இந்த தலையங்கத்தைப் படிக்கும் முன்... இதே பக்கத்தில் வெளிவந்துள்ள பார்ப்பன ‘துக்ளக்' ஏட்டின் கார்ட்டூனை ஒரு முறை முதலில் படியுங்கள்.
டாக்டர் இராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன் முதல் பிரணாப் முகர்ஜி வரை குடியரசுத் தலைவர்களாக இருந்த போது நாள் தோறும் பொதுப்பேருந்து ஏறி அலுவலகம் சென்றார்களா, குறைந்தபட்சம் குடியரசுத்தலைவர் மாளிகைத் தோட்டத்திற்குத் தண்ணீராவது ஊற்றி இருப்பார்களா? அவர்கள் என்ன பணி செய்தார்களோ அதைத்தானே பார்ப்பனர் அல்லாத குடியரசுத்தலைவர்களும் செய்தார்கள்.
இந்தியாவின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் பதவி ஏற்கும் முன் பாகவே குடியரசுத்தலைவர் மாளிகையில் அதிகாரிகள் மட்டத் தில் இருந்த பல பார்ப்பன அதிகாரிகள் தங்களுக்குப் பதவி மாற்றல் வேண்டி விண்ணப்பித்துச் சென்றதும், அந்த இடத்தில் எல்லாம் பார்ப்பனர் அல்லாதவர்களை நியமித்ததும், அப்படி மாற்றல் கிடைக்காத சிலர் பதவியில் இருந்து விலகிக் கொண்டதும் நடந்ததுண்டே!
"UNTOUCHABLE NO MORE" என்ற கட்டுரைக்காக "வாசிங்டன் போஸ்ட்"க்கு கொடுத்த நேர்காணலில் மறை முகமாக கே.ஆர்.நாராயணன் இதனைக் குறிப்பிட்டிருந்தார்
பிரதிபா பாட்டில் என்ற முதல் உயர் ஜாதி (FC) பெண் குடியரசுத் தலைவர் பதவி விலகிய போது குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள விலை உயர்ந்த நாற்காலியைக் கூட விட்டுவைக்கவில்லை. அதையும் தூக்கிக்கொண்டு கிளம்பினார். அதிகாரிகள் தலையிட்டு அது குடியரசுத்தலைவர் மாளிகைக்கான சொத்து மட்டுமே! தனிப்பட்டநபர்களுக்கானது இல்லை என்று கூறிய பிறகு குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள பல பொருள்களை விட்டுவைத்தார். திருவாளர் ஆர்.வெங்கட்ராமன் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல!
அதுமட்டுமல்ல, பிரதிபா பாட்டில் தீவிர மதநம்பிக்கையாளர் என்பதால் மாளிகையில் வாரம் தோறும் பூஜைபுனஸ்காரங்கள் நடந்துகொண்டே இருக்கும். இதற்கான செலவுகளும் மக்களின் வரிப்பணம் தான்! அவரே மாளிகையில் பல பூஜைகளை நடத்தி உள்ளார்.
எடுத்துக்காட்டாக மராட்டியப் பார்ப்பனர்கள் நாள்தோறும் கடவுளர் படங்களுக்குப் பூவைத்து விளக்கு ஏற்றுவார்கள். பொதுவாக ஒரு மாதத்திற்கு என இதற்காக 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவழிப்பார்கள்.
அதே போல் திங்கள்கிழமை - சோமவார விரதம், வியாழன் - குருபகவானுக்கான விரதம், சனி பகவான் விரதம் என்று ஒவ்வொரு வாரமும் விரதமிருப்பார்கள்.
அதுமட்டுமா? காலண்டர் நாள்களில் வரும் ஒவ்வொரு சங்கடஹர சதூர்த்தி, ஏகாதசி, துவாதசி, அமாவாசை பவுர்ணமி இவை எல்லாம் போதாது என்று திருவிழாக்கள் எனப் பெரும் தொகைகளை செலவு செய்வார்கள்.
குடியரசுத்தலைவர் பதவி என்பது அரசமைப்புச்சட்டம் வகுத்துக்கொடுத்த பணிகளை முறைப்படுத்துவதைக் கவனிக் கும் அதிமுக்கியப் பணி ஆகும்.
இந்தப் பதவியை அவாள்கள் செய்தால் புனிதமான பதவி என்றும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் அப்பதவியில் இருந்தால் அது அரசமரத்தடி ஆண்டிப்பண்டாரம் பதவிபோல் குருமூர்த்திகள் எழுதுவது, கேலிப்படம் (கார்ட்டூன்) தீட்டுவது அவர்கள் உள்ளத்தில் இம்மண்ணின் மைந்தர்கள் மீது கொடுநாக நச்சு இருப்பதையே காட்டுகிறது.
குறிப்பு என்று போட்டு முன்னேறிய வகுப்பினர் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அங்கலாய்க்கிறது துக்ளக்' - டாக்டர் இராதா கிருஷ்ணன், வி.வி.கிரி, ஆர். வெங்கட்ராமன் சங்கர் தயாள் சர்மா, பிரணாப் முகர்ஜி. இவர்கள் எல்லாம் பட்டியல் ஜாதியைச் சேர்ந்த வர்களா?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும் உயர்ஜாதிக்காரரே!
குடியரசு தலைவர்களில் பார்ப்பனர்கள் மற்றும் முற்பட்ட வகுப்பினர் 8 பேர், இஸ்லாமியர் 3 பேர், சீக்கியர் 1, இரண்டு பேர் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் முற்பட்ட வகுப்பினர் விண்ணப்பிக்க வேண்டாம் என்று எழுதுவது எல்லாம் குருமூர்த்திகளின் பூணூல் விஷமும் துவேஷமும் தானே!
இப்பொழுது குடியரசுத் தலைவராக இருப்பவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதற்காக பூரி ஜெகந்நாதர் கோவிலிலும், ராஜஸ்தான் பிர்மா கோயிலிலும் உள்ளே போக விடாமல் தடுக் கப்பட்டாரே - அதைப் பற்றி ‘துக்ளக்' பார்ப்பன ஏடுகள் ஒரு வரி கண்டித்து எழுதியதுண்டா? தெரிந்து கொள்வீர் பார்ப்பனர்களை!
No comments:
Post a Comment