பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 21, 2022

பிற இதழிலிருந்து...

படித்து சாதித்தவர்கள்

மு.இராமனாதன்

ஜூன் 13 அன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அன்றைய தினம் திருவள் ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் எனும் சிறு நகரில் 'எண்ணும் - எழுத்தும்' திட்டத்தைத் தொடங்கி வைத்துத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். சில தலைவர்களின் சில மேற்கோள்கள் காலத்தால் நிலைபெற்றுவிடும். அப்படியான ஒரு வாசகம் முதல்வரின் உரையில் இடம்பெற்றது. அன்றைய தினமே அது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. முதல்வர் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சொன்ன அறிவுரை இதுதான்:

"கல்வி மட்டும்தான் நம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும். மாறாக, படிக்காமல் சாதித்த ஒருவரையாராவது எடுத்துக்காட்டாகக் காட்டினால், அதற்கு இணையாகப் படித்துச் சாதித்தவர்கள் லட்சம் பேரை நாம் காட்ட முடியும்! 'படிக்காமலே சாதிக்கலாம்' என்று யாராவது சொன்னால், அது தன்னம்பிக்கை ஊட் டுவது அல்ல; அது வெறும் ஆசை வார்த்தை! இவர்களெல்லாம் படித்து முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில் தவறான பாதையைக் கைகாட்டும் சூழ்ச்சி அது!"

படித்ததால் அறிவுபெற்ற தமிழ்ச் சமூ கத்தில் இந்த வீரியமிக்க வார்த்தைகள் மாணவர் களுக்குப் பெரும் உற்சாகத்தை வழங்கின. இந்த வாசகம் சமுத்திரங்களையும் மாருதங்களையும் கடந்து பரவியது. ஹாங்காங்கி லிருந்து ஒரு சீன நண்பர் இந்தச் செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார். நண்பரின் பெயர் தாமஸ் வாங். இளம் பொறியாளர். ஹாங்காங்கில் ஜனநாயகத்தைக் கொண்டுவருவதற்காகப் போராடிய லட்சக்கணக்கான குரல்களில் அவருடையதும் ஒன்று. அவரது பெற்றோர் தென் சீனாவின் சிறு கிராமம் ஒன்றிலிருந்து ஹாங்காங்குக்குப் புலம்பெயர்ந்தவர்கள். தந்தையார் தச்சுப்பணிக்காரர், தாமஸின் இளம் வயதிலேயே அவர் இறந்துபோனார். தாயார் நகராட்சியில் துப்புரவுப் பணியாளர். இப்போது ஓய்வுபெற்றுவிட்டார். தாமஸுக்கு இந்த மேற்கோளின் ஆங்கில மொழிபெயர்ப்பு சமூகவலைதளம் வாயிலாகக் கிடைத்திருக்கிறது. அவர் மு.க.ஸ்டாலினின் வாசகங்களால் ஈர்க்கப்பட்டார். இந்த வாசகத்தைப் படித்ததும் 1975-இல் நான் கேட்ட உரையொன்று நினைவுக்கு வந்தது. அந்தக்காலத்தில் பள்ளியிறுதிப்படிப்பையும் (எஸ்.எஸ்.எல்.சி.) பட்டப் படிப்பையும் இணைக்கும் ஓராண்டுப் படிப்பு இருந்தது பி.யூ.சி. என்று பெயர். கல்லூரியில் படிக்க வேண்டும். நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தேன். அப்படி ஒரு கல்லூரியில் படிக்கும் பேறு எனக்கு வாய்த்தது. அந்த ஆண்டு மாணவர் மன்றத்தைத் தொடங்கிவைத்தவர், அப்போதைய தமிழக முதல்வர்  கலைஞர். அன்று அவர் நிகழ்த்திய உரையை இரண்டு காரணங்களால் மறக்க முடியாது.

முதலாவது, மாநில சுயாட்சி தொடர்பிலானது. இன்று பல உயர் கல்வி நிறுவனங்கள் சுதந்திரமான, தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக இயங்குகின்றன. ஆனால், இப்படியான சிந்தனைகள் வலுப்பெறாத காலத்தில், அமெரிக்கன் கல்லூரி தன்னாட்சி கோரிக்கை விடுத்தது. கூட்டத்தில் கல்லூரி முதல்வர் எம்.ஏ.தங்கராஜ் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். கல்லூரி முதல்வரின் கோரிக்கையைத் தமிழக முதல்வர் ஆதரித்தார்; மதுரைப் பல்கலைக்கழகத்துக்கு அரசு பரிந்துரைக்கும் என்றும் வாக்களித்தார். அதில் வியப்பொன்றும் இல்லை. இந்தக் கூட்டம் நடந்ததற்கு ஓராண்டுக்கு முன்புதான் பி.வி.ராஜமன்னார் குழுவின் மாநில சுயாட்சி அறிக்கை குறித்தான ஆதரவுத்தீர்மானத்தை தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றியிருந்தது. அன்றைய தினம், கல்லூரியின் தன்னாட்சியைப் பற்றித்தான் கலைஞர் பேசினார். ஆனால், ஒவ்வொரு வார்த்தையும் வாக்கியமும் மாநில சுயாட்சியையும் குறித்தவை. இரண்டாவது, கல்வியின் மேன்மை குறித்து அன்று கலைஞர் தெரிவித்த கருத்துகள். 

கூட்டத்தில் வரவேற்புரை நிகழ்த்திய மாணவர் மன்றச் செயலர், கலைஞர் ஒரு படிக்காத மேதை, பெரிய உயரங்களை எட்டக் கல்வி அவசியமில்லை என்கிறரீதியில் பேசினார். "வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா? வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா?" என்கிற கண்ணதாசனின் வரிகளையும் அவர் மேற்கோள் காட்டியதாக நினைவு அந்தப் பேச்சு கலைஞருக்கு உவப்பாக இல்லை. ஒரு கல்லூரி மாணவர் கல்வியின் முக்கியத்துவத்தை உணராமல் பேசுகிறாரே என்கிற ஆதங்கம் அவருக்கு இருந்திருக்க வேண்டும்.

அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் தி.மு.க.வினரால் 'ஓப்பியார்' என்றழைக்கப்பட்ட ஓ.பி.ராமன். அப்போது அவர் மின்துறை அமைச்சராக இருந்தார். அமெரிக்கன் கல்லூரியின் மேனாள் மாணவர், வழக்கறிஞர். கலைஞர் சொன்னார். "கல்வி மட்டுமே உங்களை உயர்த்தும் எங்களைப் போன்றவர்கள் உங்களுக்கு ஒரு நாளும் எடுத்துக்காட்டுகள் ஆகமாட்டோம். இந்த மேடையில் ஒப்பியார் அமர்ந்திருக்கிறார். அவரைப் பாருங்கள், அவர் உங்கள் கல்லூரியில் படித்தவர். புகழ் பெற்ற வழக்கறிஞர் ஆனார். இன்று ஆளும் அமைச்சருமானார். அவரைப் போன்றவர்களைத்தான் நீங்கள் முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டும். அவர் வழிகாட்டி நான் விதிவிலக்கு" அடுத்து அவர் சொன்ன வாசகம், என் இளநெஞ்சில் இரும்பால் அடிக்கப்பட்டுவிட்டது. இன்றைய காலமாக இருந்திருந்தால் அந்த வாசகம் அவர் சொன்ன சில நிமிடங்களில் கைபேசிதோறும் வலம் வந்திருக்கும். அந்த வாசகம் இதுதான்' "விதிவிலக்குகள் வழிகாட்டிகள் ஆகாது." 

2022-இல் ஸ்டாலின் சொன்னதை 1974-இல் கலைஞர் சொன்னதன் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். கலைஞர் சொன்னதை அண்ணா சொன்னதன் தொடர்ச்சி எனலாம். அண்ணாவின் இருமொழிப்புலமை நாடறிந்தது. அவரே ஒரு கல்வியாளர். அவர் சொன்னார்; "போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில், நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்குத் துணையாக இருப்பது கல்வி மட்டுமே."

கல்வியால் மக்களுக்குப் 'பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்படும்' என்று தந்தை பெரியார் நம்பினார். அடுத்ததாக, "மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ கல்வி பயன்படும்" என்றார் அவர். வேலைவாய்ப்பைவிட தன்மானம் முக்கியம், அதைக் கல்வியால் மட்டுமே வழங்க முடியும் என்பதில் தந்தை பெரியார் அசைக்கவொண்ணா நம்பிக்கை கொண்டிருந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொன்ன வாசகத்துக்குத் தமிழக வரலாற்றில் நெடிய தொடர்ச்சி உண்டு. காமராஜரின் ஆட்சிக் காலத்தில் (1954-1963) குலக்கல்வித் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இலவசக் கல்விக்கும் மதிய உணவுத் திட்டத்துக்கும் தொடக்கம் குறிக்கப்பட்டது. அண்ணாவின் காலத்தில் (1967-1969) இருமொழிக் கொள்கை ஏற்கப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் (1977-1987) மதிய உணவுத் திட்டம் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. விலையில்லாப் பாடநூலும் சீருடையும் வழங்கப்பட்டன. கலைஞர் ஆட்சிக் காலங்களில் (1969-1976, 1989-1991, 1996-2001, 2006-2011) உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, தொழிற்கல்விக்கு நுழைவுத் தேர்வு ரத்து, சத்துணவுத் திட்டத்தில் முட்டை, சமச்சீர் கல்வி, கணினிப் பயிற்சி, செயல்வழிக் கற்றல், புதிய பல்கலைக்கழகங்கள் முதலான பல சீர்திருத்தங்கள் அமலாகின. ஜெயலலிதா (1991-1996, 2001-2006, 2011-2016) பள்ளிப் பிள்ளைகளுக்கு மடிக்கணினியும் சைக்கிளும் வழங்கினார். இந்த வரிசையில் மு.க.ஸ்டாலின் 'இல்லம் தேடிக் கல்வி', 'நான் முதல்வன்', 'பள்ளிப் பிள்ளைகளுக்குக் காலை உணவு முதலான புதிய திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார். இப்போது தமிழகத்துக்கான கல்விக் கொள்கையை வகுப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, அது மாணவரை மய்யப்படுத்திய வகுப்பறையை நோக்கி நகர்கிறது.

இந்த நெடிய ஓட்டத்தின் பலனாகத் தமிழகத்தில் ஆரம்பக் கல்வியை முடிக்கிற பிள்ளைகள் அனைவரும் உயர்நிலைப் பள்ளிக்குப் போகிறார்கள். பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடிக்கிறவர்களில் சரிபாதிப் பேர் கல்லூரிக்குள் காலடி வைக்கிறார்கள். இரண்டிலும் தமிழகமே இந்திய அளவில் முன்னணியில் நிற்கிறது. அதே வேளையில், கல்வியின் தரத்தில் தமிழகப் பிள்ளைகள் பின்தங்கியிருப்பதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைச் சீராக்கியே தீர் வேண்டும். நமக்கு வேறு தெரிவுகள் இல்லை . பிற்பட்ட சமூகங்களை அறிவுத் தளத்திலும் பொருளாதாரரீதியிலும் கல்வியாலேயே முன்செலுத்த முடியும். இது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத் தெரியும். அதை அவரது அரசால் செய்ய முடியும். இது ஒரு தொடர் ஓட்டம். இதில் நம் சமூகம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது படித்து சாதித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் லட்சங்களாக, கோடிகளாகப் பெருகும்.

(நன்றி: 'இந்து தமிழ் திசை' 20.6.2022) 


No comments:

Post a Comment