சமச்சீர் கல்வி பாடத்திட்டம் சார்ந்த முதல் மெய்நிகர் ஆய்வகம் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் சார்ந்த முதல் மெய்நிகர் ஆய்வகம் தொடக்கம்

சென்னை, ஜூலை 6 சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உள்ள அய்ந்து மாநகராட்சிப் பள்ளிகளில் 4.7.2022 அன்று இந்தியாவிலேயே முதன்முறையாக  சமச்சீர் கல்வி பாடத்திட்டம் சார்ந்த  முதல் மெய்நிகர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) ஆய்வகமான ‘மெட்டா கல்வி’யை (Meta Kalvi)  அறிமுகப்படுத்தியுள்ளது.

சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். 

நிகழ்விற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மெய்நிகர் உயர் தொழில்நுட்பப் பள்ளியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பிறகு மாணவர்களுடன் இணைந்து 'ஹெட்செட்' அணிந்து தாமும் பாடங்களை ஆர்வமுடன் விர்ச்சுவல் ரியாலிட்டி (மெய்நிகர்) தொழில்நுட்பத்தில் பார்த்து மகிழ்ந்தார். 

சமீபத்திய ஆண்டுகளில் புதிய கற்பித்தல் - கற்றல் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை மெய்நிகர் உருவாக்கியுள்ளது. சிக்கலான அறிவியல் கருத்துகளை கற்பிப்பதற்கான ஒரு புதிய கல்வி முறையை விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தருகிறது.

இந்த வசதி மாநிலக் கல்வி வாரியத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் சார்ந்து ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து சென்னை மாநகராட்சியிலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு படிப்படியாக மெட்டா கல்வி ஆய்வக வசதி ஏற்படுத்தப்படும். 

அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் புதிய தலைப்புகள், பாடங்கள் எதிர்காலத்தில் சேர்க்கப்படும்.

மெய்நிகரா இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரகுராமன் ரவி, இந்தத் திட்டம் குறித்துக் கூறுகையில், “பள்ளிகளில் உள்ள மெய்நிகர் ஆய்வகங்கள் மாணவர்களுக்கு முழுமையான மற்றும் கற்பனையான கற்றல் அனுபவத்தை வழங்கும். எங்கள் மெய்நிகர் கற்றல் முறை கற்பனையைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது; இதன் மூலம் ஆக்கப்பூர்வமான சிந்தனை ஊக்குவிக்கப்படும், மாணவர்களுக்கு யதார்த்தமான, மறக்கமுடியாத கல்வி அனுபவங்களையும் வழங்கும் என்றார்.

No comments:

Post a Comment