நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்! (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்! (2)

03.04.1948 -குடிஅரசிலிருந்து...

(இத்தலையங்கம் பெரியார் மூன்றாம் நிலையிலிருந்து அறிவுறுத்துவதுபோல அவர்களால் எழுதப்பட்டதே. நடை அதை உணர்த்துகிறது நமக்கு. - பதிப்பாசிரியர்)

2.7.2022 இன் தொடர்ச்சி

பெரியாரவர்கள் விளக்கியிருக்கும் ஒரு உண்மை, அதாவது மாணவர்கள் என்பவர்கள் சரியான சோல்ஜர்கள், நல்ல ஜெனரல்கள் அல்ல. நல்ல சிப்பாய்கள் ஆனால் நல்ல கமாண்டர்களல்ல என்று கூறியிருக்கும் கருத்து மாணவர்கள் மனதில் நல்ல முறையில் பதிவு பெற வேண்டிய ஒன்றாகும்.

தாய் என்றால் அது மற்றொரு சொல்லையும், கணவன் என்றால் அது மற்றொரு சொல்லையும் எதிர்பார்க்கும் இயல்புடைய, ஒவ்வொரு முறைச்சொல் என்பது போலவே, மாணவர்கள் என்பதும் ஆசிரியர் என்பதையோ, கற்பித்துக் கொடுப்பவர் என்பதையோ காட்டும் மற்றொரு சொல்லை, எதிர்பார்த்து வழங்கும் ஒரு முறைச்சொல் என்கிற உண்மை தமிழ் மொழி பேசும் எவரும் அறிந்த ஒன்றாகும்.

உலகையே ஏடாகக் கொண்டு, மனிதன் ஒவ்வொருவனும் சாகும் வரைக்கும் கற்றுக் கொண்டேயிருக்கிற பேருண்மையை எண்ணி, உலகிலுள்ள ஒவ்வொருவரையும் மாணவர் என்றே குறிப்பிடுவது ஒருவகையில் பொருந்துமென்றாலும், குடும்பப் பொறுப்போ, பணக்கவலையோ, உழைப்பின் திறமோ உட்கொள்ளாத, அனுபவக் கல்வியைக் கற்க வாய்ப்பில்லாத இளம் பருவத்தையுடையவர்களையே இங்கு மாணவர்கள் என்று குறிப்பிடுகின்றோம்.

மாணவர்கள் என்று சொல்லும்போதே, அந்தச் சொல் இளமைப் பருவத்தையும், உலக அனுபவமில்லாமையையும் உணர்த்துவதாகும் என்கிற உண்மை மாணவர்கள் மனதில் இடம் பெறுவதே, சோல்ஜர்கள்! சிப்பாய்கள்! என்கிற கருத்தைப் பதிவு செய்து கொள்ளுவதற்கு வழியாயிருக்க முடியும்.

திராவிடர் இயக்கத்தில் மாணவர்கள் பங்குகொள்வதை நாங்கள் பெருஞ்செல்வமாக மதிக்கின்றோம், அவர்களைப் பெரிய சொத்தாகக் கொண்டு போற்றுகின்றோம் என்று கூறியிருக்கிறார்கள் பெரியார் அவர்கள். ஆம்! நைந்தழுகிமுடைநாற்றம் நாறும் ஒரு சமுதாயத்தின் நிலைமையை மாற்றப் போராடும் ஒரு பெருவீரன், அச்செயலுக்கு உதவியாக முன்வரும் கட்டிளங்காளைகளைக் காணும்போது உவந்து கூறும் உள்ளக் களிப்பிற்பிறந்த சொல்லே இது.

மத நம்பிக்கையுடைய கிறிஸ்துவப் பாதிரிமார்களையும், கன்னிப் பெண்களையும் மாணவத் தோழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களுடைய ஒழுக்கத்தின் உயர்வை இங்கு நாம் குறிப்பிடவில்லை. காணாத கடவுளின் பேரால், இல்லாத மோட்ச ஆசையைத் தூண்டி, புரியாத புண்ணிய பாவம் பேசி, இவ்வுலகத்தையே தாங்கள் நம்பிய சிறந்த மார்க்கத்தில் செலுத்திவிட வேண்டுமென்று, தங்கள் வாழ்வின் சுகபோகத்தைத் துறந்தவர்களாய்க் காண்பித்து, மக்களுக்காவே வாழுகிறோம் என்கிற நிலைமையை எப்படி உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் எண்ணிப்பார்க்க வேண்டுகிறோம். இந்த மதவாதிகள், மதத்தொண்டர்கள்  எவ்வாறு உலகை ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்குத் தெரிவது போலவே, அவர்களுடைய தன்னலம் பேணாத உழைப்பையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அழிவிற்கே காரணமாக இருந்து வந்த மதவெறியைப் பரப்பும் ஒரு மதத்திற்கே, அது உயிர் வாழ்வதற்கு இப்பேர்ப்பட்ட தொண்டர்கள் வேண்டுமென்றால், அழிந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம் புத்துணர்வு பெற்றுப் புதுவாழ்வு பெறவேண்டுமானால், அந்தச் செயலுக்கு எப்படிப்பட்ட தொண்டர்கள் வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.

உலக இயற்கைக்கு மாறுபட்டு ஆண் பெண் கூட்டுறவைத் தள்ளி, பெண்களைப் பேய்கள் என வெறுத்து, நிலையான நித்திய இன்பத்தையடைய முயலுகிறோம் என்று கூறி, கானல் நீருக்கு அலைந்த உண்மையான துறவிகள் போக்கை நாம் வெறுத்தாலும்கூட, அந்த லட்சியம் நிறைவேறுவதற்காக அவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்று விதித்திருக்கும் கடுமையான முறைகளை, எந்த லட்சியவாதிதான் வெறுத்துவிட முடியும் என்று கேட்கிறோம்.

தனி ஒரு மனிதன் அடையலாம் என்று எதிர்பார்த்த ஒரு இன்பத்திற்கே இப்பேர்பட்ட கடுமையான நெறிகளைக் கைக்கொள்ள வேண்டுமென்றால், ஒரு மனித சமுதாயமே தன் நைந்த நிலைமாறி இன்ப வாழ்வைப் பெற, எப்பேர்ப்பட்ட நெறிகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.

பொதுநலத் தொண்டில் ஈடுபடுகிறவர்கள், முதலில் பொதுநல சேவைக்கும், தங்களுக்கும் என்ன பொருத்தம்? எந்தெந்த வகையில் இருக்கிறது? என்கிற தங்களின் தகுதியைத் தாங்களே தெரிந்து கொள்ளவேண்டும். எழுதும் தகுதி, பேசும் தகுதி ஆகிய இரண்டு தகுதியைக் காட்டிலும் சிறப்புடையது நடந்து காட்டும் தகுதி என்றாலும், இம்மூன்றினும் சிறப்பாகப் பொதுநலத் தொண்டர்களுக்குரிய குணத்தகுதி தங்களுக்கு இருக்கிறதா என்பதையே மாணவத் தோழர்கள் கருதவேண்டும். இதைத்தான் பெரியாரவர்கள் தம் சொற்பொழிவில் வற்புறுத்தியிருக்கின்றார்கள்.

எளிய வாழ்க்கையைக் கைக்கொள்ளல், தன்னைத்தானே காத்துக்கொள்ளுதல், தன்னலம் பேணாது வாழ்தல், தற்பெருமை பேசாத அடக்கம், உயர்ந்தவன் என்ற மமதைக்கு இடங்கொடாமை, வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாத வீர இயல்பு, தலைவனின் ஆணைக்கு அடங்கல் போன்ற நற்குணங்களே தொண்டர்களுக்கு, சிறப்பாகத் திராவிட மாணவர்களுக்கு வேண்டிய குணத்தகுதிகள் என்று பெரியாரவர்கள் வற்புறுத்தியிருப்பதைக் கருத்தூன்றிப் படித்துக் கைக்கொள்ள வேண்டுகிறோம்.

இவைகளை வாழுகிற ஒவ்வொரு மனிதனும் கடைபிடித்து ஒழுகுவதே வாழ்வில் ஒழுங்கையும், அமைதியையும் உண்டுபண்ணும் என்று பொதுவாகச் சொல்லலாம் ஆனாலும், எதிர் நீச்சலில் சென்று வெற்றிக் கொடியை நாட்ட வேண்டிய பொறுப்புடைய தொண்டர்களுக்கு இவைகள் அவசியத்திலும் அவசியமல்லவா?


No comments:

Post a Comment