வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு தனி நல வாரியம்: அமைச்சர் மஸ்தான் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு தனி நல வாரியம்: அமைச்சர் மஸ்தான் தகவல்

நாகர்கோவில், ஜூலை 21  வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்காக தனி நல வாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கூறினார். 

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்காக தனி நல வாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கூறினார்.  நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் சிறுபான்மை நலத்துறை சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 முதல் 500 பேருக்கு நல திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இதுவரை 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 70-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை பராமரிக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம்.  இதற்காக ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஆலயங்களை பராமரிக்க இதுவரை ரூ.1.50 கோடி வழங்கி உள்ளோம். தமிழ்நாட்டில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.  இது தொடர்பாக ஆய்வு நடத்தி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சொத்துகள் கையகப்படுத்தப்பட்டு வக்பு வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தில் 2600 உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்க முதல்-அமைச்சர் ஆணை பிறப்பித்தார். இதுவரை 1600 உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. உலமாக்கள் இறந்துவிட்டால் அவர்கள் மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த மாதம் முதல் மாத உதவி தொகை பெறும் உலமாக்கள் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உலமாக்கள் உதவி தொகை பெற விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம்.   வக்பு வாரியத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே அரசு தலையிட முடியும். திராவிட மாடல் ஆட்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். இந்து, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று வேறுபாடு இல்லாமல் ஆட்சி நடைபெற்று வருகிறது.  வெளிநாடு செல்பவர்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நல வாரியத்தில் பதிவு செய்து சென்றவர்களுக்கு 60 வயது ஆனதும் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment