முதுமையும் நோய் எதிர்ப்பு சக்தியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 13, 2022

முதுமையும் நோய் எதிர்ப்பு சக்தியும்

வயதானவர்கள் எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடன் இருப்பார்கள் என்பதில்லை. அது அவர்களின் மனம் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலுக்கு பாதுகாப்புக் கவசமாகும். பிறக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று பலவீனமாக இருக்கும். தாய்ப்பாலும், ஊட்டச்சத்து உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அதுபோலவே வயதாகும்போது மீண்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். தன்னம்பிக்கையும், ஊட்டச்சத்துமிக்க உணவும்தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயதானவர்கள் எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடன் இருப்பார்கள் என்பதில்லை. அது அவர் களின் மனம் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. நல்ல உணவை உட்கொள் வதும், உணர்ச்சிகளை சமநிலையில் வைத்திருப்பதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். கரோனா வைரஸ் நீடிக்கும் இந்த காலகட்டத்தில் வயதானவர்கள் உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம். 

1. தினமும் மேற்கொள்ளும் வழக்கமான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும். மெதுவான மற்றும் ஆழமான சுவாசம் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். சிந்தனைகளை பகுத்தறிந்து செயல் படவும் ஊக்குவிக்கும். 2. முதிய தம்பதியர் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம். குழந்தை பருவத்தில் விளையாடிய விளையாட்டுகளை மீண்டும் விளையாடி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளலாம். 3. தயிர், கஞ்சி போன்ற இயற்கை புரோபயாட்டிக்குகளை எடுத்துக்கொள்வதும், கோதுமை புல், ஸ்பைருலினா எனப்படும் சுருள் பாசி போன்றவற்றை சாப்பிடுவதும் ரத்தத்தை உருவாக்க உதவும். 4. சமையலில் உப்பையும், எண்ணெய்யையும் குறைத்துக்கொள்வது செரிமான அமைப்புக்கு நல்லது. பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதும் செரிமான செயல்பாடுகளுக்கு துணைபுரியும். தண்ணீர், பழச்சாறு, மூலிகை தேநீர், காபி போன்ற பானங்களை குறிப்பிட்ட இடைவெளியில் பருகுவது நீர்ச்சத்தை தக்கவைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். 5. நோய் எதிர்ப்பு சக்தி தூக்கத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. தூக்கமின்மை நோய்களுக்கு நுழைவுவாயிலாக அமைந்துவிடும். இளைஞர்களுடன் ஒப்பிடும்போது வயதானவர்கள் தூக்க விஷயத்தில் அசட்டையாக இருக்கக்கூடாது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு போதுமான அளவு ஓய்வு எடுத்தாக வேண்டும். தினமும் இரவு குறைந்தது 7 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 6. அலைபேசி, டி.வி., கணினி ஆகியவை உடலின் இயற்கையான தூக்கவிழிப்பு சுழற்சியை சீர்குலைக்கும் என்பதால் தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அவைகளை தவிர்க்க வேண்டும். 7. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கலந்த உணவுகளும், சர்க்கரையும் அதிக எடை, உடல் பருமனுக்கு வித்திடும். வயதான காலத்தில் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்வது இருதய நோய்கள், நீரிழிவு போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டுவிடும். ஆதலால் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும். 

8. உடற்பயிற்சி செய்தாலோ, வேலை செய்தாலோ, வெப்பமான காலநிலையில் வாழ்ந்தாலோ உடலுக்கு அதிக திரவங்கள் தேவைப்படும். 

வயதானவர்களுக்கு பெரும்பாலும் தாகம் எடுப்பதில்லை. தாகத்தை உணராவிட்டாலும் போதுமான இடைவெளியில் தவறாமல் திரவ உணவு களை பருக வேண்டியது அவசியமானது. 

No comments:

Post a Comment