ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி -1: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் சிங்கங்களைப் பார்த்தீர்களா?

- சீ.ரங்கராஜ், திருச்சி

பதில்:  அசோக சக்ரவர்த்தி சிங்கங்களைக் காணவில்லை.நரசிம்ம அவதார சிங்கங்கள் இடம்பெற்று ஹிந்துத்துவாவை நினைவூட்டும் “திருப்பணி” போல் உள்ளது!

கேள்வி -2: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் கைகளை விட்டு முழுதாகப் போய்விட்டதா? மாநில அரசின் அமைச்சர் புறக்கணிக்கும் அளவுக்கு வரம்பு மீறுகிறதே ராஜ்பவன்?

- செல்லக்கண்ணு, மானகிரி

பதில்: உயர்கல்வித் துறை அமைச்சரின் நிகழ்ச்சி புறக்கணிப்பு ஒரு சிறு பொறி என்று ஆளுநர் கருதக் கூடாது.  வரம்பு மீறிய மோதல் அரசியலுக்குக் கால்கோள் விழா நடத்துவதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்பு - மக்கள் எழுச்சியை இவரே வரவழைக்கும் நெறிகட்ட செயலே!

கேள்வி -3: இலங்கையில் போகப் போக நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறதே, அகந்தையில் ஆடும் ஆட்சியாளர்களுக்கு இவையெல்லாம் பாடங்களாகத் தெரியாதா? 

- க.விநோதராஜா, திருநெல்வேலி

பதில்: வரலாற்றில் பாடம் கற்கத் தெரியாதவர்களை வரலாறு குப்பைப் புதைக்குழிக்கே அனுப்பியதாகத்தான் வரலாறு!

கேள்வி -4: நாடாளுமன்றத்தின் புதிய ‘unparliamentary’ அகராதி, குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்பா? 

- பா.பெரியார்பிரியன், கருங்கல்பாளையம்

பதில்: சகிப்புத்தன்மை இன்மை மட்டுமல்ல, விமர்சனங்களை எதிர்கொண்டு துரித முறையில் பதில் அளித்து, “திருத்த வேண்டியவர்களைத் திருத்தலாம்; திருந்த வேண்டியவர்கள் திருந்தலாம்” என்ற தத்துவத்திற்கு இது எதிரான ஜனநாயக உரிமை பறிப்பே! நிழலைக் கண்டே நாளை அச்சப்பட்டு அலறும் நிலை அவர்களுக்கே உருவாகலாம்! எனவே அதிகாரம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் ஆணையிடலாம் என்பது நல்ல மக்களாட்சி நெறிமுறை ஆகாது!

கேள்வி -5: 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரபஞ்சத்தின் ஒளிப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் பதிவு செய்து வெளியிட்டுள்ளதே நாசா. கடவுளின் தோற்றம் இதற்கு முன்பா? பின்பா?

- சவு.இளங்கோவன், அகரம்பேட்டை

பதில்: சனாதனம் பேசும் அதிமேதைகளுக்கு இந்தக் கேள்வியை அனுப்பி பதில் பெற முடிந்தால் பதில் பெற முயற்சியுங்கள்.

கேள்வி -6: ஆளுக்கொரு எழுத்தாய் அ.தி.மு.க.வைப் பிரித்துக் கொள்வார்களா?

- ஜீவபாரதி, கோவை

பதில்: முக்கோண வடிவில் போராட்டங்கள். இக்கோஷ்டி அக்கோஷ்டியை நீக்கம் செய்கிறது. அக்கோஷ்டி இக்கோஷ்டியை நீக்கி அறிக்கைகள். எல்லா கோஷ்டியின் கயிறுகளும், இழுவை இயந்திரமும் காவியின் கண்ணசைவில் இருப்பதால் அடமானம் அவ்வளவு எளிதில் மீட்கப்படுமா என்பது சந்தேகந்தான், அதனால்தான் இந்த திருக்கூத்து என்ற தெருக்கூத்து!

கேள்வி -7: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு ரூ.80-க்கு வந்துவிட்டதே, இந்தியாவின் பொருளாதாரம் என்ன ஆவது?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: இலங்கை நிலை ஏற்படக்கூடாது! முன்பு பணமதிப்பிழப்பு - இப்போது ரூபாய் மதிப்புக்குறைவு இப்படி நாளும் நம் முன்னே பணவீக்கம் - தொழில் பற்றாக்குறை (Trade deficit), வேலையின்மை, விலைவாசி உயர்வு எல்லாம் நம் வளர்ச்சியின் தடைக் கற்களே!

கேள்வி -8: தமிழ்நாடு அரசின் மதிய உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு காலையிலும் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றில் மாபெரும் மைல்கல். ஆனால், மதிய உணவுத் திட்டம் பத்தாம் வகுப்புடன் முடிந்துவிடுகிறது. 11, 12ஆம் வகுப்புகளில் படிக்கும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மதிய உணவுக்கு வழியின்றித் தவிக்கும் நிலை தொடர்கிறதே, அரசின் கவனத்துக்குக் கழகம் எடுத்துச் செல்லுமா?

- சங்கர் அப்பாசாமி, திருமுடிவாக்கம்


பதில்: மாநில அரசின் நிதிநிலை சரிப்படுத்தப்பட்ட பிறகு இதனையும் யோசிக்கலாம்! பல அறக்கட்டளைகளை அழைத்து, அவர்களுக்கு இந்தத் திட்டத்தைப் பல பள்ளிகளுக்குப் பிரித்துக் கொடுக்கலாம்,  பல பள்ளிகளை தத்து எடுக்கச் செய்தும் (உணவுக்கு மட்டும்) பொறுப்பை அளிக்கும் திட்டத்தை உருவாக்கினால் நிதிச்சுமை இருக்காது. அறநிலையத்துறையையும் பயன்படுத்தலாம்.

கேள்வி -9: பிதாகரஸ் தேற்றமெல்லாம் வேதத்தில் இருக்கிறதாமே, கருநாடக பா.ஜ.க. ‘அறிவுஜீவிகள்’ கண்டுபிடித்துள்ளனரே?

- துரை.அன்புமதி, திருப்பூர்

பதில்: உளறுதலுக்கு ஒரு எல்லையே இல்லையா?, உலக விஞ்ஞானிகள் முன் நம் மானம் இப்படியா கப்பலேறுவது? மகா வெட்கம்!!


கேள்வி -10: பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டதே சிவசேனா?

- சிவகுமார், சேத்தியாதோப்பு

பதில்: முன்னே போதிய கவனம் செலுத்தாததினால் இப்படி சரணாகதிப் படலத் தொடக்கம் போலும்! என்னே அரசியல் விசித்திரங்கள்! திடீர் பல்டிகள் நம்நாட்டு அரசியலில் மிகவும் அதிகம்!


No comments:

Post a Comment