன்றாக (உயர்வகை) ஏற்பாடு செய்து, பக்கவாத்தியங்களும் இருக்கும். என்னைப் போன்றவர்கள் கண்டும் காணாதது போல் ஒதுங்கி நின்று அல்லது உணவுப் பந்தி வரிசையில் தள்ளி அமர்ந்து உண்போம்.

எவ்வளவு அருந்தினாலும் நிலை தடுமாற்றறமோ, அதிகமான குரல் உயர்த்தியோ, சில ‘குடிமக்கள்' உளறுவதைப்போல எதையுமே அவரிடம் காணவே முடியாது. கண்டதில்லை - அமைதி, புலால் உணவை சுவைத்துச் சுவைத்து நிதானமாக, பொறுமையாகச் சாப்பிடுவார்.

ஆங்கிலத்தில் "Mindfulness" (எதைச் செய்தாலும் அதிலேயே லயித்து ஈடுபாடு கொண்டு செய்வது) - (புத்தரின் அறிவுரைகளில் இதுவே முதன்மை) மனதை முழுமையாக அதற்கே அப்போது கொடுத்ததில் - வேறு கவனச் சிதறல் இல்லாத நிலை - அப்படியே உண்ணுவார் - அளவறிந்தே எல்லாம்!

பரிமாறிய ஒரு நண்பர் - அவரை ‘நாயிடு நாயிடு' என்றே தோழர்கள் கூப்பிடுவார்கள். அவர் மதுவைக் கூடுதலாக அருந்தி விட்டு, கவிஞருக்குப் பரிமாற தட்டை எடுத்து, இலையில்  உணவு வகைகளைப் போடத் துவங்க, ‘போதும்' என்றார் மெதுவாகக் கவிஞர். அவரோ "இல்லிங்கோ - இன்னும் கொஞ்சம்" என்று இளித்தபடி தள்ளாடி மேலும் எடுத்து வைக்க முனைந்தார். 

"ஏய், போதுன்னேன், போதுன்னேன், என்ன பரிவு என் மேலே? அறைவேன், அறைவேன் தெரியுமா?" என்று எச்சில் கையோடு குரலை உயர்த்திக் கூறினார். அவர் - அத்தனை பேரும் நடுங்கிவிட்டனர் - அவரை (நாயுடுவை) மற்றவர் அழைத்துச் சென்றனர். "ஏம்பா இவன் சாதாரண நேரத்தில் இப்படி உபசரிப்பானா? அவன் மேலே தப்பில்லை; அது பேசுகிறது அய்யா!" என்று தலை யில் அடித்துக் கொண்டு சிரித்தபடியே கூறினார். 

- (தொடரும்)


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn