பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

பிற இதழிலிருந்து...

திராவிடர்களும் ஆளுநரும் (2)

அவர்களுக்கு  அதிகம்  பிடித்தது  ‘மனு'.  அது  என்ன  சொல்கிறது?  அசல்மனுதரும சாஸ்திரத்தின் பத்தாவது அத்தியாயத்தின் 33  ஆவது சூத்திரம் என்னசொல்கிறது என்றால், “பவுண்ட் ரகாஷ் சவுட்ர த்ரவிடா காம்போஜாய வநா ஷகாபாரதா பஹ்ளவாஷ் சீநா கிராதா தரதா கஷா''  என்கிறது சூத்திரம்.அதாவது, பவுண்டாம், அவுண்டாம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம்,பால்ஹீகம்,  சீநம்,  கிராதம்,  தாதம்,  கசம்  -  ஆகிய  இத்தேசத்தை  ஆட்சி  செய்தவர்கள்அனைவரும்  சூத்திரனாய் விட்டார்கள் - என்கிறது மனுசாஸ்திரம்.இதனை எழுதியவர் ஆங்கிலேயர் என்று ஆளுநர் நிச்சயமாகச் சொல்ல மாட்டார்என்று  நம்புவோம்.  திராவிடர்கள்  தகுதியிழந்த  விலக்கப்பட்ட  சத்திரியர்  மற்றும்விர்ஸபனுடைய  மகனான  திராவிடர்  வழி  வந்தவர்கள்  என்ற  பொருளில்  மனுசொல்வதாகவும்  வடமொழி  ஆய்வாளர்கள்  சொல்கிறார்கள்.அவர்களுக்கு அதிகம் பிடித்த ‘மகாபாரதம்' என்ன சொல்கிறது தெரியுமா?

பாரத  ராசசூய  பருவத்து  வியாசர்,“திராவிடர்  காமதேனுவின்  பால்மடியிலிருந்துண்டானவர்''  என் கிறார். வியாசபாரதம்  சபா  பருவத்தில்  பாண்டிய  நாட் டின்  மணலூர்புரத்து  அரசன்மலயத்துவச   பாண்டியனை   அருச்சுனனுக்கு   மாமனாகச்   சுட்டப்படுகிறது. மகா பாரதத்தில்  கொடுக்கப்பட்டுள்ள  இரண்டு  தகுதியிழந்த  சத்திரியர்களின் பட்டியலில் திராவிடர் என்போர் தென்னிந்தி யாவைச் சேர்ந்தோர் என்று உள்ளது. “அங்கம் வங்கம் கலிங்கம் கவுசிகம் சிந்து சோனகம் திரவிடம் சிங்களம்மகதம் கோசலம் மராடம் கொங்கணம் துளுவம் சாவகம் சீனம் காம் போசம் பருணம்பப்  பரமெனப்  பதினெண்பாடை” என்னும்  திவாகரம்  நிகண்டு  கூறுகிறது.

  நாலாயிர  திவ்ய  பிரபந்தம்  ‘திராவிடவேதம்'  என்று  அழைக்கப்பட்டது.  திருவாய்மொழியை  ‘திராமிடோயு பனிஷத்' என்றார்கள்.  அதாவது  தமிழ்  உபநிடதம்  என்று  பொருள்.  இவை  அனைத்தும் ஆங்கிலேயர்க்கு  முந்தையவை. பக்தி  தோன்றியது  ‘திராவிடத்தில்'  என் கிறது  பாகவதம்.  ‘உத்பந்நா  திராவிடே'என்கிறது பாகவ தம். பாகவத புராணம் சத்தியவிருதனை திராவிடர்களின் அரசன்என்கிறது. 

ஏழாம் நூற்றாண்டில் குமாரிலபட்டர் ஆந்திர திராவிட பாஷா என்கிறார்.விசிஸ்டாதுவத  இலக்கியம்  ‘திரமிடாச்சார்யார்'  என்று  குறிப்பிடுகிறது.  ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது இது.  தசகுமார  சரித்திரம்  திராவிட  நாட்டைக்  குறிப்பிட்டு  அதில்  காஞ்சி  நகரம்உள்ளதாகச்  சொல்கிறது.இங்கு திராவிட என்பது பூகோள ரீதியில் தமிழர்கள் என்று சில மொழியாராய்ச்சி யாளர்களும்,  தென்னிந்தியர்  அல்லது  தென்னிந்திய  பகுதி  மற்றும்  தென்னிந்தியமொழியைச்  சேர்ந்தவர்கள்  என்று  சிலரும்  எழுதியிருக்கிறார்கள்.  இதற்கு    சமண, பவுத்த ஆதாரங்களும் இருக்கின்றன.  கி.பி. 470 இல் வச்சிர நந்தி என்ற சமணமுனி  தனது  சமயத்தைப்  பரப்புவதற்காக  ‘திரமிள  சங்கம்'  என்ற  சங்கத்தை மதுரையில் உருவாக்கினார். இதனை சமணக் கல்விக் கான முயற்சியாகவே பார்க்கவேண்டும்.  யுவான்சுவாங்  தமிழ்நாடு  வந்தபோது  தன்  குறிப்புகளில்  காஞ்சியை திராவிட நாட்டின் தலைநகராகச் சொல்கிறார். பழங்காலத் திலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரை உள்ள கல்வெட்டு களில் சமஸ்கிருதமொழியில் காணப்படும் திரவிட, திராவிட, திரமிட ஆகியவையும், பிராகிருத மொழியில் சொல்லப்படும் தமில, தமிள, த்ரமிட, திரமிள முதலிய பொதுப்பெயர் தமிழ்மொழியைத்தான்  சுட்டுகின்றன  என்கிறார்  மொழியியலாளர்  கே.வி.இராமச்சந்திரராவ். இந்திய அளவிலான முக்கியமான ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்களும் இப்படித்தான் சொல்கிறார்கள்.

