பிளாஸ்டிக்கை தவிர்க்கும் முயற்சியில் 8ஆம் வகுப்பு மாணவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

பிளாஸ்டிக்கை தவிர்க்கும் முயற்சியில் 8ஆம் வகுப்பு மாணவி

வாணியம்பாடியிலுள்ள அரசு நிதி உதவி உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பூஜாசிறீ. பூஜா அய்ந்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் சூரியகாந்தி அவர்கள் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் விழிப்புணர்வு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அப்பள்ளியின் ஆசிரியர் கீதா, நாம் தினமும் உபயோகிக்கும் பிளாஸ்டிக்கிற்கு எதை பயன்படுத்தலாம் என்பதை நன்கு யோசித்து, அந்தப் பொருளை கொண்டுவரும்படி கூறியுள்ளார்.

‘‘அப்ப எனக்கு பத்து வயசு தான் இருக்கும். வீட்டில் அம்மாவிடம் கேட்ட போது... அம்மா தான் சொன்னாங்க, பிளாஸ்டிக் நாருக்கு பதில் தேங்காய் நார் பயன்படுத்தலாம்ன்னு. மேலும் இப்போது தான் பிளாஸ்டிக் நார்கள் மார்க்கெட்டில் இருப்பதாகவும் இதற்கு முன்பு வரை தேங்காய் நார் தான் பாத்திரம் துலக்க பயன்பாட்டில் இருந்ததாகவும் அம்மா கூறினார். தேங்காய் நார் எளிதில் கிடைக்கக் கூடிய பொருள். மேலும் எளிதில் மக்கிவிடும். சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பும் ஏற்படுத்தாது என்று அம்மா எனக்கு புரிய வைத்தாங்க. அதன் அடிப்படையில் தான் நான் தேங்காய் நாரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சிக்கு கொண்டு சென்றேன். இதைக் கொண்டு பாத்திரம் துலக்கலாம்ன்னு சொன்ன போது, கண்காட்சியில் ஆசிரியர்கள் முதல் அனைவரும் பாராட்டினார்கள். மேலும் அவங்க என்னிடம் மக்கள் இதை பயன்படுத்த ஊக்குவிக்கவும் செய்யலாம்ன்னு சொன்னாங்க. அவர்கள் அன்று சொன்ன அந்த வார்த்தை என்னு டைய மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதை எவ்வாறு பயன்படுத்தக்கூடிய பொருளாக மாற்றி அமைக்கலாம்ன்னு யோசிக்க ஆரம்பித்தேன். மேலும் என் விருப்பத்தை பள்ளி ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்தேன்’’ என்றவர் அதன் பிறகு அதை எவ்வாறு பயன்படுத்தக்கூடிய பொருளாக மாற்றி அமைத்தார் என்பதைப் பற்றி விவரித்தார்.

‘‘நான் பள்ளி ஆசிரியரிடம் சொன்ன போது அவங்க நல்ல யோசனை, நீ செய் என்று சொன்னது மட்டுமில்லாமல்... அதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று ஆலோசனையும் வழங்கினார்கள். அப்படித்தான் தேங்காய் நாரை பாத்திரம் தேய்க்கும் மற்றும் உடம்பு தேய்க்கும் நாராக தயாரித்து வருகிறேன். இதற்கு என் சித்தப்பா மிகவும் உதவியாக இருக்கிறார். முதலில் தேங்காய் நாரினை தனித்தனியாக பிரித்து நன்கு காய வைத்து அதை சின்ன பந்து போல் உருட்டி கைக்கு அடக்கமாக கட்டித் தருகிறோம். இதனால் கைகளில் பிடித்து தேய்க்கும் போது கைகளில் வலி ஏற்படாது. மேலும், சருமத்திற்கும் பாதிப்பினை தராது, உடலுக்கும் தீங்கு விளைவிக்காது.நான் தயாரிக்கும் இந்த நாரினை வன ஆர்வலர்  பிரவீன்குமார் பயன்படுத்தி வருகிறார். இதன் காரணமாக நகர்ப்புறங்களில்  முற்றிலும் அழிந்துவிட்ட தவளை இனம் மீண்டும் உற்பத்தியாகும் என்று கூறினார். அதோடு அவைகளின் முக்கிய உணவு கொசுக்கள் என்பதால் டெங்கு, மலேரியா, வைரஸ்  காய்ச்சல்களை பரப்பும் கொசுக்கள் அழிவதோடு அந்த காய்ச்சல் பரவுவதும் தடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

 உரம் ஆகக் கூடிய, சருமத்திற்கு ஊறு விளைவிக்காத தேங்காய் நாரினைக் கொண்டு கையினால் செய்யப்பட்ட ஸ்க்ரப் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நம்முடைய ஒவ்வொரு சிறிய முயற்சியும் இயற்கையை பாதுகாக்கும் என்று கூறும் பூஜா, இயற்கை முறையில் காய்கறிகளை பயிர் செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித ஆரோக்கியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

No comments:

Post a Comment