திட்டக் குழுத் துணைத் தலைவர் பொருளியல் அறிஞர் ஜெயரஞ்சன்
நூல் வெளியீட்டு விழாவில், பொருளாதார அறிஞர் தமிழ்நாடு அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் தன் உரையில் முக்கியமாக இந்தியாவுக்கு முதலில் தேவை சமுதாய மாற்றம் - அதனை தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சாதிக்கிறது என்றார்.
அவர் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
திராவிடர் இயக்கத்தின் அடிப்படை சமூக நீதி - இது ஏன் தேவை? இந்தியாவில் மக்கள் வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும், சமத்துவத்திற்கும் தடையாக இருப்பது ஜாதி - இந்த ஜாதி பிரச்சினையில் கை வைக்காமல் எதையும் சாதிக்க முடியாது.
மற்ற மற்ற நாடுகளில் பொருளாதார மாற்றத்தினால் சமுதாய மாற்றம் நிகழ்ந்துள்ளது. திராவிட இயக்கம் சாதித்ததும் சித்தாந்தமும் என்ன? சமுதாய மாற்றத்தால்தான் பொருளாதார மாற்றம் என்ற கொள்கையும் செயல்பாடும் தான் நம்மை வளர்த்து எடுத்திருக்கிறது - வார்த்தெடுத்திருக்கிறது.
இலவசங்களைப்பற்றிக் கேலி செய்கிறார்கள். காமராசர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்கு முன்பே நீதிக்கட்சியில் பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பாலும் வாழும் பகுதியில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார் (சென்னை ஆயிரம் விளக்கு பகுதிகளில்).
இதற்கெல்லாம் நிதியை ஒதுக்க முடியாது என்று ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டதால் அது இடையில் கை விடப்பட்டது.
காமராசர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் திராவிட இயக்க ஆட்சியில் விரிவுப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டங்களால் தலைமுறை தலைமுறையாகக் கல்வி மறுக்கப்பட்ட பகுதியிலிருந்து பிள்ளைகள் பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். இன்று இந்தியாவிலேயே கல்வி வளர்ச்சியில் முன்னணியில் தமிழ்நாடு இருப்பதற்குக் காரணம் இந்தத் திராவிட இயல் - இயக்கக் கோட்பாடும் அணுகுமுறையும் தான்.
1980களில் இந்தியாவில் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் இப்பொழுது பீகாரில் இருப்பதுபோல்தான். இப்பொழுது இந்தியாவில் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு இருப்பது 1920இல் நீதிக்கட்சி- திராவிட இயக்கம் போட்ட சமூக நீதிக்கான விதைதான்.
வடக்கே வெறி - தென்னகத்தில் திணிக்கப்படும் வரி - இரண்டும் சேர்ந்தது தான் இன்றைய இந்தியா.
இன்றைக்கும் சமூகநீதியில் பல இடர்ப்பாடுகள், முட்டுக்கட்டைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டுதான் இருக்கின்றன - இனியும் அவை தொடரத்தான் செய்யும் - அவற்றை நாம் முறியடித்துத்தான் தீர வேண்டும். இந்த 90ஆம் வயதிலும் நமது ஆசிரியர் 'நீட்டை' எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்வதும், பிரச்சாரம் செய்வதும் அந்த நோக்கத்திற்காகத்தான்.
நம் கோட்பாடுகளுக்கும், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கும் அடிப்படை பெரியார்தான் - அதை நாம் மறந்து விடக் கூடாது!
இன்றைக்கு உ.பி.யின் நிலை என்ன? அங்கும் மதிய உணவு திட்டம் கொண்டு வந்து தீர வேண்டிய நிலை.
என்ன உணவு சப்பாத்தி - தொட்டுக் கொள்ள உப்பு. நன்றிக்கு அடையாளம் உப்பு என்பார்கள் அல்லவா - அதற்காகத் தான் உப்பு - மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிட!
மக்களைத் தேடி மருத்துவம் என்ற நமது தமிழ்நாடு அரசு 'திராவிட மாடல் அரசின்' செயல்பாட்டில் இது வரை 70 லட்சம் மக்கள் பயன் அடைந்திருக்கிறார்கள் - இது மேலும் தொடரும் - வளரும் என்றார் பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன்.

No comments:
Post a Comment