'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 5, 2022

'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே!

கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’

நமது ‘விடுதலை’ நாளேடு, நமது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் - அவ்வுரிமைகளைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாகி, பகுத்தறிவின் பயன்பாட்டால் உலகில் போற்றத்தக்க சமுதாயமாக ஆக வேண்டும் என்பதற்காகவும், எத்த னையோ லட்சம் ரூபாய்கள், பொருள் இழப்பானாலும் கூட, சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அறிவிலும், மனத் திலும் லாபம் என்பதால், 88 ஆண்டுகள் எதிர்நீச்சல் போட்டு நடைபெற்றுவரும் ஓர் அதிசய நாளேடு!

ஒரு இலட்சிய, கொள்கை நாளேடு - சமூகப் புரட்சிக்கான கருத்தியல் போருக்கான பயணத்தில், இது காகிதம் அல்ல - ஆயுதம் - அறிவாயுதம் என்று உணர்த்தும் வகையில் அது சந்தித்துள்ள எதிர்ப்புகளை, அரசின் அடக்குமுறை காரணமாக விழுப்புண்களையும் ஏற்று வீறுநடை போட்டு வந்துள்ள வரலாற்றுச் சுவடுகளைப் படித்துப் பாருங்கள். அதன் அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி எப்படிப்பட்ட ‘‘விலை’’ கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது என்பது புரியும்.

விளையாட்டுக்காக அல்ல இந்த வீர நாளேடு -

வினையாற்றி சமூகத்தை மாற்றுவதற்காகவே!

அனைவரும் சமம், சமத்துவ, சம வாய்ப்பே அதன் இலக்கு; சமூகநீதி  - அதனை அடைய வழி மானமும், அறிவும் பெற்ற மனிதர்களாக மக்களை உருவாக்குதல் என்பதே அதன் குறிக்கோள்.

சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வு, மீள் பார்வை, மீட்டெடுக்கவே அதன் பயனுறு பயணம் என்பதைத் தொடங்குகையில் எவ்வளவு சங்கடங்களை, அடக்குமுறை அம்புகளை அதுவும் அந்நாளைய பிரிட்டிஷ் அரசிடமிருந்தும், அது எப்படி சந்தித்து மீண்டுள்ளது என்பதைப் புரிய பழைய நிகழ்வுகளை இங்கே தொகுத்து அளிக்கும் தொடர் இது!

படித்து அறிக, அறிந்து ஆதரவு தருக!

1935 ஆம் ஆண்டுக்குச் செல்வோமா?

அதன் தொடக்கத்திலேயே எப்படிப்பட்ட எதிர்நீச்சல், சோதனை, வழக்கு, தண்டனை, சிறைவாசம் அதன் ஆசிரியர், வெளியிடுவோருக்கு! 

இதயத்தைத் தாக்கும் செய்திகள் - தகவல்கள் அல்லவா இவை?

"நமது நாட்டில் பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் ஏற்பட்டிருக்கும் பல பத்திரிகைகளின் தலையெழுத்து உண்மையை எழுதி வீரப்போர் நடத்த யோக்கியதையின்றி பொய்யை எழுதி பேடிப்போர் நடத்தும்படியாக ஏற்பட்டுப்போய்விட்டது.

உண்மையும் யோக்கியதையும் பெருமையும் உள்ள பத்திரிகைகளாயிருந்தால் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு பத்திரிகை எழுதினால் அதுகளை எடுத்து சரியாய் போட்டு அதற்கு சமாதானம் சொல்லவேண்டியது சிரமம். அப்படிக் கில்லாமல் வெறும் வீணான வார்த்தையை உபயோகித்து மக்களை ஏமாற்ற நினைப்பது மிகுதியும் இழிகுணமென்றே சொல்லுவோம், "குடிஅரசா"னது, "தமிழ்நாடு" முதல் இதழ் வெளியானதும் அதில் உள்ள வாசகங்களில் சிலதை எடுத்து எழுதி பிறகு  அதை குற்றம் சொல்லி இருக்கிறதே அல்லாமல் திருட்டுத்தனமாகவோ யோக்கியப் பொறுப் பில்லாமலோ ஒரு வரியும் எழுதவில்லை. அதற்குத் "தமிழ்நாடு" இப்பவும் என்ன சமாதானம் சொல்லுகிறது என்றுதான் கேட்கிறோம். "சுதேசமித்திரன்" ராஜீய அபிப்பிராயமும் "சுதேசமித்திரன்" கொள்கையும் சிறீ வரதராஜுலு நாயுடு ராஜீய அபிப்பிராயமும் கொள்கையும் ஒன்றாயிருக்குமானால் "தமிழ்நாடு" பத்திரிகை தேசாபி மானத்தை முன்னிட்டு நடத்தப்படுவதாக எப்படி கருதக் கூடும்? அதோடு பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திலும் தனக்கு கவலை இருப்பதாய்க் காட்டிக்கொள்வதை எப்படி நம்பக்கூடும் என்றுதான் கேட்கிறோம்" என்றவாறு அமைந்துள்ளது.

தந்தை பெரியாரின் இதழியல் என்பது சமூக வளர்ச்சியை மய்யப்படுத்திய கருத்தியல் அடிப்படையிலான போராட்டமாகவே இருந்துள்ளதனைப் பார்க்க முடிகிறது. அப்போதைய பிராமண இதழ்களுடன் கடும் போரை முன்னெடுக்கும் பெரியார் எந்த நிலையிலும் சமரசமற்று இயங்கி இருப்பதனைக் காணமுடிகிறது.

அன்றைக்கு வெளிவந்து கொண்டிருந்த மெயில், சுதேசமித்திரன், தினமணி, விகடன், இந்து, சுயராஜ்யா, தமிழ்நாடு போன்ற இதழ்களின் கருத்தாதிக்கத்தை முறி யடிக்கத் தமது இதழ்களில் பெரியார் கணிசமான பக்கங் களை ஒதுக்கி இருப்பதனைக் காண முடிகிறது. தமது கொள்கையை மக்களிடையே கொண்டு செல்வதையும், மக்களுக்கு எதிராக அப்பத்திரிகைகளில் வெளியாகும் உள்ளடக்கங்களை வாசகர்களிடம் அம்பலப்படுத்து வதையும் மிக முக்கியமான இதழியல் கடமையாகப் பெரியார் கருதினார். இவ்வகையில் அன்றைய கால கட்டத்தில் பெரியாரால் கைக்கொள்ளப்பட்ட வழக்காடும் இதழியல் என்பது பின்பு திராவிட இயக்கத்தின் இதழியல் மரபாக, அணுகு முறையாக மாறியதைக் காணலாம்.

அவ்வகையில் விகடன் இதழின் போக்கைக் கடு மையாக அம்பலப் படுத்தும் பெரியார், "விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக்கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனியத்தைப் பிரச்சாரம் செய்துகொண்டு, பார்ப்பன ரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வரு கின்றன. அவைகளுக்கும் சுத்த ரத்த ஓட்டமில்லாத - சுயமரியாதை அற்ற பணமே பிரதானமே தவிர வேறொன் றும் இல்லை என்று கருதுகிற சில பார்ப்பனரல்லாதார் ஆதரவளிக்கின்றதையும் பார்த்து வெட்கப்படுகின்றோம் என்பதோடு, 

"10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை" என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்லுவது போல், பணத்தைவிட வாழ்க்கையைவிட மானம் பெரி தல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லா தாரைக் கண்டு இரங்குகின்றோம்" (பகுத்தறிவு, 30.9.1934) என்கிறார். 

பிராமண இதழ்களின் முதல் இலக்காகத் தந்தை பெரியாரே இருந்திருக்கிறார் என்பதனை அக்காலப் பத்திரிகைப் பதிவுகளிலிருந்து அறிந்துகொள்ள இயலுகிறது. பெரியாருக்கு மக்களிடம் இருக்கும் நற்பெயரை, நம்பகத் தன்மையை எப்படியாவது குலைத்துவிட வேண்டு மென்பதில் அன்றைய இதழ்கள் முனைந்து களமாடி இருப்பதனைப் பார்க்கமுடிகிறது. பின்வருவது இது குறித்த ஓர் இதழியல் பதிவு.

"‘சுதேசமித்திரன்' பத்திரிகை, பிராமணரல்லாதாருக்கும், முக்கியமாய் பிராமணரல்லாதாருக்கும், தொண்டர் களுக்கும், விரோதமாய் வேண்டுமென்றே செய்துவரும் சூழ்ச்சிகள்பற்றி எழுதி, மற்றும் மறுமுறையென்று எழுதி யிருந்தோம். அவற்றில் முக்கிய சிறீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கரைப் பற்றித் தானாலும் தான் கொண்டவர்களாலும் பொது ஜனங்களுக்கு எவ்வளவு கெட்ட அபிப்பிராயத்தைக் கற்பிக்க வேண்டுமோ, அவ்வளவையும் செய்து பார்ப்ப தென்றே முடிவுகட்டிக் கொண்டிருக்கிறது. சிறீமான் நாயக் கர் எந்த ஊருக்குப் போயிருந்தாலும், என்ன பேசினாலும் அவற்றைத் திரித்து ஜனங்களுக்குத் தப்பபிப்பிராயப்படும் படி கற்பனை செய்து பத்திரிகை களிலெழுதுவதும் அவற் றிற்கேற்றாற் போலவே சில ஈன ஜாதி நிருபர்களை அங் கங்கே வைத்துக்கொள்ளுவதும், அவர்கள் பேரால் சிறீமான் சுயராஜ்யம் வேண்டாமென்கிறார், ஜஸ்டிஸ் கட்சி யில் சேர்ந்துவிட்டார். அதிகார வாக்கத்தோடு கலந்து விட்டார், காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாயிருக்கிறார் என்று இவ்வாறாக அப்பத்திரிகை எழுதி வருகிறது." (குடி அரசு, 1.11.1925)

இத்தகைய பதிவுகள் சுதேசமித்திரனில் மட்டுமல்ல, விகடன், தினமணி, மெயில் உள்ளிட்ட பிராமண ஆதரவு இதழ்களில் வெளியாகி இருப்பதனைக் காண முடிகிறது.

அன்றைக்கு வெளிவந்த பத்திரிகைகள் காங்கிரசுக்கு ஆதரவாகவும், பெரியாருக்கு எதிராகவும் இயங்கின. அதனால் அரசியல் களத்திலும், இதழியல் களத்திலும் காங்கிரசையும், அதன் ஆதரவு சக்திகளையும் எதிர்த்துக் களமாட வேண்டிய கட்டாயம் பெரியாருக்கு உருவானது. 

- தொடரும்


No comments:

Post a Comment