குழந்தை திருமணம் இல்லாத நிலை உருவாக வேண்டும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 13, 2022

குழந்தை திருமணம் இல்லாத நிலை உருவாக வேண்டும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்

தருமபுரி ஜூன் 13- தருமபுரி மாவட்டத்தில் கடந்த அய்ந்து மாதத்தில் 41 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குழந்தை திருமணம் என்பதே இல்லாத நிலை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பொதுமக்களுக்கு வேண்டுகோள்  விடுத்துள்ளார்.  

இது குறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி கூறியதாவது, தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை இந்த ஆண்டில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 50 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 41 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 9 குழந்தைத் திருமணங்களுக்கு வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட நபர்கள்மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் மாவட்டத்தில் பெண்களுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தி அடையாமல்,குழந்தைத் திருமணம் செய்யும் பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு உதவி புரியும் நபர்கள்மீது திருமண குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் 2006இன் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ஒரு லட்சம் வரை அபராதமும்  கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

மேலும் குழந்தை திருமணம் முடிந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தால் போக்சோ சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகள், அதிகபட்சமாக ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக தகவல் தெரிந்தால் உடனடியாக  1098, 1077, 181, 100 என்ற இலவச உதவி எண்களுக்கும்   மற்றும் சைபர் 04342 233088 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கவேண்டும். 

தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் மற்றும் முகவரி  ரகசியமாக பாதுகாக்கப்படும்.  தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் என்பதே இல்லாத நிலையை உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்சினி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment