700 ஆண்டுகளுக்குப்பின் கேரளாவில் ஒரு மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

700 ஆண்டுகளுக்குப்பின் கேரளாவில் ஒரு மாற்றம்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில்  கக்கட் பகுதியில் உள்ள சிறீ விஷ்ணுமூர்த்தி கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரையும் கோயிலுக்குள் நுழைய அக்கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

கண்ணூர் அருகில் உள்ள மடிகை பஞ்சாயத்தில் உள்ள இந்தக் கோயிலுக்குள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வெளியாள்கள் யாரையும் இதுவரை அனுமதித்ததில்லை.

இந்த நிலையில், கோயிலுக்குள் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களையும், மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களையும் அனுமதிப்பது குறித்து கோயில் நிர்வாகக் குழு விவாதித்தது.

பின்னர் ஒருமித்து முடிவு எட்டப்பட்டதால்,  700 ஆண்டுகால வழக்கத்தை ஒழித்து அனைவரையும் சமமாக நடத்த  முடிவு எடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கோயிலில் நடைபெறும் திருவிழா மற்றும் ‘தெய்யம்’ என்னும் பாரம்பரிய நடன நிகழ்ச்சியைக் காண வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம் என்றாலும், இதுவரை அவர்கள் அந்த கோயில் வளாகத்திற்கு வெளியில் இருந்தபடி தான் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இனி அவர்கள் கோயிலுக்குள் சென்று வழிபட எந்த தடையுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் குலதெய்வ வழிபாடும், குடும்ப கோயில்களின் எண்ணிக்கையும் அதிகம் என்ற போதும்; காசர்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான அளவில் வாழும் இஸ்லாமியர்கள் அவ்வப்போது இங்கு நடைபெறும் திருவிழாக்களில் பங்கேற்பதும், இந்துக் கோயில்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மதம் என்றால் மாண்புக்குரியது - நல் வழிகாட்டும் திசை விளக்கு - ஒழுக்க நெறி முறைகளைப் போதிக்கக் கூடியது என்று சொல்லுவது எல்லாம் உண்மைக்கு மாறானவை.

மனிதர்களுக்குள் பேதப்படுத்துவதும், பிளவை உண்டாக்குவதும், சண்டைச் சச்சரவுகளை  ஏற்படுத்துவதும்தான் மதத்தின் இரத்தவோட்டமாக இருந்து வந்திருக்கிறது.

அதுவும் ஹிந்து மதம் என்னும் சனாதனமதம் என்பது ழுழுக்க முழுக்கப் பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்துவதாகும். ஒரே மதம், ஹிந்து மதம் என்று சொல்லிக் கொள்பவர்களிடத்தில் எத்தனை எத்தனைப் பிரிவுகள் - அடிதடிகள், குத்து வெட்டுகள்!

சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களையே அந்த மதம் சம்பந்தப்பட்ட கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பது எல்லாம் எத்தனைக் கொடுமை!

700 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள மாநிலத்தில் அக்கோயிலில் ஒரு விடிவு காலம் பிறந்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த மாற்றங்கள் பெருகப் பெருக, உயர்ஜாதி பார்ப்பனர்கள் கோயில் - மத விடயங்களில் அக்கறை செலுத்துவது குறைவதை நாடு பார்க்கப் போகிறது. கடவுளாக இருந்தாலும், அதில் ஆதாயம், ஆதிக்கம் தங்களுக்கு இருக் கும் வரைதான் பார்ப்பனர்களின் அக்கறை இருக்கும் - இது கல்லின் மேல் எழுத்து!

No comments:

Post a Comment