ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: வரலாற்று ஆசிரியர்கள் முகலாய ஆட்சியைப் பற்றி மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள். பாண்டிய - பல்லவ  - சோழர்களின் ஆட்சியைப் பற்றிப் பதிவு செய்யவில்லையே,  ஏனென்று  - அமித்ஷா அவர்கள் ஆதங்கத்தோடு கேள்விக்கணை தொடுத்து இருப்பதன் அடிப்படைக் காரணம் என்ன?

- சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில்: அவருக்குச் சொன்னவர்கள் தவறாகச் சொல்லியிருக்கிறார்கள் போலும்!

தமிழ்நாட்டு வரலாற்றில் பாண்டியர், பல்லவர், சோழர்களின் ஆட்சிகளைப் பற்றிய நூல்கள் ஏராளம் - ஆய்வுக் கல்வெட்டு மூலம் வரலாறு உள்பட அதிகமுண்டு.

(இவர்களில் பெரும்பாலோர் ஆரியப் பண்பாட்டுக்கு 'இரையாகி தங்களது ஆரிய அடிமைத் தனம், ஆரிய சமஸ்கிருத மயத்தை அடித்தளமாகக் கொண்டு செயல் களைச் செய்தனர் - இப்படிச் செய்தார்கள் என்பதால் அவருக்கு இந்தத் தனிக் கரிசனம் - கவலை போலும்!).

- - - - -

கேள்வி: கோவில்கள் அரசர்களின் கருவூலத்திற் காக  கட்டப்பட்டதா இல்லை பார்ப்பனர்களின் சுரண்ட லுக்காக கட்டப்பட்டதா?

- மீ. முரளிதரன், மதுரை

பதில்: முதலில் (கவுடில்யரின் அர்த்த சாஸ்திர ஆதாரப்படி) அரசர்களின் கருவூலத்திற்காகவே கட்டப் பட்டன. பின்பு - பார்ப்பனர்களின் ஏகபோகச் சுரண்ட லுக்குப் பயன்பட்டு வருகிறது - இரண்டும் வீண்!

- - - - -

கேள்வி:  கோவில் அர்ச்சகர்கள் வழக்கில் பரம்பரை முறை ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் முறைகேடுகள் குறித்த புகார்களின்மீது ஆய்வு மேற்கொள்ளச் சென்ற தமிழ்நாடு அரசின் ஆய்வுக்குழுவுக்கு உரிமை கிடையாது என்று கூறி தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களே?

- வி.அகிலன், அயப்பாக்கம்

பதில்: சட்டப்படி, நியாயப்படி இது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றம் - அறநிலையத் துறை சட்டப்படி, அந்த விதிப்படி கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ("சிதம்பர ரகசியம்"  என்ற நூலைப் படியுங்கள் - விவரம் விளங்கும்).

- - - - -

கேள்வி:  தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழ்நாடு அமைச்சர்கள் மீது எப்போது பார்த்தாலும் ஒரு குற்ற ச்சாட்டை சொல்லிவிட்டு, "வேண்டுமானால் வழக்குப் போடுங்கள், என்னிடம் ஆதாரம் உள்ளது" என்கிறாரே?

- அ.தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்: 'புலி வராது' என்று நினைக்கிறார் பரிதாபத் துக்குரிய பாசாங்குத் தலைவர். 'புலி வருவது' நிச்சயம் - பொறுத்திருந்து பாருங்கள்.

- - - - -

கேள்வி: .பெண்களுக்குப் பேருந்தில் இலவசப் பயணம் அறிவித்ததில் இருந்து பெண்களிடம் சில ஓட்டுநர்களும், நடத்துநர்களும் கோபத்தை காட்டுவதோடு, இலவசப் பயண அனுமதியையே ரத்து செய்ய வேண்டும் என்கிறார்களே.?

- சங்கர் அப்பாசாமி, பட்டரைவாக்கம்

பதில்: இதிலுமா ஆணாதிக்கக் கொடுமை? பெண் ஓட்டுநர்கள் மற்றும் பெண் நடத்துநர்கள் நியமனமும் பெருகட்டும் - தவறு செய்யும் ஆண்களைத் திருத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு.

- - - - -

கேள்வி:  ஒரு குறிப்பிட்ட கடவுளை விமர்சிப்பதே தவறு என்று போராடுவது எதிர்காலத்தில் பகுத்தறிவுப் பிரச்சாரங்களுக்கு தொல்லையாய் வந்து சேராதா?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: இதற்கும் தீர்வு காணுவோம் விரைவில் - கவலைப்படாதீர்! வெறுப்பு அரசியலைப் பரப்பும் கொடுமையை விட இது எப்படித் தவறாகும்? ஆபத்தைச் சுட்டிக் காட்டுவது எப்படித் தவறாகும்? என்ற கேள்வியை விரிவாக்குவோம் - வாய்ப்பு வரும்போதெல்லாம்.

- - - - -

கேள்வி: . எந்தக் கட்சியில் இருந்தாலும், செல்வாக்கு உள்ளவர்களுக்கு சிறை எப்போதும், கிடைப்பதில்லையே?’

- த.மணிமேகலை, வீராபுரம்

பதில்: பல நாள் இப்படி நடந்தாலும் ஒரு நாள் அவர்களும் மாட்டுவார்கள். இது இயற்கைச் சட்ட நியதி.

- - - - -

கேள்வி:  அமைச்சர்கள் தேர் இழுக்கப்போவதையும், சங்கிக் கும்பல் அதனை வழிமறித்துத் தடுப்பதையும் எப்படி பார்க்கிறீர்கள்?

- க.கார்த்திகேயன், ஆண்டிமடம்

பதில்: திராவிடர் இயக்கக் கொள்கையோடு அமைச்சர்கள் இருந்தால் இப்படிப்பட்ட சிக்கல் எழாது - மதச்சார்பின்மைத் தத்துவத்திற்கு இது முற்றிலும் முரணானது! தி.மு.க. - பகுத்தறிவு இயக்கம் மட்டுமல்ல, அரசமைப்புச் சட்ட ஒழுங்கையும் காப்பாற்றி ஆட்சியை நடத்தும் இயக்கம்- அதை நம் அமைச்சர்கள் சிந்தித்து அதன்படியே நடப்பது முக்கியம்!

- - - - -

கேள்வி:  அதிமுகவில் ஒற்றைத் தலைமை உடனடி சாத்தியமா?

- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை

பதில்: இது அவர்களைப் பொறுத்தது என்றாலும், அடிநீரோட்டம் டில்லியின் கயிற்றின் பொம்மலாட்டம். முதலில் அதிமுக (ஜெயலலிதா மறைவுக்குப் பின்) சுதந்திரமாக இயங்குகிறதா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!

ஓ.பி.எஸ். பகிரங்கமாக மோடி அழுத்தம் பற்றி - தனது “பூனைக் குட்டியை " வெளியே விட்டிருக்கிறார்.

லேடியை மறந்து மோடியின் அழுத்தத்திற்கு ஆளாகும் கட்சியின் தலைமை ஒற்றையானால் என்ன? இரட்டை யானால் என்ன? பரிதாப நிலையே இது!

- - - - -

கேள்வி:  அதிமுக போலவே ஆதினங்களில் சிலரும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் சென்றுவிட்டனரே?  

- நா.பார்த்திபன், கொளத்தூர்

பதில்: விளைவு தெரியும் அவர்களுக்கு விரைவில்! பொறுத்திருந்து பாருங்கள்.

‘புதிய அடிமைகள்’ பிறகு உணர்ந்து வருவார்கள்!


No comments:

Post a Comment