சகிப்புத் தன்மை - ஓர் உயர்த்தும் ஏணி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 21, 2022

சகிப்புத் தன்மை - ஓர் உயர்த்தும் ஏணி!

 சகிப்புத் தன்மை - ஓர் உயர்த்தும் ஏணி! 

ஒரு குழுவில் பத்துப் பேர் இருந்தால் (உண்மையில் அய்ந்து பேருக்குள் இருப்பதையே மேல் நாட்டு அறிஞர்கள், ஓர் குழு  Group - என்றும், அதற்கு மேல் எண்ணிக்கைக் கூடினால், அது 'குழு' அல்ல 'கூட்டம்' - Crowd  என்றுமே கூறுவதுண்டு).  அதில் உள்ள ஒவ்வொரு வரும் வெவ்வேறுபட்ட மனப்போக்கும், குணாதிசயங் களும் கொண்டவர்களாக இருப்பது இயல்பான ஒன்றாகும். ஆட்டு மந்தையல்ல மனிதர்கள்!

அலுவலகங்கள், இயக்கங்கள், தனி இயக்கம், நிறுவனம் முதலிய எல்லாவற்றிற்குமே இந்த உண்மை பொருந்தக் கூடும்! ஒவ்வொருவருடைய சிந்தனைகளும், விருப்பு- வெறுப்பு மனோபாவம், இவற்றிலும்கூட பளிச்சென்ற வேறுபாடுகள் இருக்கும்!

இப்படி பல தரப்பட்ட கருத்துகள், சுவைகள், சிந்தனைப் போக்குகள் - இவைகளைக் கண்டு சிலர் ஏனோ ஒரு வகை வெறுப்பை உமிழ்வது உண்டு; வெளிப்படையாகக் காட்டா விட்டாலும் கூட, அந்த வெறுப்பை மனத்திற்குள்ளே வைத்து அழுத்திக் கொண்டு சகிப்பற்று "ஏனோ முக பாவத்தை" சிலர் காட்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். கெட்டிக்காரர்களான சிலர் அதனைப் புறந்தள்ளிவிட்டு, உரையாடுவதும் சம்பிரதாய வகையில் உண்டு.

இதைத் தாண்டிய உயர் தனிப்பண்பு எது என்றால், அதை சகித்துக் கொள்ளும் உளப்பாங்கு தலையாய பெருமை அளிப்பதாகும்.

"பொறுமை கடலினும் பெரிது" என்பது ஓர் பழமொழி. அதைவிடப் பெரிது சகிப்புத் தன்மை! எந்தவித எதிர் பதில், எதிர்வினையும் - உடனுக்குடன் சூடானபதில் அளித்து சமூக உறவை, கலக வெறுப்பினை வெளிச்சமாக்கிக் காட்டுவது என்பது என்றால் சிறிதும் ஏற்க இயலாத ஒன்றாகும்!

கடும் எதிரிகள்கூட நம் இல்லந்தேடி வருகின் றார்கள் ஏதோ ஒரு உதவியை நாடியோ அல்லது வேறு காரணத்தாலோ நம் குடியிருப்புக்கு வந்தால், அவரை மன ஒதுக்கீடு (Mental Reservation) இன்றி, அன்புடன் வரவேற்பது உயர் தனிப் பண்பு ஆகும், தவறல்ல.

இதனால் நாம் தாழ்ந்துவிட மாட்டோம். மாறாக, உயர்த்தப்படும் மனிதராக சமூகத்தின் முன் காட்சியளிப்போம்.

அந்தப் படிக்கு இல்லாவிட்டாலும்கூட, அதாவது அது நம்மை உயர்த்திக் காட்டாவிட் டாலும்கூட நமது மனச்சாட்சி மூலம் நாம் உயர்த் தப்பட்ட மனிதராகவே உலகத்தில் இறுதிவரை உலா வந்து கொண்டே இருப்போம்!

இது உறுதி - உண்மையும்கூட, அன்னை 

ஈ.வெ.ரா. மணியம்மையார் எவ்வளவு வசவுககள் "ஆபாச அர்ச்சனைகள்" அவதூறு மொழிகள் இவைகளை சந்தித்தார். அவரது கடல் போன்ற சகிப்புத் தன்மை அவரை இன்று மிகப் பெரிய அளவில் உயர்த்தி விட்டதே! பல துன்பங்கள், துயரங்கள் எதிர்பாராத துரோகங்கள், ஏச்சுகள், ஏளனங்கள் இவைகள் எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை. சகிப்பின் எல்லை அல்லவா அவர்!

இவற்றை எதிர்க் கொண்டு வாழ்வது தவிர்க்க முடியாதது என்பதைவிட, இதனை சகிப்புத் தன்மையோடு ஏற்று வாழக் கற்றுக் கொண்டால், அதைவிட பெரிய வெற்றி வாழ்வில் ஏதுமில்லை  - நண்பர்களே உணருங்கள்!

ஒரு குழுவில்கூட, எவர் எவரிடம் என்ன நல்ல பண்பு, பழக்க வழக்கம், தனித் திறமைகள் உள்ளன என்று நீங்கள் கண்டறிகிறீர்களோ, அதை முன்னிறுத்தி, அவர்களோடு கனிவோடு பழகி, நட்புறவோடு நல்ல செயலாக்கத்தை நாளும் பலப்படுத்திக் கொள்ள முயலுங்கள். அவர்களது பலவீனங்களை அலட்சியப்படுத் துங்கள்  - அதற்கேற்ப வேலைவாங்குகள்.

சகிப்புத் தன்மையுள்ளவர்கள் எவரும், வாழ்வில் தொடர் தோல்வியில் புரளவே மாட்டார்கள்; வாழ்வில் உயரவே செய்வர். 

புராண காலத்து 'முனிவர்கள்' என்றாலே கோபப்படுகிறவர்கள்  - (முனிபு - கோபம்) சாபம் கொடுப்பவர்கள் என்கிற அவசரக்காரர்கள்.

இது அவர்களையும் பின்னுக்குத் தள்ளும் - உயர் குணம், மாமனிதம், சகிப்புத்தன்மை என்பன பேராயுதங்கள் - அவற்றை ஏந்துங்கள்!


No comments:

Post a Comment