ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 28, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 :  தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக உள்ளது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால், சென்னையில் மின் தடை அடிக்கடி ஏற்படுகிறதே?

- .சுகந்த், கோவில்பட்டி

பதில்: நடுவில் நிலக்கரி பற்றாக்குறை, சில மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட தடங்கல் - சிற்சில கோளாறுகள் காரணமாக இருக்கலாம். இதுபற்றிய விளக்கத்தை மக்களுக்கு விளங்கும் வகையில் மின்சாரத்துறை அமைச்சர் கூறுவார் என்று நம்புகிறோம்.

-----------

கேள்வி 2 : பஞ்சாப் மாநிலத்தில் அரசு திட்டங்களுக்கு கமிஷன் கேட்ட அமைச்சரை பதவி நீக்கம் செய்ததோடு, கைதும் செய்யப்பட்டிருக்கிறாரே?

- மு.சம்பந்தன், திருக்கழுக்குன்றம்

பதில்: இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் வர வேற்கப்பட வேண்டும். உடனடி நடவடிக்கைகள்தான் ஆளுமைத் தூய்மையை உறுதிப்படுத்தக்கூடும்

--------

கேள்வி 3 : கரோனா கொடுந்தொற்று காலத்திற்குப் பிறகு - இரண்டு ஆண்டுகள் கழித்து - தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கோவில் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறுகிறதே, இது எதைக் காட்டுகிறது?

- .முருகன், சோளிங்கர்

பதில்: கடவுள்களுக்கும், கரோனா கண்டு கதி கலங்கி முடங்கியவர்களுக்கும் இது விடுதலை - இல்லை - ‘பரோல்அல்லவா? எனவே தான் கொண்டாடுகிறார்கள் போலும்!

--------

கேள்வி 4:  காங்கிரஸ் பேரியக்கத்தில் நீண்ட காலமாக இருந்த கபில்சிபல், அக்கட்சியிலிருந்து விலகியிருப்பது குறித்து?

- கு.குபேந்திரன், குடியாத்தம்

பதில்: பதவிப் பசி மனிதர்களை எவ்வளவு நன்றி மறந்தவர்களாக்கும் என்பதற்கும், எப்போதும் பதவி மூலமே அரசியல் செய்ய வெளிச்சம் தேட விழையும் பலவீனத்திற்கும் நல்ல எடுத்துக் காட்டான - ‘சமய சஞ்சீவிகள்!’

--------

கேள்வி 5: அமெரிக்கா ஒரு வல்லரசாக இருந்தாலும், வன்முறை வெறியாட்டங்களை (துப்பாக்கிச் சூடு கலாச்சாரங்களை) கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறதே?

- கே.சுடலை, சேலம்

பதில்: இது பற்றிய நமது அறிக்கையை 26.5.2022 “விடுதலையில் காண்க!

--------

கேள்வி 6: ஒன்றிய அரசு பெட்ரோல் விலையைக் குறைத்துவிட்டது என்று பா...வினர் தம்பட்டம் அடிப்பதுபற்றி....?

- .செல்வராஜ், சென்னை

பதில்: முன்பு எத்தனையோ முறை விலையேற்றி ஒன்றிய அரசின் கஜானாவில் எத்தனை லட்சம் கோடி, ஏழை எளியவர்களை கசக்கிப் பிழிந்து வசூலித்து விட்டதில் ஒரு சிறு அளவு குறைப்பு - “ஒட்டகம் சுமையிலிருந்து சிறிது எடுத்த கதைபோல!

--------

கேள்வி 7 :  மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்ததால் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு லாபமா?

- பா.சிவக்கொழுந்து, சென்னை

பதில்: இதுபற்றிய விரிவான அறிக்கை, காரண காரிய விளக்கம் - ‘விடுதலையில் (தேதி: 25.05.2022) வெளிவந்துள்ளதே! படிக்கவில்லையானால் தேடிப்படித்தால் முழு விடை கிடைக்கும்!

--------

கேள்வி 8 :  தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்கள்பற்றி தங்களின் கருத்து?

- கா.வேல்வேந்தன், சிதம்பரம்

பதில்: நாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்தும் வசூலிக்கப்படும் நிதியினை அளிக்கும் மாநில அரசுகள் - அந்த மாநிலங்கள் வளர்ச்சிக்குத் தீட்டும் திட்டங்களே இவை! அவரது கடமையைச் செய்துள்ளார்! இதில் பாரபட்சம் இன்றி செய்தால் அவர் பணி பாராட்டப்படும். நமது முதல் அமைச்சர் எடுத்து வைத்த 5 கோரிக்கைகள் எதற்கும்பதில்அளிக்கவில்லையே - அதுதான் நெருடலாக உள்ளது. “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் அப்போதுதானே காதினிலே உண்மையாகப் பாயும்” - இல்லையே?

--------

கேள்வி 9:  கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது; அது இப்பொழுது இல்லையே, ஏன்?

 - .ஆனந்த், கள்ளக்குறிச்சி

பதில்: அது வருகையின் நோக்கத்தையும், சூழ்நிலையும் பொருத்தது. “எதிர்ப்பு - எதிர்க்க வேண்டுமென்பதற்கான வெற்று எதிர்ப்பாக இருக்கக் கூடாதுஎன்ற தத்துவ உண்மை வெளிச்சமிருக்கிறது என்றாலும், கோரிக்கைகளை அலட்சியப்படுத்தினால் - அது அமைதியான எதிர்ப்பிற்கே வழிகோலும் என்பதை எவரே மறுக்க முடியும்!

கேள்வி 10: ஒன்றிய அரசு வேலை வாய்ப்பில், தமிழ் மொழிக்கு இடமின்றி தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனரே?

- பே.பாலு, திருச்சி

பதில்: அதனை அரசுகளின் கவனத்திற்கும், உடனடி செயலுக்கும் கொண்டு  செல்லவே நமது போராட்டங்கள் நடைபெற்றன.

No comments:

Post a Comment