88 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'விடுதலை' ஏடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

88 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'விடுதலை' ஏடு!

* மானம் பாராது மக்கள் பணியாற்றும் 'விடுதலை'க்கு ஆதரவு தாரீர்!

*'தமிழன் இல்லம்' என்பதற்கு அடையாளம் 'விடுதலை' என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வீடுதோறும் 'விடுதலை' தவழட்டும்; சந்தாக்களை குவித்து 'விடுதலை'யின் இனமானப் பணிக்கு ஏற்றம் தாரீர்!!

தமிழன் நலங்கருதி தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட தமிழர்களின் மான மீட்பு மற்றும் சமூகநீதி ஏடான 'விடுதலை' இன்று (1.6.2022) 88 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ''தமிழர்களின் இல்லம் என்பதற்கு அடையாளம் 'விடுதலை''' என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்; அது மெய்ப்பட தமிழர்களின் ஒவ்வொரு இல்லத்திலும் 'விடுதலை' தவழட்டும் - சந்தாக்களைக் குவிப்பீர் தமிழர்களே என்று, 60 ஆண்டு 'விடுதலை' ஏட்டின் ஆசிரியர் - தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

‘விடுதலை' ஏடு தொடங்கப்பட்டபோது, திராவிடர் இயக்கமான ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' S.I.L.F. (South Indian Liberal Federation) என்ற பெயர் கொண்டிருந்தாலும், வெகுமக்களிடையே ‘ஜஸ்டிஸ் கட்சி' என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் பிரச்சார ஏடாகவே மலர்ந்தது!

அதன் பின்னர் அது தந்தை பெரியாரின் முழுப் பொறுப்பில் வந்ததுபற்றி - ‘குடிஅரசு' வார ஏட்டில் 4.7.1937 இல் எழுதுகிறார்:

தந்தை பெரியார் பேசுகிறார்

(88 ஆம் ஆண்டில் எப்படி பல கட்டங்களைத் தாண்டி, பல கஷ்ட நஷ்டங்கள், அடக்குமுறைகள் - இமாலய எதிர்ப்பு - எல்லாவற்றையும் தாண்டி இன்று திராவிட மக்களின் உரிமைக் குரலாய், ‘விடுதலை'ப் பேரிகையாக முழங்குகிறது என்பதற்கு சற்று நம் வாசகர்களே திரும்பி ‘அரிமா நோக்கு' என்கிறார்களே, அதைப் பார்க்கலாமா?)

‘‘இன்று முதல் 'விடுதலை' காலணா தினசரியாக வெளிவருகிறது. தமிழ் மக்களின் முன்னேற்றத் தையும், மனிதத் தன்மையையும் முக்கியக் கருத்தாகக் கொண்ட ஒரு தினசரி வர்த்தமானத் தமிழ் பத்திரிக்கை வெளியாக்க வேண்டுமென்று கொஞ்ச காலமாகவே கவலைகொண்டு பல வழிகளிலும் முயற்சித்து வந்தேன். 

இதை அறிந்தோ அறியாமலோ தமிழ் மக்கள் பலரும் இப்படிப்பட்ட பத்திரிகையில்லாக் குறைவை எனது கவனக்குறை என்று குற்றம் சாட்டியும், ஊக்கப்படுத்தியும் பல தீர்மானங்களும், வேண்டுகோளும் செய்த வண்ணமாய் இருந் தார்கள். இதுவரை நான் எடுத்து வந்த பல முயற்சிகள் கைகூடாமல் போய் விட்டதானாலும், தமிழ் மக்கள் வாழ்வுக்கே கேடு உண்டாகும் படியான நிலையில் எதிரிகளின் ஆதிக்கம் பலப்படத் தக்க நிலைமை மேலேறிக் கொண்டு வருவதாக காணப்பட்டதாலும், அதற்குப் பெருங் காரணம் ஒரு தமிழ் தினசரி வர்த்தமானப் பத்திரிக்கை இல்லாதது என்று உணர்ந்ததாலும், அதனாலேயே தமிழ்ப் பெருங்குடி மக்கள் பலரும் பயந்து எதிரிகளைத் தஞ்சமடைந்து, மற்ற தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கவும் துணிகிறார்கள் என்றும், நான் உண்மையாய் உணர்ந்ததால் எவ்வளவு நஷ்டமும், தொல்லையும் ஏற்பட்டாலும் சரி, அவற்றை சமாளிக்கத் தமிழ் மக்கள் ஆதரவு கிடைக்கலாம் என்கின்ற நம்பிக்கையின் மீது துணிந்து ஒரு தினசரி தமிழ்ப் பத்திரிகை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டு விட்டேன். இதற்கு ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் பிரமுகர்களும் அனுதாபிகளும் ஆதரவளிப்பதாக வாக்களித்த தால் எனது துணிவு சீக்கிரத்தில் என்னை காரியத்தில் இறக்கி அனுபவத்தில் கொண்டுவர அனுகூலமாக்கி விட்டது.''

(‘குடிஅரசு',  4.7.1937)

மேற்கண்ட அறிவு ஆசான் தந்தை பெரியாரின் எழுத்துகளை அருள்கூர்ந்து ஒரு முறையல்ல; இரண்டு அல்லது மூன்று முறையாவது படித்துப் பார்த்து உள்வாங்குங்கள்.

வேறு எந்த நீண்ட கால எதிர்நீச்சல் போட்ட நாளேட் டுக்கும் இப்படி ஒரு தொடங்கவேண்டிய நோக்க வரலாறும், துணிவையே மூலக் கல்லாகக் கொண்டு வளர்ந்த வரலாறும் உண்டா?

கொள்கை ஏடு வாழ்வது யாருக்காக?

அந்தக் கொள்கை - லட்சியத் தடத்திலேயே மாறாமல் - இடையில் எத்தனை சூறாவளிகளும்,  ‘சுனாமிகளும்' சுழன்று சுழன்று அடித்தாலும், சோர்வறியாது தன் பயணத்தை நடத்தி வரும் கொள்கை ஏடு வாழ்வது யாருக்காக?

இந்த பாருக்காக - உங்களுக்காக - ஒடுக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டோருக்காக!

திராவிட மக்களின் சமத்துவ, சமவாய்ப்பு, சமூகநீதிக் கானப் போரில் வெற்றிக் களத்தை அடைந்து, உண்மை யான சமூக விடுதலை, சமூக மாற்றத்திற்காக எத்தனை விழுப்புண்களை - அடக்குமுறைகளை - மகிழ்ச்சியோடு ஏற்று, ஏறுநடை போடும் ஏடு எமது ‘விடுதலை' நாளேடு!

‘‘திராவிடத்தின் ஏவுகணை!''

‘குளிகை' சிறிது - குணமோ பெரிது!' என்று பாதிக்கப் பட்டோர் - மகிழ்ச்சியுடன் அறியாமை நோயிலிருந்து விடுதலை பெற, நாளும் உறுதியுடன் களத்தில் என்றும் பின்வாங்காது நின்று கருத்துப் போரிடும் ‘‘திராவிடத்தின் ஏவுகணை'' - திக்கெட்டும் இன்றும் பாயத் தவறவில்லை!

அதன் வயது 88 -

முறுக்கும் முடுக்கும் குறையாத

சொடுக்கு ஏற்படுத்தும் சொரணைக்குப்

பஞ்சமில்லை - பாய்ச்சலில் களைப்பில்லை!

அதன் 28 வயதில், நம் அறிவு ஆசான் நம்மை - நம்பி ஒப்படைத்தார்; இன்று 60 ஆண்டுகளாக உழைத்தும், அதன் பயணம் தள்ளாத நடையாக இல்லாமல், வீறு கொண்ட வேங்கைப் பெரும் வெற்றிப் பயணமாகவே அமைந்துள்ளது.

அய்யா என்னை நம்பினார்

நான் வாசகர்களாகிய உங்களை நம்பி,

நன்றி, பாராட்டுபற்றி துளியும் எதிர்பார்க்காத - மானம் பாராத தொண்டிற்கான இலக்கணமாக இந்த மானமிகு நாளேட்டின் பயணம் தொடர்கிறது!

புத்தாக்கப் பொன்னேட்டை இணைத்து வருகிறது!

வளர்ந்த நாடுகளில்கூட இப்படி ஒரு பகுத்தறிவு நாளேடு செல்வாக்குப் பெற்று, அரசுகளை மாற்றிடும் ஆக்க சக்தியுள்ள கருத்துப் போரிடும் ஏடுகளைக் கண்டதில்லை என்று உலகப் பகுத்தறிவாளர்கள் ஒப்புக் கொண்டார்களே, அதைவிடப் பெரிய விருது இவ்வேட்டிற்கு வேறு உண்டா?

‘விடுதலை' என்ற பகுத்தறிவு கலங்கரை வெளிச் சத்துடன் துணை கொண்டதால், திராவிடர் இயக்கம் இன்றும் கொள்கைப் பாசறையாகத் திகழ்ந்து வரலாறு படைத்து வருவதோடு, புத்தாக்கப் பொன்னேட்டை இணைத்து வருகிறது!

‘‘தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை' நாளேடு'' என்ற தவத்திரு குன்றக்குடி அடி களாரின் கூற்றினை செயல்படுத்திக் காட்டிட முன்வாருங்கள்!

பயணங்கள் தொடரும் - லட்சியங்கள் வெல்லும்!!

நன்றி பாராதது எம் பணி!

மானம் பாராதது இவ்வேட்டின் தொண்டு!!

எதிர்ப்பைக் காணாமல் போகச் செய்து

ஏற்றமிகு சாதனை செய்து,

இந்த நாட்டின் வரலாற்றில்

இலட்சியங்களோடு இதோ ஒரு  நாளேடு!

எங்கள் கையில் என்று

பெருமை பெற

வீடுதோறும் ‘விடுதலை'

நாடுதோறும் நலமான மான வாழ்வுக்காக முழங்கி

தேனீக்களாக  ‘விடுதலை'க்காக

சந்தாக்களைக் குவியுங்கள்!

எம் வருமானத்திற்காக அல்ல -

உங்கள் தன்மானத்திற்காக!

இனமான மீட்புக்காக!!

பயணங்கள் தொடரும் - லட்சியங்கள் வெல்லும்!!

தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி, அரவணைக்கும் தோழர்களுக்கும், அன்பர்களுக்கும் - எமது தலை தாழ்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

1.6.2022


No comments:

Post a Comment