‘ஆரியர்கள் குறிப்பிடும் கருப்பர் கள் திராவிடர்களே'  என்றார்கள் சில ஆய்வாளர்கள். அதாவது இடத் தின், இனத்தின், மொழியின் பெயராக மாற்றி மாற்றி குறிப்பிடப்பட்டு வந்துள்ளது ‘திராவிடம்'  என்ற  சொல்.  இது  ஆங்கிலேயர்  காலத்துக்கு  முன்பே சொல்லப்பட்டு வந்துவிட்டது. எனவே, ‘ஒற்றுமையாக' இருந்து வந்த மக்களை ஆங்கிலேயர்தான் 'ஆரியர் - திராவிடர்' எனப் பிரித்தார்கள் என்று ஆளுநர் சொல்வது உண்மையான வரலாறு ஆகாது.ஆர்.எஸ்.சர்மா என பரவலாக அறியப்படும் ராம் சரண் சர்மா என்பவர்இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர். அவர் எழுதிய புத்தகங் களைஆளுநர் வாசித்தால் இப்படி பேச மாட்டார். நாடு உருவாவதற்கு சமூகப் பிரிவினையும், வர்ணங்களும் காரணமாக அமைந்திருப்பதை புராணங்களின் ஆதாரங்களைக் கொண்டு எழுதியவர் அவர்தான். மக்களை நான்கு வகைவர்ணங்களாக  புராணங்கள்  பிரித்ததை  விரிவாக  எழுதி  இருக்கிறார்.‘வாழ்க்கை முறையும், தங்கும் இடமும் நிலையாகிவிட்ட வேதகால மக்கள்தங்களை நான்கு வர்ணங்களாகப் பிரித்துக் கொண்டார்கள்' என்று புராண ஆதாரங்களைக்  கொண்டு  சொல்கிறார்.  எனவே,  மக்களிடையேயான பிரிவினை  என்பது  அவர்களது  வேதகாலத்திலேயே  உருவாகிவிட்டது.

ஆங்கிலேயர் இதனை உருவாக்கவில்லை.  (Aspects  of  political  ideas  and  institutions  in  ancient  india   -  என்ற  அவரதுநூலைக்  காண்க!)தனது பதினைந்து ஆண்டுகால உழைப்பின் அடிப்படையில், ‘சூத்திரர்யார்?'  என்ற  ஆய்வு  நூலை  அம்பேத்கர்  எழுதினார்.  அதில்  அவர்சொல்கிறார்:  “இந்தோ  ஆரிய  சமூகத்தில்  சூத்திரன்  நான்காம் வர்ணத்தான். இது ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 96ஆவது சுலோகமாக உள்ள புருஷசூக்தாவில் உள்ளது. ஆரிய சமூகத்தின் நான்குபிரிவுகளைப் பற்றிப் பேசுகிறது” என்கிறார் அம்பேத்கர். எனவே சமூகப்பிரிவினை என்பதெல்லாம் ஆங்கிலேயர் வருகைக்கு எத்த னையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்த விவகாரங்கள் ஆகும். சூத்திரர்கள்  குறித்த  விரிவான  ஆராய்ச்சியை  இந்திய  அளவில்  செய்தவர்ஆர்.எஸ்.சர்மா  எனப்படும்  ராம்சரண்  சர்மா.  சூத்திரர்  குறித்த  ஆதிசங்கரரின் விளக்கத்தை  ஆர்.எஸ்.சர்மா  குறிப்பிட்டுள்ளார்.  தர்ம  சூத்திரங்களில்  உணவுத்தீட்டு குறித்து இருப்பதையும் சொல்கிறார். sudras in ancient india - என்ற நூலைக்காண்க!  இது  ‘பண்டைய  இந்தியாவில்  சூத்திரர்'  என்ற  தலைப்பில்  தமிழில் வெளியாகி  உள்ளது) “உண்மையில்  சண்டாளர்கள்  ஓர்  ஆதி  இனக் குழுவாக  இருந்ததாகத்  தெரிகிறது.  இது  அவர்கள்  தங்களின்  சொந்தப்  பேச்சு  மொழியைப்  பயன்படுத்துவதிலிருந்து தெளிவாகிறது. ஒரு ஜைனப் பிரதியில் அவர்கள் சபரர், திராவிடர், கலிங்கர், கவுடர்,  காந்தாரர்  போன்ற  பிற  இனக் குழுக்களுடன்  கூடவே  குறிப்பிடப்பட்டுள்ளனர்” என்றும் சொல்கிறார். (பண்டைய இந்தியாவில் சூத்திரர் -  பக்கம் 149) “பிராம ணிய  மயப்படுத்தப்படுவதற்கு  முன்னர்  தெற்கே  திராவிடர்கள்  மத்தியில் தீண்டாமை    நிலவியதற்கு    சான்று    இல்லை”  என்றும்    இவர்  எழுதி  இருக்கிறார். இவை  அனைத்தும்  நம்முடைய  கருத்துகள்  அல்ல,  ஆர்.எஸ்.சர்மா  என்ற வரலாற்றாசிரியரின்  கருத்துகள். ஆங்கிலேயர்  வருகைக்கு  முன்னால்  எல்லோரும்  ஒன்றாக வாழ்ந்தார்கள் என்பதும் கற்பனையே! திராவிடம் என்று கற்பித்தவர்கள் ஆங்கிலேயர்களே என்பதும் கற்பனையே!

நன்றி: 'முரசொலி' தலையங்கம் - 13.7.2022


No comments:

Post a Comment