அதிமுக பொதுக்குழு 11ஆம் தேதி காலை 9.15 மணிக்காம்: உயர்நீதிமன்றத் தீர்ப்பு காலை 9 மணிக்காம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

அதிமுக பொதுக்குழு 11ஆம் தேதி காலை 9.15 மணிக்காம்: உயர்நீதிமன்றத் தீர்ப்பு காலை 9 மணிக்காம்

சென்னை, ஜூலை 9 அதிமுக பொதுக்குழுக் கூட்டம் 11ஆம் தேதி காலை 9.15 மணிக்கு தொடங்கும் நிலையில்  தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில்  ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதிகிருஷ்ணன் ராமசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் ஜூலை 11ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினரான அம்மன் வைரமுத்து என்பவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், கட்சி விதிகளை மீறி பொதுக்குழு கூட்டப்பட உள்ளதாகவும், நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கவும் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கட்சி விதிகளின்படி அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கான நடைமுறைகள் குறித்து மேனாள் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தமிழ்மகன் உசேன் ஆகியோர் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இரண்டாவது நாளாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று (8.7.2022)  விசாரணைக்கு வந்தது. பிற்பகலில் தொடங்கிய விசாரணை 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. பழனிசாமி தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் விஜய் நாராயண், எஸ்.ஆர்.ராஜகோபால் மற்றும் வழக்குரைஞர் நர்மதா சம்பத் ஆகியோர் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்து வாதிட்டனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் குரு கிருஷ்ணகுமார், பி.எச்.அரவிந்த் பாண்டியன், சிறீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கின் தீர்ப்பை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ள ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தள்ளி வைத்துள்ளார். பொதுக்குழு நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் தீர்ப்பு வரும் என்பதால் அதிமுகவினர் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment