‘விடுதலை’க்குச் சந்தா சேர்ப்பது முக்கியம்! மிக முக்கியம்!! தந்தை பெரியார் இட்ட கட்டளைக்கான விளக்கம் - அவரே தருவது! கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

‘விடுதலை’க்குச் சந்தா சேர்ப்பது முக்கியம்! மிக முக்கியம்!! தந்தை பெரியார் இட்ட கட்டளைக்கான விளக்கம் - அவரே தருவது! கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’

அருமை வாசகப் பெருமக்களே, இன உணர்வாளர்களே, ‘திராவிட மாடல்' ஆட்சியைக் காக்கும் கவசங்களே!

‘விடுதலை' போன்ற நமது கொள்கை நாளேடு - இல்லந்தோறும் சென்றால்தான் இன எதிரிகளின் கொட்டம் தடுக்கப்பட முடியும்; 

நமது ஆட்சியின் செயல்பாடுகளை மறைத்து, திரித்துக் கூறுவோரின் பொய்யும் புரட்டுமான பிரச்சாரத்தைக் கிழித்துப் பொதுவிடத்தில் தொங்கப்போட முடியும் என்பதை எவ்வளவு அழகாக விளக்குகிறார் தந்தை பெரியார், படியுங்கள் தோழர்களே!

அன்றுள்ள ‘காங்கிரஸ் ஆட்சி' என்பதற்குப் பதிலாக ‘பா.ஜ.க.' என்று போட்டும் ‘ஜஸ்டிஸ் கட்சி' என்ற  சொல் வரும் இடத்தில் ‘தி.மு.க. ஆட்சி' என்றும் சற்று மாற்றிப் போட்டு படித்தாலும் இத்தனை ஆண்டுகளானாலும் இவ்வுண்மை பத்தரை மாற்றுத் தங்கமாக அல்லவா பளபளக்கிறது என்பது புரியும்.

வேண்டுகோள்

"காங்கிரசுக்கு பல பத்திரிகைகள் இருக்கின்றன. அவைகள் பெரிதும் பார்ப்பனர்களாலும் அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகளாலும் நடத்தப்படுகின்றன. பார்ப்பனர்கள் பணமும் காங்கிரஸ் பணமும் அவை களுக்கு தாராளமாய் உதவப்பட்டு வருகிறது.

ஆதலால் பார்ப்பனரின் வஞ்சம், சூழ்ச்சி, பொய் விஷமம் ஆகியவைகளை மனதார மறைத்து அவர்கள் திருப்திக்கும், கூலிக்கும் பார்ப்பனரல்லாதார் கட்சியை யும், சமூகத்தையும், அவர்களுக்காக வேலை செய்யும் பத்திரிகை களையும் வைதும், பழி கூறியும் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றன.

ஜஸ்டிஸ் கட்சித் திட்டத்தைப் பற்றிப் பழி கூறுவதும், அவர்களால் ஏற்பட்ட நன்மைகளை திரித்துக்கூறுவதும், அவர்களுக்கு சம்பந்தமில்லாத காரியத்தைப் பற்றி பழி கூறுவதுமே தொழிலாய்க் கொண்டிருக்கின்றன. பாமர மக்கள் இதையெல்லாம் சுலபமாக நம்பி ஏமாந்து போகிறார்கள்.

ஜஸ்டிஸ் கட்சிக்கும், பார்ப்பனரல்லாதார் சமூக நலனுக்கும் இன்று தினசரிப் பத்திரிகை இல்லை . வாரப் பத்திரிகைகளும் வெகு சிலவே.

ஆதலால் ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார் 'குடி அரசு'' "விடுதலை" "நகர தூதன்" முதலிய பத்திரிகை களை ஜில்லாக்கள் தோறும் தாராளமாய்ப் பரவும்படி செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.

எலக்க்ஷன் போது பணம் செலவு செய்து வெற்றி பெற்றுவிடலாம் என்று தைரியம் கொள்ளுவது 100க்கு 90 ஏமாற்றமாகவே முடியும்.

பிரசாரத்தின் மூலம் நகத்தில் கிள்ளி எறிய வேண்டிய அற்ப விஷயம் பணத்தின் மூலம் கோடாலி போட்டு வெட்ட வேண்டிய அளவு கஷ்டத்தை உண்டாக்கி விடும். ஆங்காங்குள்ள ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களுக்கு பத்திரிகை விஷயங்கள் கொயினா மருந்து போல் தோன்றும். எலக்க்ஷனுக்கு 10 ஆயிரம் 20 ஆயிரம் செலவு செய்வது என்பது 110 டிகிரி உஷ்ண காலத்தில் அய்ஸ்கிரீம் சாப்பிடுவது போல் இருக்கும், தலைவர்களுக்கு இது பிறவிக் குணம்.

ஆதலால் மற்ற பார்ப்பனரல்லாத அபிமானிகளாகிய ஆங்காங் குள்ளவர்கள் தான் இவ்விஷயத்தில் கவலை எடுத்து உழைக்க வேண்டும்.

சந்தா சேர்க்கும் விஷயத்தில் வெட்கமோ தாக்ஷண் ணியமோ பாராமல் அறிமுகமுள்ள ஒவ்வொருவரையும் சந்தா சேர்க்க முயற்சிக்க வேண்டும்.

பார்ப்பனர்கள் பண முடிப்பு என்று பெயர் வைத்துக் கொண்டு 10 ஆயிரம் 20ஆயிரம் ஒரு லக்ஷம் ரூ. கூட சேர்த்து விடுகிறார்கள்.

நாம் அவர்களை பரிகாசம் செய்வதிலும், பழி கூறுவதிலும், கொடுத்தவனை முட்டாள் என்பதிலும் திருப்தி அடைகிறோம்.

நாமும் அதுபோல் பணம் வசூலிக்க இன்று முடியா விட்டாலும், நமது பத்திரிகைகளை படிக்கும்படி கூட செய்யவில்லையானால் நமது சமூகம் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் எப்படி தகுதி உடையதாகும்?

ஆதலால் இந்த டிசம்பர் மாதத்தில் ஒரு 1000 சந்தாதாரர்களாவது உயரும்படி செய்ய வேண்டியது அபிமானிகளின் கடமையாகும்."

(‘குடி அரசு', 15.12.1935)

"வீடுதோறும் ‘விடுதலை', நாடுதோறும், நம் இலட்சிய விளக்கங்கள்" என்பதை செயலில் நாட்ட, ‘விடுதலை' ஏட்டுக்குச் சந்தாக்களை குவியுங்கள்! குவியுங்கள்!! திராவிடத் தேனீக்களே, திசையெட்டும் செல்லுங்கள், திராவிடம் வெல்லும்! 

வரலாறு என்றும் இதைச் சொல்லும்!

No comments:

Post a Comment