ஒன்றிய பாஜக அரசின் தனியார்மய நடவடிக்கையின் சாதனை ரூ.1லட்சம் கோடிக்குமேல் வீழ்ச்சியில் தள்ளப்பட்டுள்ள எல்.அய்.சி. நிறுவனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

ஒன்றிய பாஜக அரசின் தனியார்மய நடவடிக்கையின் சாதனை ரூ.1லட்சம் கோடிக்குமேல் வீழ்ச்சியில் தள்ளப்பட்டுள்ள எல்.அய்.சி. நிறுவனம்

மும்பை,ஜூன்7-  ஒன்றிய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதையே கொள்கை யாகக் கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக் கும் நடவடிக்கைகளை தீவிரப் படுத்தி வருகிறது. 

அனைவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம், படித்த பட்டதாரி களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்றெல்லாம் கவர்ச்சிகர வாக்குறுதிகளை தேர்தல் நேரத்தில் பாஜக அளித்தது. மேலும், மோடி தலைமையிலான அரசு அமைந்தால் குறைந்த ஆளுமை, சிறந்த நிர்வாகம் என்று கூறப்பட்டது. 

ஆண்டுகள் எட்டு உருண் டோடிவிட்டன. மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைமூலம் மக்கள் சோதனைகளையும், வேதனைகளையுமே சந்தித்தனர். 

நாடுமுழுவதும் கட்டமைக்கப் பட்டு சிறப்பாக இயங்கிவருகின்ற இலாபமீட்டும் பொதுத்துறை நிறு வனங்களை ஒன்றிய பாஜக அரசு தனியாருக்கு 'தாரை' வார்த்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனம் தனி யாருக்கு 'தாரை'வார்க்கப்படும் போது, ஏற்கெனவே பணியாற்றி வரும் தொழிலாளர்கள், ஊழியர் களின் பணிப்பாதுகாப்பு கேள்விக் குரியதாகிவிடுகிறது. மேலும், சமூக நீதி அடிப்படையிலான வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுகின்ற ஆபத்து ஏற்படுகிறது.

காலம் காலமாக கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கான வாய்ப்புகள் நீண்ட கால தொடர் போராட் டங்களின் விளைவாக இடஒதுக்கீடு, சமூக நீதி பொதுத்துறை நிறுவனங் களில் கிடைத்து வருகிறது. அதிலும் முழுமையாக கிடைக்க போராடும் நிலையே தொடர்ந்துகொண்டி ருக்கிறது.

எல்லாருக்கும் எல்லாம் என்கிற சமூகநீதிக்கு புறம்பாக சமூக அநீதி இழைக்கின்ற ஆர்.எஸ்.எஸ். வழி யில் பாஜக செயல்பட்டு,  பொதுத் துறை நிறுவனங்களையே இல் லாமல் செய்யும் பாஜகவின் போக்கு வருணாசிரம, மனுதர்ம அடிப் படைகளையே மீண்டும்  திணிப்ப தாகவே அமைகிறது.

அந்த வகையில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகள் விற்பனையை பாஜக அரசு தொடங்கி விட்டது. ஏற்கெனவே சரிவு கண்டு வரும் எல்அய்சி நிறுவனத்தின் பங்குகள் திங்களன்று (6.6.2022) மேலும் சரிவு கண்டது. இதன் மூலம் எல்அய்சி யின் சந்தை மூலதனம் பங்கு வெளியீட்டின் போது ரூ.6,00,242 கோடியாக இருந்த நிலையில் அது சரிவடைந்து ரூ.4.98 லட்சம் கோடியாக சரிந்தது.  

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறு வனமான எல்அய்சி நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு மே 4-ஆம் தேதி தொடங்கி மே 9 தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு  வெளியிடப்பட்டது. மொத் தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டு பங்குச்சந்தைகளில் பட்டியலிடப் பட்டன. 

முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்அய்சி ஒரு பங்கு ரூ.949 ஆக  நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 8 விழுக்காடு விலை  குறைந்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. அதன் பிறகு தொடர்ந்து எல்அய்சி பங்குகள் சரிவு கண்டே வந்தது. வெளியீட்டு விலையை தொடரவில்லை. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 18 விழுக்காடு சரிந்து ரூ.2,409 கோடியாக இருந்தது. 

இதனால் பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கு 1.50 ரூபாய் ஈவுத் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன் பிறகு எல்அய்சி பங்குகள் மதிப்பு சரிவ டைந்து வருகிறது. இந்தநிலையில் எல்அய்சி பங்குகள் நேற்று (6.6.2022) பட்டியலிடப்பட்ட விலையில் இருந்து 15 விழுக்காடு குறைந்துள்ளது. பட்டியலிடப் பட்டபோது, அதன் சந்தை மூல தனம் கிட்டத்தட்ட 8 விழுக்காடு சரிந்ததால் எல்அய்சி மதிப்பில் ரூ.46,500 கோடியை இழந்தது. அதன்பிறகு பங்குகள் மீளவில்லை. எல்அய்சி பங்கு நேற்று மேலும் சரிவடைந்து 779.30 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய விலை ஒப்பிடுகையில் 2.72 விழுக் காடு குறைந்துள்ளது. இதன் மூலம் சந்தை மூலதனத்தின் மதிப்பு முதல்முறையாக ரூ.5 லட்சம் கோடிக்கு கீழே குறைந்துள்ளது. எல்அய்சியின் சந்தை மூலதனம் ரூ.4.98 லட்சம் கோடியாக சரிந்தது.  

No comments:

Post a Comment