ஆளுநரின் ஆணவத்தை அடக்குவோம் வாரீர்! வாரீர்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

ஆளுநரின் ஆணவத்தை அடக்குவோம் வாரீர்! வாரீர்!!

“சனாதன தர்மம் என்றால் ஆரிய மதத்தை குறிக்கும் சொல். இந்து மதம் என்பது பலரும் கொள்ளும் கருத்துகளை உடையது.

திருக்குறளில் இப்படி ஒரு கோட்பாடு எதுவும் இல்லை. அறம் என்ற கோட்பாடு ஒன்று தான் குறளில் வலியுறுத்தப்படுகிறது.

பலர் அறம் என்ற சொல்லையும், தர்மம் என்ற வட சொல்லையும் இணைக்கலாம். இது சரியானதில்லை. நாம் அப்படி பழகிப்போய்விட்டோம். வடமொழியில் தர்மம் என்றால் கடமை என்று பொருள்,. சத்திரிய தர்மம் என்றால் சத்திரியர் கடமை என்று பொருள். 

சனாதன தர்மம் என்றால் அவரவர் குலம் என்ன கடமையை செய்ய வேண்டும் என்று விதித்தார்களோ அதை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள்.

அறவழி என்றால் நல்ல வழி என்று பொருள். அற வழிக்கும் சனாதன வழிக்கும் நேரடி சம்பந்தம்இல்லை. 

இன்னும் விளக்கமாக சொல்கிறேன்.

சனாதன தர்மம் வகுக்கப்படுகிற ஒரு நூல் பகவத் கீதை. இந்த நூலை மிகச் சிறந்த நூல் என்பார்கள். உங்களில் இதைப்  படித்துப் பார்த்தவர்கள்  ஓரிருவர்தான் இருப்பீர்கள்.

பகவத்கீதையில் கிருஷ்ணன் என்கிறவன் தானே கடவுள் என்கிறான். மக்களை நான்கு வகையாய் பிரித்தவன் தானே என்கிறான். ஒவ்வொரு பிரிவுக்கும் அடிப்படையாக ஒரு குணம் என்கிறான். இந்த அடிப்படை குணம் என்பது innate அல்லது inborn அதாவது கூடவே வருவது. அதாவது பிறவியில் உண்டானது என்கிறான். பிராமணனை உன் குணப்படி கோயில் பூசாரியாக கடமையை செய் என்கிறான். சத்திரியனைப் பார்த்து அரசாங்கம், சண்டை, கடமைகளை செய், அதற்கான குணம் உண்டு என்று சொல்கிறான். வைசியன் என்பவனைப்பார்த்து மாடுகள் வளர்த்திடு அதற்கான குணம் உனக்கு உண்டு என்றான். இவர்களை இரண்டுமுறை பிறந்த உயர் பிறவிகள் என்றான், நான்காவதாக உள்ள சூத்திரர்களைப் பார்த்து குணம் ஏதும் சொல்லாமல் முன் கூறிய மூவருக்கும் வேலையாளாக இரு என்றான். இந்த பிரிவினையை செய்த தன்னாலேயும் இதை மாற்ற முடியாது என்றும் சொன்னான்.

கிருஷ்ணன் இது மட்டுமா சொன்னான்? அவரவர் கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும் என்றான். சூத்திரன் எவ்வளவு தான் வீரமுள்ளவனாய் இருந்தாலும் சத்திரியன் கடமை - வேலையைச் செய்யக் கூடாது என்றான். சத்திரியன் எவ்வளவு தான் படித்திருந்தாலும் பூஜை வேலைகளை செய்யக்கூடாது என்றான். அப்படி செய்தால் பாவங்கள் உண்டாகும் என்றான். இந்தப் பாவங்கள் அடுத்த பிறவியில்  தொடரும் என அச்சுறுத்தினான். இன்னும் சொல்கிறான் மற்ற கொள்கைகளை மதங்களை ஒதுக்குங்கள் என்றான். தன்னை வழிபாடு செய்தால் கீழுள்ள பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள் மாட்சிமை அடையலாம் என்றான். இதெல்லாம் இரகசியம் என்றான்.

- இதுதான் சனாதன மதம். இது நமது மதம் அல்ல. பகவத் கீதையில் ஜாதி தர்மம் என்ற வார்த்தை உள்ளது. அதாவது அவரவர் ஜாதிக்கு ஏற்றவாறு கடமைகளை செய்ய வேண்டும் என்று பொருள்.

வேதம் மற்ற எல்லா சனாதன நூற்களின் சாராம்சம் பகவத் கீதை என்று ஆரிய நூற்களைப்  படித்தவர்கள் சொல்கிறார்கள்.

நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் சனாதனம் என்றால் என்ன என்று!”

- இவை எல்லாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் ஆய்வல்ல. சமூக வலைதளத்தில் விக்கிப்பீடியா என்பது போல கோரா (QUORA) என்று உண்டு!

இதில் வெளிவந்த ஆய்வுக்கட்டுரைதான் இது!

எழுதியவர் இரமேஷ் கிருஷ்ணன் என்ற ஆய்வாளர் - எழுத்தாளர்!

தமிழ்நாடு ஆளுநர் திரு. இரவி அவர்கள் இந்த சனாதனத்தைத்தான் தூக்கிப் பிடிக்கிறார்.

தொலைக்காட்சியில் அரட்டை அடிக்கும் அய்யன்மார்களும்  விட்டுக் கொடுக்காமல் ஆளுநரைத் தங்கள் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஒன்றை நாம் கவனிக்கத்தவறக் கூடாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் எல்லாப் பார்ப்பனர்களும் நூலிழை பிறழாமல் ஒரே சுருதியில் பேசுகிறார்களே, அது எப்படி? 

கன்னியாகுமரியில் உள்ள ஒரு பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் காஷ்மீரில் இருக்கும் பார்ப்பானுக்கு நெரிகட்டும் என்பது இதுதான்.

நாளை மாலை 5 மணிக்கு சென்னை இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டிய ஆளுநர், அதனை மிதித்து - அதன் மேல் நின்று தான் பிராமணன் என்றும், நம்மைப் பார்த்து சூத்திரன் என்றும் கூறும் துணிவு எப்படி வந்தது? சனாதனத்தைக் காக்க வேண்டும் என்று சொல்லுகிறார் என்றால் அதன் பொருள் என்ன?

அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கக் கூடிய ஒருவர் ஆளுநராக இருக்கலாமா? நீடிக்கலாமா?

திருச்சியில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் இந்த வினாவைத் தான் எழுப்பினார்.

இது தந்தைபெரியார் பிறந்த சுயமரியாதை மண். இங்குப் பூணூல் வாலை ஆட்டிப் பார்க்கலாம் என்று நினைத்தால் அது நடக்காது! நடக்காது!!

வாருங்கள் தோழர்களே! நாளை மாலை கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பட்டத்துக்கு - தமிழர் தலைவர் தலைமையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேனாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்களும் பங்கேற்கிறார். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் முழக்கமிடுகிறார்.

இந்த 2022லும் நம்மைப் பார்த்து சூத்திரர் என்கிறார் ஆளுநர். காட்டுவோம் நமது சுயமரியாதையின் சூட்டினை... வாரீர்! வாரீர்!! 

- மின்சாரம்


No comments:

Post a Comment