இந்தி நுழைகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

இந்தி நுழைகிறது

 தந்தை பெரியார்

செகண்டரிக் கல்விமுறையில் திருத்தம் என்ற பெயரில் 49, 50ஆம் ஆண்டுக்காக என்று சென்னை சர்க்கார் சென்றமாதம் 30ஆம் நாள் வெளியிட்டிருக்கும் திட்டத் தின் வழியாக மீண்டும் சென்னை மாகாணத்தில் இந்தியை நுழைக்கின்றார்கள்.

சென்னை சர்க்கார் செய்திருக்கும் கல்வி மாறுதல்களில் குறிப்பிடக் கூடியவை.

(1) முதல் பாரத்திலிருந்து 3ஆம் பாரம் வரை கைத் தொழிலை அடிப்படையாக வைத்துப் பாடத்திட்டம் வகுத்திருப்பது.

(2) ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய மண்ட லங்களில் இந்துஸ்தானி, சமஸ்கிருதம், அரபு, பாரசீக மொழி அல்லது உருது ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று 2ஆவது மொழியாக கட்டாயமாகப் படிக்க வேண்டிய தாகும். தமிழ் மண்டலத்தில் மட்டும் மாணவர் விரும் பினால் படிக்கக் கூடிய விருப்பப்பாடமாக இருக்கும்.

(3) ஆங்கிலம் 2 ஆம் பாரத்திலிருந்து 6ஆம் பாரம் வரை கற்பிக்கப்படும். இது 3 ஆவது மொழியாக இருக்கும்.

குறிப்பிடத்தகுந்த இந்த மூன்று மாறுதல்களைப் பற்றியும் நம் கருத்து என்ன? என்பதை விளக்க வேண்டு மென்றாலும், இப்போது 2 ஆவது மாறுதலைப்பற்றி மட்டும் அதாவது தமிழ் நாட்டில் விரும்பினால் இந்தி படிக்கலாம், விரும்பாவிட்டால் கட்டாயம் இல்லை; ஆனால் தமிழ்நாடு தவிர்த்த மற்ற பகுதிகளில் கட்டாய மாகப் படிக்க வேண்டும். என்கிற இரட்டை முறை (சின்ன வருணாசிரம முறை)யைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறோம்.

ஆச்சாரியாரின் மந்திரிசபை, வடநாட்டில் யாருக்கோ ஒருவருக்கு வாக்குக் கொடுத்தேன் என்ற சாக்கைக் கூறிச் சென்னை மாகாணத்தில் இந்தியைக் கட்டாய இந்தியாகத் திணித்து ஆயிரக்கணக்கான தாய்மார்களையும், கட்டிளங் காளைகளையும் வெஞ்சிறை (காங்கிரஸ்காரர் புகுந்த சொகுசான சிறையல்ல) புகச் செய்தும், ஈவு இரக்கம் என்பதைச் சுட்டுப் பொசுக்கி விட்ட ஆட்சியாளர்களால், திராவிடத்தின் தனிப் பெருந்தந்தை வெப்பமிகுந்த பெல்லாரிச் சிறையில் தள்ளப்பட்டு, உடல் வாடவும் தாளமுத்து-நடராஜர்களின் பிணங்களைக் கண்டும் வெறி தணியாமல் அற்பாயுளில் ஓடிவிட, அதன்பின் வந்த ஆலோசகர் சர்க்கார் அந்தக் கட்டாய இந்தியை ரத்துச் செய்ததை நாங்கள் மறக்கவில்லை என்பதை இப் போதையச் சென்னைச் சர்க்கார் - ஓமந்தூரார் மந்திரிசபை இந்த உத்தரவால் காட்டிக் கொண்டிருக்கிறது.

எதிர்ப்பிருப்பதை மறக்காத இந்த மந்திரிசபையார், எதிர்கால விஞ்ஞான வாழ்வுக்குக் கொஞ்சமும் பயன் படக்கூடிய நிலையில் இல்லாத, மனிதப் பண்பை விளக் கும் இலக்கியப் பெருமையையுடையது என்றுகூட சொல் லும்படியான நிலையில் இல்லாத, மிகுந்த பிற்போக்குடைய இந்தியை மீண்டும் சென்னை மாகாணத்தில் திணிக்க முன்வந்து விட்டார்கள்.

தமிழ், தெலுங்கு போன்ற தொன்மையும், பண்பாடும் நிறைந்த மொழி மண்டலங்களில், அவ்விரண்டும் அற்ற இந்தியைப் புகுத்த நினைப்பது தவறு! புகுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சி எவ்வளவு பெரியதாயிருந்தாலும், நீண்ட காலம் தொடர்ந்து அந்த முயற்சி நடந்தாலும் திராவிட மண்டலத்தில் அது நிறைவேறாது! கருதுகிற பலன் கைகூடாது என்ற அறிஞரின் வாக்கியத்தை ஆள வந்தார்களுக்கு நாம் நினைப்பூட்டுகிறோம். இக்கருத்தைச் சொல்லுகிறவர் பெரியார் இராமசாமி அல்ல! சர்.கே.வி ரெட்டி நாயுடும் அல்ல! பசுமலைப் பாரதியாரும் அல்ல! ஒரு சென்னை மாகாணத்தவரே அல்ல! வடநாட்டுக்காரர், ஒரு பல்கலைக் கழகத் துணைவேந்தர், அமர்நாத்ஷா என்பதையும் அறிய வேண்டுகிறோம்.

மக்களின் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்ய முடியாத இந்த இந்தியை, இந்தியாவின் பெரும் பகுதியில் பேசினால் புரிந்து கொள்ள முடியும் என்ற காரணத்தையும், வடநாட்டு வியாபாரத்துக்கு வசதியாயிருக்க முடியும் என்ற காரணத்தையும், வடநாட்டுத் தலைவர்களோடு அரசியல் குறித்து அளவளாவ அமைப்புடையது என்ற காரணத்தையும், வேளைக்கு ஒன்றாகக் கூறி வந்த காங்கிரஸ்காரர்களின் உண்மையான நோக்கம், திராவிட நாகரிகம், கலாச்சாரம் ஆகியவைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, திராவிடர்கள் ஆரிய நாகரிகத்தை ஏற்று மானமிழந்து வாழ்வதுடன், வடநாட்டாருக்கு என்றைக் கும் மீளா அடிமைகளாகவே விளங்க வேண்டும் என்பது தான் என்கிற உண்மையைப் பலமுறை நாம் விளக்கி வந்திருக்கின்றோம். இதை நாம் முன்பு கூறியபோது ஒப்புக் கொள்ளாத காங்கிரஸ் மந்திரிகள், இப்பொழுது வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அரசாங்க உத்தியோகங்களுக்கு இந்திப்படிப்பும் ஒரு தகுதி என்கிற அமைச்சர்களின் உண்மையான நோக்கம் என்ன?

உன் நாட்டில் உனக்கு உத்தியோகம் வேண்டுமானால் இந்தியைப் படி! என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, மாகாணத்தின் மற்ற மண்டலங்களில் இந்தியை,  2 ஆவது மொழியை கட்டாயப்படுத்தி விட்டு, தமிழ் மண்டலத்தில் மட்டும் விரும்பினால் படியுங்கள்! விரும்பாவிட்டால் உங்கள் இஷ்டம்! என்கிற இந்தத் திட்டத்தைக் கண்டு திராவிடர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று மந்திரி சபை எதிர்பார்க்க மாட்டாது என்று நம்புகிறோம். ஏன் என்றால் இந்தி இந்த நாட்டில் பரவக்கூடாது என்று கருதுபவர்களின் உண்மையான நோக்கம் என்ன? என்பதை இந்த மந்திரிசபை அறிந்தே இருக்க வேண்டும். இந்தி என்பது வேற்று மொழி - வடநாட்டு மொழி என்கிற துவேஷத் திற்காக இந்நாட்டில் எதிர்ப்பு உண்டாகவில்லை. இந்தியைப் பரப்புவதால் இறந்துபட்ட சமஸ்கிருதத்திற்கு - இந்த நாட்டு மக்களைச் சூத்திரர்களாகவும், தீண்டப் படாதவர்களாகவும், வேசி மக்களாகவும் ஆக்கி வைத்த சமஸ்கிருதத்திற்கு - புத்துயிர் கொடுக்கப்பட்டு, பார்ப்பான் காலைக் கழுவிக் குடிப்பதே மோட்சம் என்று கருதும்படி செய்த பழைய நிலைமை மாறி, பார்ப்பானுக்குப் பிறந்த வர்கள் நாங்கள் என்று சொல்லும்படியான கேவலமான புதிய நிலைமை உண்டாகத்தான் பயன்படுவதாயிருக்க முடியும் என்பதையும், இந்த அனுமானம் காட்சிப் பிரமாணத்தினால் கண்டது என்பதையும், இதுதான் இந்தி பரவக் கூடாது என்பவர்களின் உண்மையான நோக்கம் என்பதையும் அறிந்து கொண்டிருக்கிற மந்திரி சபை - மேலும் இந்தியை எதிர்ப்பவர்களின் நோக்கம் தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், சென்னை மாகாணம் முழு வதுமே இந்தி பரவக்கூடாது என்பதுதான் என்பதை அறிந்து கொண்டிருக்கிற மந்திரி சபை - இந்த இரட்டை ஆட்சி முறையை ஏன் கைக் கொள்ள வேண்டும்? மந்திரிகளின் பொறுப்பற்ற தன்மையை, வஞ்சகமாய்த் தன்னினத்தைக் கழுத்தறுக்கும் கொடுமையை இந் நடவடிக்கை காட்டவில்லையா? என்பதோடு இம்மந்திரி களின் யோக்கியதையைப் பற்றியும் எவருக்கும் சந்தே கத்தைக் கொடுக்காதா? என்றும் கேட்கின்றோம்.

ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய மண்டலங் களில் இந்தி அல்லது இரண்டாவது மொழி, கட்டாயம் என்று மந்திரிசபை சொல்வதிலிருந்து, அந்த மண்டலங் களில் உள்ள மக்களைச் சர்க்கார் எப்படிக் கருதுகிறது? சமஸ்கிருத அடிமைகளான அவர்கள் கட்டாய இந்தியை எதிர்க்க மாட்டார்கள் என்கிற நினைப்போ, கையாலாகாத கயவர்கள் என்கிற கருத்தோதானே இந்த வருணா சிரமத்திற்குக் காரணமாய் இருக்க முடியும்! 

ஒரே இனமான திராவிடர்களை, பிரித்தாளும் சூழ்ச்சியே வெற்றிதரும் என்று கண்ட பார்ப்பனர்களின் பழைய வருணாசிரம முறையை இப்போதும் கைக் கொள்வதுதான் வெற்றியைத் தரும் என்ற வஞ்சகமல்லவா இந்த இரட்டை ஆட்சிக்குக் காரணமாகும்? என்றும் கேட்கின்றோம்.

தமிழ்நாட்டுக்கு இந்தி இஷ்ட பாடம் என்றாலும்கூட இதனுடைய பலன் எப்படியாகும்? இன்றைக்கு ஹைஸ்கூல் களில் தலைமை ஆசிரியர்களாய் இருப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும், காங்கிரஸ்காரர் களாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு அடிபணிந்துதானே ஆகவேண்டும் என்கிற நிலையிலிருப்பவர்களாகவுமே இருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்ட தலைமை ஆசிரியர்கள் இந்தச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்வார்கள்?

படிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு வருகிறது! படிப்புச் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையோ அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் இருக்கிறது! இந்த நிலைமையில் மாணவனுக்கு இடமில்லை என்பதையே பல்லவியாகத் தலைமையாசிரியர்கள் பாடிக் கொண்டு வருகிறார்கள் என்பதைக் கழிந்த பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டு வருகிறோம். பள்ளிக்கூடத்தில் இடமில்லை, படிப்பவன் விரும்பினால் இந்தி படிக்கலாம் என்கிற இந்த நிலைமையைத் தலைமை ஆசிரியர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள்? மாணவனைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்க வந்திருக்கும் கார்டியன், இந்த நெருக்கடியான கட்டத்தில், எப்படியாவது பையன் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து விட வேண்டுமென்று விரும் புவானா? அல்லது இந்தியை வெறுப்பதினால் தன் பையன் படிக்காமலே போகட்டும் என்பதை விரும்புவானா?

100க்கு 90 தற்குறிகளாக இருக்கும் திராவிட மக்களைக் கார்டியனாகப் பெற்றிருக்கும் மாணவர்கள், தலைமை ஆசிரியர் வழியாகக் கட்டாயப்படுத்தப்பட்டு, இந்தி படித்தேயாக வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு தான், பெயரளவில் இந்தி இஷ்ட பாடம் என்று இன்றைய மந்திரிசபை இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

ஆகவே, தமிழ் மண்டலத்தில் இந்தி இஷ்ட பாடம் என்றாலும், உண்மையாய்க் கட்டாய பாடமாகவே ஆகிறது என்பதைத் தமிழ் மக்களும் தெரியாதவர்களல்லர்.

இப்போது தமிழறிஞர்கள் என்று பெயர் படைத் திருக்கிற தமிழ்ப் பெரியார்கள் என்ன செய்யப் போகின் றார்கள்? மற்ற திராவிட மொழிகளின் அறிஞர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? 

இந்தியை வரவேற்றுச் சிந்து பாடமாட்டார்கள் என்பதுறுதி என்றாலும், ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு அஞ்சி வாய்மூடி மவுனிகளாக விளங்குவார்களா? அல்லது திராவிடத்தின் சிதைவுக்குத் திட்டமிட்டுச் செய்யப்படும் இந்தத் தீச் செயலை தீரத்துடன் எதிர்த்து, சென்னை மாகாணத்திலேயே இந்தி நுழையாதபடி எதிர்ப்பு முன்னணியில் நிற்கப் போகிறார்களா?

திராவிடத்தின் மொழியறிஞர்கள்தான் திராவிடத்தின் சீர்கேட்டிற்குக் காரணம் என்றிருக்கும் பழி மறைவதற்கு, அந்த அறிஞர்களுக்குத் தரப்பட்டிருக்கும் கடைசிச் சந்தர்ப்பம் என்றே நாம் உண்மையாய், உறுதியாய் இந்தத் திட்டத்தைக் குறித்து எண்ணுகிறோம்.

திராவிடப் பெருங்குடி மக்களே! உங்கள் நாட்டை ஆளப்போவது இந்தி மொழி! ஆளுகிறவர்கள் வட நாட்டுக் கையாட்கள்! 

ஆட்டி வைப்பவர்கள் வடநாட்டுப் பனியாக் கும்பல்! சுரண்டும் கும்பல் தயாரித்த, உங்கள் சுகவாழ்க்கைக்கு வழிகாணாத, உங்களை மனிதர்களென்றே மதியாத அரசியல் நிர்ணயத்திட்டமே உங்களுக்கிடப்படும் விலங்கு! இருந்து வரும் கொஞ்சநஞ்சம் உரிமைகளுக்கும் வேட்டு வைக்கிறது, எடுத்துவிடப் போகும் வகுப்பு வாரித்திட்டம்! இதனுடைய பொருள் என்ன? 

திராவிடன் வாழ்வதற்குத் திராவிடத்தில் உரிமையில்லை! உரிமையற்ற, ஒடுக்கப்பட்ட மக்களாக, விலங்கு களிலும் கேடாக வாழ்ந்தால் வாழவேண்டும். இன்றேல் வாழ்வா-சாவா என்ற இரண்டிலொன்றை முன் நிறுத்தி எதிர்த்து நிற்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றுதானே இந்தத் திட்டங்களின் பயனாய் இருக்க முடியும். நீங்கள் என்ன முடிவு கட்டுகிறீர்கள்? எதை விரும்புகிறீர்கள்?

'குடிஅரசு' -  துணை தலையங்கம் - 05.06.1948


No comments:

Post a Comment