இது என்ன நியாயம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 31, 2022

இது என்ன நியாயம்?

*தந்தை பெரியார் 

தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல்லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப்பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். நெசவாளிகளுக்குச் சில நன்மை செய்தார். தக்கப்படி செய்து  கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அவருடைய பதவியும் நிலைத்துக் கொண்டது என்று தெரிந்ததும் என்ன செய்தார்?

இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்ல ஆச்சாரியார் அவர்கள் மனதில் முடிவு கொண்டு அந்த மனுதர்மத்திற்கு என்ன பூர்வாங்க ஏற்பாடுகள் முதல் வேலைகள் செய்ய வேண்டுமோ அவைகளையெல்லாம் செய்யும் முறையில் உத்தியோகத்துறைகள் யாவும் பார்ப்பன மயமாக்கி விட்டார். அதுவும் நம் திராவிட ஆள்கள் உத்தியோகத்துறைப் பக்கம் திரும்ப முடியாதபடி கொஞ்சம் கூட நீதி நேர்மையில்லாத பார்ப்பனர்களையே எல்லாவற்றிற்கும் நியமித்தார். இந்த உத்தியோகத்துறை பார்ப்பனர்களின்  மயமானதோடு மாத்திரமல்ல; படித்தால் தான் இந்தச் சூத்திரர்கள் உத்தியோகம் வேண்டும்; பதவி வேண்டும் என்று கேட்பார்கள். சூத்திரர்கள் படிக்கக் கூடாது என்று முடிவு  செய்து, கல்வித்திட்டம் என்கிற பெயரால் வர்ணாசிரம புனர்நிருமாண முயற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்.

இந்தக் கல்வித் திட்டத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கிறது? ஆனால் இத்தகைய  எதிர்ப்புகளைப் பற்றி தோழர் ஆச்சாரியார் அவர்கள் - ஜன நாயகத்தின் பேரால் ஆட்சி புரிகிறவர்கள் - கொஞ்சமாவது கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா?

கல்வித் திட்டத்தைத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் கொண்டு வந்தவுடன் முதன் முதலாக  நான்தான் இந்தக் கல்வித் திட்டம் வருணாசிரமக் கல்வித்திட்டம்; இதை எதிர்த்து ஒழித்து ஆகவேண்டும் என்று  எதிர்த்தேன். மக்களும் என்னை ஆதரித்தார்கள்; பல மாற்றுக் கட்சிக்காரர்களும், ஏன் - காங்கிரசிலே உள்ள பலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். அதோடு மட்டுமல்ல 10, 15 ஜில்லா போர்டு, சேம்பர்ஸ் முதலியவைகளும் பல, நகரத்து முனிசிபாலிட்டிகளும் கிராமப் பஞ்சாயத்துக் களும், ஆசிரியர்களும், கல்வித் துறையில் நிபுணர்கள் என்று பெயர் பெற்றவர்களும் ஆக இப்படிப் பலரும், பலதரப்பட்டவர்களும், மாறு பாடு கொண்டவர்களும் எல்லோரும் ஒரு சேர இந்த வருணாசிரம புனர் நிருமாணக் கல்வித் திட்டத்தை எதிர்த்தனர். உள்ளபடியே ஜனநாயகத்தின். பேரால் ஆட்சியிலே இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண் டும்? ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் எதைப் பற்றியும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல், யார் என்ன சொன்னாலும் இதைக் கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது, கொண்டு வந்துதான் தீருவேன்.  இந்த வருடம் கிராமத்தில்தான் இந்தக் கல்வித் திட்டம் அமலிலிருக்கும். அடுத்த வருடம் நகரத்துக்கும் சேர்த்து இந்தக் கல்வித் திட்டம் விரிவாக்கப்படும் என்பது போலெல்லாம் பேசி வருகிறார். இது தான் நியாயமா? அல்லது இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சியா?

என்னய்யா இவ்வளவு அக்கிரமம் செய்கிறாரே! என்று மேலே சொன்னால், அவர்கள் சொல்லுகிறவர்களைப் பார்த்து, உங்களுக்கு நன்றியே இல்லை, அவர்மீது குறை சொல்லுகிறீர்களே என்கிறார்கள். இப்படி இருக்கிறது.

இந்தக் கல்வித் திட்டம் என்பது என்ன? இந்தத் திட்டத்தினுடைய அடிப்படை  என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்? இந்தக் கல்வித் திட்டம் என்பது வருணாசிரம புனர் நிருமாணப் பாதுகாப்புத்  திட்டமா அல்லவா? அதாவது  இந்தக் கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு  வகுப்புப் பிள்ளைகளும் நாளைக்கு ஒரு வேளை படித்துவிட்டு, மீதி நேரத்தில் அவரவர்களின் வருண ஜாதித் தொழிலைப் பழகவேண்டும் - செய்யவேண்டும் என்பதாகச் சொல்லுகிறது. ஜாதியின் பேரால் உடலுழைப்பு, அடிமை வேலை செய்கிறவர்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம்தானே! ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, அதாவது நாவிதர் மகன் சிரைப்பது, வண்ணார் மகன் வெளுப்பது, குயவர் மகன் சட்டிப்பானை செய்வது, வேளாளன் மகன் மாடுமேய்ப்பது, பள்ளியாண்டியன் மகன் பன்றி மேய்ப்பது  ஆகிய வேலைகளாகும். இப்படி நம் ஜாதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில், வேலை இருப்பது போலவே பார்ப்பன ஜாதிக்கும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் - அப்படியே அவர்களும்  செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை; நம்மைச் செய்யச்சொல்லுகிறார்கள். தங்கள் ஜாதித்தொழில் தங்களுக்கு வேண்டாம்; எங் களுக்கு உத்தியோகம்தான் வேண்டும் என்கிறார்கள்.

என்னய்யா! நாங்கள் மட்டும் ஜாதித் தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் எல்லாப் பதவி, உத்தியோகங்கள், அதிகாரங்கள் பெற்று மேலுக்குமேல் போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? என்று கேட்டால், சே! சே! நீ பேசுவது  வகுப்புவாதம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். இதுதான் ஆட்சியாக, அரசாங்க மாக, சுதந்திரமாக, ஜனநாயகமாக, குடி அரசாக, கீதையாக, பாரதமாக, ராமாயணமாக, கடவுள் பக்தியாக, ஆஸ்திகமாக, மதமாக இருக்கிறது. இந்த அக்கிரமமான, அநியாயமான நிலைமை கூடாது என்றால், அது வகுப்புத் துவேஷமாக, தேசத்துரோகமாக, நாஸ்திகமாக இருக்கிறது. அதாவது அப்படிச் சொல்லப்படுகிறது. இதுவா முறை? மக்கள்  யோசித்துப் பார்க்க வேண்டும்; எவ்வளவு வேதனை தரும்படியான நிலைமையில் இன்றைய ஆட்சியும் அரசாங்கமும் அதனுடைய  ஆட்சியும்! தோழர்களே! மறுபடியும் சொல்ல ஆசைப்படுகிறேன்; எனக்கும் தோழர் இராசகோபால ஆச்சாரியார் அவர்களுக்கும் சொந்த முறையில் ஏதும் பகைமையோ, விரோதமோ, பொறாமை உணர்ச்சி கொண்டோ நான் சொல்லவில்லை; மற்றவர்கள் வேண்டுமானால் அத்தகைய உணர்ச்சி கொண்டவர்களோ என்னவோ! என்னைப் பொறுத்தவரையில் இன்னும் அவர் தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான். நாளைக்கு வேலை போய்விட்டால் அவர் என் வீட்டுக்கு வருவார். நானும் மாலை போட்டு வரவேற்பேன். ஆதலால் ஆச்சாரியாரிடத்தில் நான் ஏதோ கசப்போ, காழ்ப்போ வைத்துக்கொண்டு பேசவில்லை.தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவருடைய இனத்துக்கு ஆக, பிறந்த பார்ப்பன இனத்துக்காகப் பாடுபடுகிறார். அவருக்குத் தெரியும், இன்று நாட்டிலே வளர்ந்து வருகிற உணர்ச்சி தம்முடைய சமுதாயமான பார்ப்பன சமுதாயத்துக்கு  விரோதமானது; ஆதலால் இந்த உணர்ச்சியை - இலட்சியத்தை - ஒழித்துக்கட்டித் தம்முடைய  இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஆக அவர் தீவிரமாக  முயற்சி செய்கிறார்.  நமக்குத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் எதிரியாய் இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு - அந்தச் சமுதாயத்துக்கு அவர் ஒரு அவதாரபுருஷர் என்று கருதுகிறார்கள். அப்படி அவர், அவருடைய  இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம். அவருடைய  பார்ப்பன இனத்தின் வளர்ச்சியும், வாழ்வும், நம் இனத்தினுடைய தாழ்விலும் அடிமையிலுந்தான்  ஏற்பட முடியும். அதனால் தான் அவர் இந்தப்படி செய்கிறார். ஆனால், அதே நேரத்தில் நம்முடைய திராவிட இனத்தின் வளர்ச்சியும் வாழ்வும் பார்ப்பானை நீக்கினால் தான் நம் அடிமைத்தனமும், தாழ்வும் ஒழியும். ஆதலால்தான் நாம் அடிமையும், தாழ்வும் ஒழிய வேண்டும் என்பதற்கு ஆகத்தான் நாம் பார்ப்பன துவேஷிகளாக, பார்ப்பானே வெளியேறு என்று முழங்குபவர்களாக  இருக்கிறோம்.

(15.11.1953இல் சென்னை வண்ணை நகரில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் 

தந்தை பெரியார் சொற்பொழிவு)   

- விடுதலை, 17.11.1953

No comments:

Post a Comment