தமிழர் தலைவர் தலைமையில் புறப்பட்டது காண் இந்தி எழுத்து அழிப்புப் பட்டாளம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

தமிழர் தலைவர் தலைமையில் புறப்பட்டது காண் இந்தி எழுத்து அழிப்புப் பட்டாளம்

தார் டின்னையும், பிரஷையும் கழகத் தலைவரிடம் அளித்து வாழ்த்தி 

வழி அனுப்பினார் சி.பி.அய். தமிழ் மாநில செயலாளர் தோழர்  முத்தரசன்

சென்னை, மே 2 - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்கள் தலைமையில் பெருந்திரளான கழகத் தோழர்கள் 30.4.2022 அன்று எழுச்சியுடன் நடைபெற்ற ஹிந்தி அழிப்புப்போராட்டத்தில் பங்கேற்று கைதாயினர்.

 நீட் எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் மீட்புப்பரப்புரைப் பெரும்பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நாகர்கோயிலில் 3.4.2022 அன்று தொடங்கி  சென்னையில் நிறைவு நாள் சிறப்புப்பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் 25.4.2022 அன்று நடைபெற்றது. நிறைவு நாள் சிறப்புப்பொதுக்கூட்டத்தில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பித்தார். 21 நாள்கள் மேற்கொண்ட பரப்புரைப் பயணத்தின்போது திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக ஹிந்தி அழிப்புப்போராட்டம் 30.4.2022 அன்று நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதுமிருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தனி வாகனங்கள்மூலமும், ரயில்மூலமும் கழகத் தோழர்கள் சென்னையில் குவிந்தனர். 

தமிழர் தலைவர் கட்டளையையேற்று சிறைசெல்லத் தயாராக பெருந்திரளானவர்கள்  ஹிந்தி அழிப்புப் போராட் டத்தில் பங்கேற்றனர்.

சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியாரின் 21 அடி உயர முழு உருவச்சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் ஹிந்தி அழிப்புப் போராட்டத்துக்கு தம்முடைய ஆதரவையும், வாழ்த்தையும் தெரிவித்து உரையாற்றினார். பின்னர் தார்ச் சட்டியையும், பிரஷையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களிடம் கொடுத்து ஹிந்தி அழிப்புப்போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஹிந்தி அழிப்புப் போராட்டத்திற்கு தமிழர் தலைவர் உள்ளிட்ட அனைவரையும் தோழர் இரா.முத்தரசன் வழியனுப்பி வைத்தார். உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தமிழர் தலைவர் தலைமை யில் திராவிடர் கழகத்தின் ஹிந்தி அழிப்புப் போராட்டம் நடைபெறுகின்ற தகவல் அறிந்து, மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமாகிய ராம் பகட்டி போராட்டத்தில் தமிழர் தலைவருடன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையைத் தொடர்ந்து எழுச்சி முழக்கமிட்டார். தோழர்கள் அனைவரும் அவரைத் தொடர்ந்து முழக்க மிட்டனர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஹிந்தி அழிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாநில, மண்டல, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழகத்தினர், மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள், பெரியார் பிஞ்சுகள் உள்ளிட்ட அனைவரும் பெரியார் திடலிலிருந்து முழக்க மிட்டபடி ஊர்வலமாக சென்னை எழும்பூர் ரயில் நிலை யத்தை நோக்கிச் சென்றனர்.

ஹிந்தி அழிப்புப்போராட்ட ஊர்வலம் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, காந்தி இர்வின் சாலை வழியாக சென்று, ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்கச் சென்றபொழுது, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அருகே, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் தோழர்கள்  கைது செய்யப்பட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், வழக்குரைஞரணித் தலை வர் த.வீரசேகரன், அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.ஜெயராமன், வழக்குரைஞர் கே.பாலசுப்பிரமணியன், ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றிசெல்வி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி,  அமைப்பாளர் குடியாத்தம் தேன்மொழி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் ஹிந்தி அழிப்புப்போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள். எழும்பூர் சிந்துசதன் கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். 

மாலை 6 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment