பற்றி எரியும் ஏழைகளின் வயிறு எதேச்சதிகாரத்தை சாம்பலாக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

பற்றி எரியும் ஏழைகளின் வயிறு எதேச்சதிகாரத்தை சாம்பலாக்கும்

25 கிலோவிற்கு அதிகமாக பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. இல்லை என்ற அறிவிப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

25கிலோவுக்கு அதிகமான அளவில் பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருள் வாங்கினால் ஜி.எஸ்.டி. கிடையாது என்று ஒன்றிய மறைமுகவரிகள் வாரியம் (சி.பி.அய்.சி.) விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், ஏழைகள் வாங்கும் குறைந்த அளவிலான உணவுப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இது சாமானிய மக்களைத் திட்டமிட்டு மேலும் கடனாளியாக்கும் நடவடிக்கை என கடுமையான கண்டனங்கள் எழும்பி வருகின்றன.

அரிசி, கோதுமை உள்பட பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள்களுக்கு ஒன்றியஅரசு 5% ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. குறிப்பாக பைகளில் அடைத்து விற்கப்படும், 'லேபிள்' ஒட்டப்பட்ட உணவுப் பொருள் களான பால், தயிர், பனீர், மோர், லஸ்ஸி, அரிசி, கோதுமை, கோதுமை மாவு ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதியவரி விதிப்பு இம்மாதம் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஒன்றிய அரசுமீது கடுமையான அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ள நிலையில்,  பேக்கிங் செய்யப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பொருந்துமா என்பது குறித்து ஒன்றிய மறைமுகவரிகள் வாரியம் (சி.பி.அய்.சி.) விளக்கம் அளித்துள்ளது.

இதில் லேபிள் மற்றும் பிராண்டட் பொருள்களுக்கு மட்டும்தான் ஜி.எஸ்.டி. வரியா அல்லது மற்றவற்றுக்கும் ஜி.எஸ்.டி. வரியா என்பது குறித்து குழப்பம் நிலவியது. அது குறித்து ஒன்றிய மறைமுக வரிகள் நேரடி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

'பிரி பேக்கிங்' (ஒரே மூட்டையாக) செய்யப்பட்ட 25 கிலோ அல்லது 25 லிட்டருக்கு உள்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப் படும். உணவுப் பொருள்களான பருப்பு வகைகள், அரிசி, கோதுமை, கோதுமை மாவு, உள்ளிட்ட மாவுப் பொருட்கள் 25 கிலோவுக்குள் இருந்தால், அவற்றுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்

ஆனால் சில்லறை விற்பனையாளர், உற்பத்தியாளர் அல்லது விநியோகஸ்தரிடம் இருந்து வாங்கும் பொருளை 25 கிலோ சில்லரையில் வழங்கினால், நுகர்வோருக்கு விற்பனை செய்யும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது.

முன்பே பேக்கிங் செய்யப்பட்ட 25 கிலோ எடை அல்லது அதற்கு குறைவான எடையுள்ள கோதுமை மாவு, அரிசி மாவு உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5சதவீதம் வரி உண்டு. ஆனால், 30 கிலோ பேக்கிங்காக இருந்தால் ஜி.எஸ்.டி. வரி இல்லை.

ஒரு வேளை நுகர்வோர் ஒருவர் 10 கிலோ அரிசி பேக்கிங்காக, 3 வாங்கினால், அதாவது 3 பத்துகிலோ மூட்டையாக 30 கிலோ வாங்கினாலும், ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும். ஏனென்றால், தனித்தனியாக 10 கிலோ பேக்கிங்காக வாங்கியதால், 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உண்டு.

ஒரு வேளை ஒவ்வொரு 10 கிலோ பேக்கிங்கையும், 100 கிலோவாக மாற்றி பெரிய பேக்கிங்காக மாற்றினாலும், ஜி.எஸ்.டி. வரி உண்டு. இதுபோன்ற பேக்கிங் பொருட்கள் உற்பத்தியாளரிடம் இருந்து பகிர்வாளருக்கு வழங்கப்படுகிறது. யார் - யாரை ஏமாற்றுகிறார்கள்?

10 கிலோ பேக்கிங் என்றாலே 25 கிலோவுக்கு உள்பட்டு வந்து விடுவதால், 5 சதவீதம்வரி உண்டு. அதேசமயம் விருந்து, விசேஷங்கள், பண்டிகைகளுக்காக 50 கிலோ அரிசி மூட்டையாக, கோதுமை மூட்டையாக வாங்கினால், ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது. 25 கிலோ அல்லது 25 லிட்டருக்கு குறைவாக ப்ரீ பேக்கிங் செய்யப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட உணவுப் பொருள் மட்டும்தான் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுருக்கமாகச் சொன்னால் ஏழைகள் வாங்கும் குறைந்த அளவிலான உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கப் படும் என ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசு யாருக்கானது என்பது இப்பொழுது சந்திக்கு வந்து விட்டது. குறைந்த அளவில் பொருள்களை யார் வாங்குவார்கள்? ஏழை - பாழைகள் தான் வாங்குவார்கள். அவர்களின் 'வயிற்றில் அடி - பலமாக அடி!' என்கிறது. மோடி தலைமையிலான ஒன்றிய பி.ஜே.பி. அரசு.

25 கிலோவுக்கு மேல் பொருள்களை யார் வாங்கு வார்கள்? வசதி, வாய்ப்புள்ள பணம் படைத்தவர்கள் வாங்குவார்கள்! அவர்களுக்கு வரிப் போடாதே! அவர் களின் வயிற்றில் பால் பாயாசத்தை  ஊற்று - இதுதான் இன்றைய ஒன்றிய மோடியின் பி.ஜே.பி. அரசு!

ஏழைகளின் வயிறு பற்றி எரிந்தால் அது எதேச் சதிகாரத்தைச் சாம்பலாக்கும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

Post a Comment