அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் கொழுப்பு சிகிச்சை மய்யம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் கொழுப்பு சிகிச்சை மய்யம்

சென்னை, ஜூன் 11- கல்லீரல் கொழுப்பு தினத்தை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 2ஆவது வியாழன் அன்று அனுசரிக்கும் வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடலியல் துறையால் கல்லீரல் கொழுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்நோய் இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான 2ஆவது பொதுவான காரணம் மற்றும் பொது சுகாதார பிரச்சினையாகும். இந்திய மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினருக்கு இந்நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் ரேவதி, இரைப்பை மற்றும் குடலியல் நோய் துறைத் தலைவர் இந்நோயின் தீவிரத்தைப் பற்றியும், உடல் பருமன், நீரிழிவு, ஹைப்பர் லிபிடெமியா போன்ற மாற்றக்கூடிய ஆபத்து காரணிகளைத் தணிப்பதற்கான பல்வேறு உத்திகள், நோய் தடுப்புக்கான பல்வேறு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகளையும் விவரித்தார்.

அண்மையில் இந்நோயின் தாக்கமும், வீரியமும் இந்தியாவில் அதிகரித்து வருவதாலும், நோயின் அறிகுறி வெளியில் தெரியாமலேயே கல்லீரல் செயலிழக்கும் நிலை ஏற்படுவதால் இந்நோயை ஒன்றிய சுகாதார அமைச்சகம் கடந்த ஆண்டு (2021) பிப்ரவரி முதல் தொற்று அல்லாத நோய்களின் கீழ் இணைத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரச் செயலர், முகக்கவசம் அணியாமல் மருத்துவ மனைக்கு வந்த நோயாளிகளுக்கு முகக்கவசங்களை வழங்கினார். மேலும் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், சமூக இடைவெளி மற்றும் கோவிட் (கரோனா) தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு வலியுறுத்தினார். மேலும் முழு உடல் பரிசோதனை மய்யத்தை பார்வையிட்டு, அங்கு பல்வேறு பரிசோதனைகளை செய்து கொண்டு நோயாளிகளுடன் உரையாடினார். அப்போது அவர்கள் அங்கு வழங்கப்படும் சேவைகள் குறித்த தங்களது திருப்தியை வெளிப்படுத்தியதோடு இத்திட்டத்தின் மூலம் குறைவான கட்டணத்தில் அனைத்து பரிசோதனைகளையும் செய்துகொள்ள வழிவகுத்த அரசுக்கு நன்றியையும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் பி.பாலாஜி மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வரவேற்பை பெற்ற  மஞ்சப்பை விற்பனை இயந்திரம் 

 சென்னை, ஜூன் 11  ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரம் மூலம் கடந்த 

6 நாட்களில் 1,000 மஞ்சப்பைகளை பொதுமக்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, ’மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த இயந்திரத்தை அறிமுகம் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து கோயம்பேடு வணிக வளாகத்தில் இந்த இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டது. பொதுமக்கள் ரூ.10 செலுத்தி இயந்திரம் மூலம் மஞ்சப்பையை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடங்கிய 6 நாட்களில் 1,000 மஞ்சப்பைகள் இந்த இயந்திரம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் ப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 45 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

கோவை,ஜூன்11- தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் 45 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. புதிய கடைகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. சில கடைகள் இடமாற்றம் செய்யப்படுகிறது. அதனை அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று கூறினால் அதனை நிறுத்தி விடுகிறோம்.   சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்  மூலம் கோவை மாவட்ட மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் 24 மணி நேர சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மொத்தம் 8,407 அழைப்புகள் வரப்பெற்று 4,637 அழைப்புகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு உள்ளது. மீதமுள்ள புகார்களுக்கும் தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சேவை தொடர்ந்து செயல்படும். 

-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment