சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்புவது இரண்டையும் தவிர தாமதப்படுத்துவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்புவது இரண்டையும் தவிர தாமதப்படுத்துவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை

பி.டி. ட்டி சாரி

மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் இன்றி செயல்பட வேண்டிய அரசமைப்புச் சட்டப் படியான கடமை ஆளுநருக்கு உள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மோதலை நாடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது என்பது வழக்கமான சாதாரண அரசமைப்புச் சட்டப்படியான கடமையும் நடைமுறையும் ஆகும். ஆனால், அண்மைக்காலமாக, அது போன்ற சாதாரணமான வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்வதுகூட மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதலை உருவாக்குவதற்கான ஒரு வழியாகவே ஆகிவிட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் மற்றும் அரசமைப்பு சட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் மிகப் பெரிய அளவிலான மன வேதனையை அளிக்கும் வகையில் நிச்சயமான ஒரு மாதிரியில் சில குறிப்பிட்ட மாநில ஆளுநர்கள் நடந்துகொண்டு வருகிறார்கள்.

உச்சநீதிமன்றம் உறுதி

அமைச்சர்களின் ஆலோசனையின்படி மாநிலங்களில் அவ்வப்போது உருவாகி விடும் அரசியல் நிர்வாக விவகாரங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் மற்றும் எதிர் வினைகளின் முக்கியத்துவத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள நிலைபற்றி அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக இன்றியமையாதது ஆகும். ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர், அதாவது, ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவர் ஆவார். அரசமைப்பு சட்டத்தின் 154(1) பிரிவின்படி மாநில ஆளுநர்களுக்கு நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அரசமைப்பு சட்டப்படிதான் அந்த அதிகாரங்களை அவர்களால் செலுத்த முடியும். வேறு சொற்களில் கூறுவதானால், அமைச்சரவையின் முடிவுகள் மற்றும் ஆலோசனைகளின்படி மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும் என்று கூறலாம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்து ஆளுநர்களுக்கு 1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் அளிக்கப்பட்டிருந்த அதிகாரங்களில் இருந்து பெரிய அளவில் எந்த மாறுதலும் இல்லை என்றாலும்கூட ஆளுநர் என்பவர் ஒரு வெறும் அரசமைப்புச் சட்டப்படியான தலைவர் மட்டுமே என்பதும் மாநில அரசுகளின் நிர்வாக அதிகாரத்தை அமைச்சரவையாலேயே செலுத்த முடியும் என்பதும் நிலை நிறுத்தப்பட்ட அரசமைப்பு சட்ட நிலைப்பாடாகும். ஷம்ஷிர் சிங்குக்கும் பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையே 1974இல் நடைபெற்ற வழக்கில், இந்த நிலைப்பாட்டை கீழ்வரும் சொற்களில் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகவே உறுதிப்படுத்தியுள்ளது.

"அரசமைப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அனைத்து நிர்வாக அதிகாரம் மற்றும் இதர அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் அந்த சட்டப் பிரிவுகளில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அதாவது முறையான அரசமைப்பு சட்ட அதிகாரங்களை அமைச்சரவையின் முடிவு மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்த முடியும் (நன்கு அறியப்பட்டுள்ள ஒருசில வழக்குகள் நீங்கலாக) என்பதே நமது அரசமைப்பு சட்டத்தின் இந்த சட்டப் பிரிவு என்று நாங்கள் அறிவிக்கிறோம்"

அரசமைப்பு சட்டத்தில் ஆளுநர்களின் நிலையை விளக்கிய டாக்டர் அம்பேத்கர், கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார். "ஆளுநர்கள் தாங்களே செயல்படுத்தவேண்டிய அரசமைப்பு சட்டப்படியான செயல்பாடுகள் என்று எதுவும் தனியாக இல்லை. எந்தசெயல்பாடுகளுமே இல்லை" இந்த நிலைப்பாட்டை சர்க்காரியா ஆணையம் தனது அறிக்கையில் கீழ்க்கண்டவாறு மீண்டும் திரும்பவும் எடுத்துக் கூறியுள்ளது.

"சட்டமன்றத்தின் நம்பிக்கையை அமைச்சரவை பெற்றிருக்கும் வரை, இத்தகைய விவகாரங்களில் அமைச்சரவையின் ஆலோசனைப் படியே ஆளுநர் செயலாற்ற வேண்டும் என்பதும் அதற்குக் கட்டுப்பட்டவரே ஆளுநர் என்பதும் - நன்கு அங்கீகரிக்கப்பட்ட கொள்கையாகும். 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற நயம் ரெபியா வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, மேலே  குறிப்பிடப்பட்டுள்ள நமது அரசமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் அதிகாரம் பற்றிய நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி தீர்ப்பு அளித்துள்ளது.

செல்வதற்கு உள்ள பாதை

சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 'நீட்' விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப் பட்டு இரண்டு மாத காலம் கடந்தபிறகும்கூட அதுபற்றி முடிவெடுக்காமல் உள்ள ஆளுநரின் கண்ணோட்டத்தைப் பற்றி நமது வாசகர்கள் அறிந்து கொள்வதற்காகவே இந்த பகுத்தாய்வு இந்த இடத்தில் அளிக்கப்பட்டுள்ளது  என்று கூறலாம்.

சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசமைப்பு சட்டப்படி ஆளுநர் செயல்படுவதற்கு இருக்கக் கூடிய வாய்ப்புகள் என்ன என்று பார்ப்போம். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிறகு ஒரு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது அதுபற்றி செயல்படுவதற்கு உள்ள நான்கு வேறுபட்ட வழிகளை அரசமைப்பு சட்ட 200ஆவது பிரிவு தெரிவித்துள்ளது. ஒரு மசோதா சட்டமாக ஆக வேண்டுமென்றால், அதற்கு குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் ஒப்புதல் தேவை. ஆளுநர் நேரடியாகவே தனது ஒப்புதலை அளிக்கலாம் அல்லது ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்துக் கொள்ளலாம். குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கு ஒதுக்கி வைக்கவும் செய்யலாம். அத்தகைய வழக்குகளில் குடியரசுத் தலைவர் அந்த மசோதாவுக்கான ஒப்புதலை அளிக்கலாம் அல்லது அளிக்காமல் நிறுத்தியும் வைக்கலாம். 

இவை தவிர எஞ்சியுள்ள நான்காவது வழியாக இந்த மசோதாவையோ அல்லது மசோதாவின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு விதிபற்றியோ  மறுபரிசீலனை செய்யும்படி கேட்டு ஆளுநர் அந்த மசோதாவை சட்டமன்றத்திற்க்கே திருப்பி அனுப்பலாம். ஆளுநரிடமிருந்து அத்தகைய தகவல் வந்தவுடன், அவரது பரிந்துரைகள்படி மசோதாவை சட்டமன்றம் விரைவில் மறுபரிசீலனை செய்துமுடிவெடுக்க வேண்டும் என்றாலும் கூட ஆளுநரால் தெரிவிக்கப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளாமலேயும்கூட, அந்த மசோதாவை சட்டமன்றம் மறுபடியும் நிறைவேற்றி ஆளுநருக்கு திரும்பவும் அனுப்பினால், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு அரசமைப்பு சட்டப்படி ஆளுநர் கடமைப்பட்டவர் ஆவார்.

சட்டமன்றத்தால் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 'நீட்' மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படிகேட்டு ஆளுநர் அந்த மசோதாவை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பினார்.

அதன்படி பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத் தொடரில் மறுபடியும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக சட்டமன்றம் அனுப்பி வைத்தது. ஆனால் அந்த மசோதாவுக்கு இது வரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஒரு தவறான கண்ணோட்டம் 

இதற்கிடையில், நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஆளுநருக்கு எந்தவித காலக் கெடுவும் அரசமைப்பு சட்டத்தில் நிர்ணயிக்கப்படவில்லை என்று ராஜ்பவன் வட்டாரங்கள் சில தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இதுதான் இந்தப் பிரச்சினையின் மய்யமாக இருப்பதாகும். அரசமைப்பு சட்டம் ஆளுநர் செயல்படுவதற்கு எந்த காலக் கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்பதால்; தான் முடிவெடுப்பதை ஆளுநர் கால வரையறையின்றி தள்ளி வைக்கலாம் என்று இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம் என்று கூறத் தேவையில்லை.

அரசமைப்பு சட்ட 200ஆவது பிரிவின்கீழ் ஆளுநர் முடிவெடுப்பதற்கு காலக் கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மையே ஆனாலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆளுநர் முடிவெடுப்பது தவிர்க்க முடியாததாகும். அரசமைப்பு சட்டப் பிரிவில் காலக் கெடு குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஆதாயம் எடுத்துக் கொண்டு ஒரு அரசமைப்பு சட்ட அதிகாரியான ஆளுநர் தனது அரசமைப்பு சட்டக் கடமையை  ஆற்றாமல் தவிர்க்க இயலாது. அரசமைப்பு சட்ட 200ஆவது பிரிவு ஆளுநருக்கு அளித்திருக்கும் வாய்ப்பு கால தாமதமின்றி ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதுதான். சரியானதொரு முடிவு மேற்கொள்வதற்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு கூறும் சந்தர்ப்பம் சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.  அடுத்தபடியாக ஆளுநர் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கூட இந்த அரசமைப்பு சட்ட 200ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சட்ட மசோதா சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டவுடன் அது ஆளுநரின் ஒப்புதலுக்காக உடனே அனுப்பி வைக்கப்படுகிறது. அடுத்த நடவடிக்கையை ஆளுநர் எப்போது மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசமைப்பு சட்ட 200ஆவது பிரிவு கூறாவிட்டாலும் கூட, அவர் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும் என்பதை எந்தவித குழப்பமும் இன்றி மிகத் தெளிவாக அது கூறியிருக்கிறது. இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றின்படி ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், அரசமைப்பு சட்டப்படி அவர் செயல்படவில்லை என்பது மிகவும் நன்றாகவே தெரிய வரும். இதன் காரணமே ஆளுநர் செயல்படாமல் இருப்பதற்கான வாய்ப்பையே இந்த அரசமைப்பு சட்டப்பிரிவு அளித்திருக்கவில்லை என்பதுதான்.

ஆனால், சட்டமன்றம் அந்த மசோதாவை மறு படியும் ஒரு முறை நிறைவேற்றி அனுப்பப்பட்டிருப் பதன் மீது முடிவெடுக்காமல் இருப்பது அரசமைப்பு சட்டப்படி அனுமதிக்க முடியாதது ஆகும்.

காலக்கெடு இல்லாதது ஏன்?

ஆளுநரின் பரிந்துரைப்படி சட்டமன்றம் அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்து மறுபடியும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது, அதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு ஆளுநர் முடிவெடுக்காமல் இருக்கக் கூடாது என்று அரசமைப்புச் சட்ட 200ஆவது பிரிவு (உபவிதி) தெரிவிக்கிறது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால வரையறை இல்லாமலும், அரசமைப்பு சட்டம் காலக்கெடு நிர்ணயிக்காமல் போனதை தனக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக் கொண்டும், அதனைத் தனது தொடைகளின் கீழே போட்டுக் கொண்டு ஆளுநர் உட்கார்ந்திருக்கும் நிலை ஒன்று ஏற்படும் என்பதை நமது அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால்தான் அத்தகைய காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

உண்மையைக் கூறுவதானால், அரசமைப்பு சட்ட 200ஆம் பிரிவில் கீழ் குறிப்பிடப்பட்ட சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. "நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் அந்த மசோதாவுக்கான ஒப்புதலை அளிக்க வேண்டும்..." அவ்வாறு நிறைவேற்றப்பட்டு அளிக்கப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை அரசமைப்புச் சட்டம் சுட்டிக் காட்டுவதாகவே இச்சொற்கள் அமைந்துள்ளன. இதற்கான காரணம் மிக நன்றாக தெரிவதே ஆகும். ஒரு மசோதாவை சட்டமன்றம் நிறைவேற்றுவதன் காரணம் அந்த மசோதாவுக்கான அவசர தேவை இருக்கிறது என்பதுதான். ஆனால், ஆளுநர் அவ்வாறு ஒப்புதல் அளிக்காவிட்டால், சட்டமன்றத்தின் விருப்பம் நிறைவேறாமல் அதற்கு சோர்வும் வெறுப்பும் ஏற்படுத்துவதாக ஆகி விடுகிறது. ஒரு மசோதாவின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட சட்டமன்றத்தின் விருப்பத்தை நிறைவேற்றாமல் அதற்கு சோர்வையும், வெறுப்பையும் ஏற்படுத்துவது அரசமைப்பு சட்டத்தின் கொள்கை அல்ல. எனவே அரசமைப்பு சட்ட 200ஆவது பிரிவு உபவிதியின் கண்ணோட்டத்தில், மறுபரிசீலனை ªய்த பிறகு அனுப்பப்பட்ட மசோதா விற்கு ஒப்புதல் அளிக்காமல் அதன்மீது ஆளுநர் உட்கார்ந்து இருப்பதை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சட்டமன்றத்தினால் நிறைவேற்றப் பட்ட ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது என்பது சட்டமன்ற நடைமுறையின் ஒரு பகுதியே அன்றி, நிர்வாக அதிகாரத்தின் ஒரு பகுதியாக இருப்பது அல்ல. ஆனால், நிச்சயமான வழிமுறைகளை அரசமைப்பு சட்டம் ஏற்படுத்தித் தந்திருப்பது, அந்த வழிகளில் ஏதேனும் ஒன்றின்படி ஆளுநர் செயல்பட வேண்டிய செயல்பாட்டை அரசமைப்புச் சட்டம் அவரது கடமையாக ஆக்கி விட்டது. ஒப்புதல் தராமல் நிறுத்தி வைப்பது ஆளுநருக்கு உள்ள வழிகளில் ஒன்று என்ற போதிலும், அவ்வாறு ஆளுநர்கள் சாதாரணமாக செயல்படுவதில்லை. அதன் காரணம் அது வெகுஜன ஆதரவு அற்ற ஒரு நடவடிக்கையாகவே இருக்கும் என்பதுதான். மேலும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்திருப்பது என்பது மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஒட்டு மொத்த சட்டமன்ற நடவடிக்கைகளையே பயனற்றதாக ஆக்கி விடும். அவ்வாறு செய்வது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்பதுடன், மிகவும் முக்கியமாக கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதும் ஆகும் என்றே இக்கட்டுரையாளர் கருதுகிறார். இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஒரு மசோதாவுக்கு மன்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகவே கருதப்படுகிறது. அதே போல ஆஸ்திரேலியாவிலும் மசோதா ஒன்றுக்கு மன்னர் ஒப்புதல் தர மறுப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகவே கருதப்படுகிறது.

நமது அரசமைப்புச் சட்ட நடைமுறையில் குடியரசுத் தலைவரோ ஆளுநர்களோ தங்களின் செயல்பாடுகளுக்காக தனிப்பட்ட முறையில் பொறுப்பாளர்கள் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகும். தங்கள் அதிகாரங்களை செலுத்துவதிலும் கடமைகளை நிறைவேற்றுவதிலும், எந்த ஒரு  காரணத்துக்காகவும் எந்த ஒரு நீதிமன்றத்திற்கும் குடியரசுத் தலைவரோ ஆளுநர்களோ பதில் சொல்லத் தேவை இல்லை என்று அரசமைப்பு சட்ட 361 ஆவது பிரிவு கூறுகிறது. ஆனால், ஒப்புதலுக்காக தன் முன் வைக்கப்படும் மசோதாமீது எந்த ஒரு முடிவையும் ஆளுநர் எடுக்காமல் இருக்கும்போது, அவருக்கு அளிக்கப்பட்ட கடமைகளை ஆற்றுவதில் இருந்து அவர் தவறி விட்டார் என்றே கூற வேண்டும்.

நன்றி 'தி இந்து' 4.5.2022

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment